Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

ஆராய்ச்சி நூல்கள் - பாகம் 2
நாவலர் சோமசுந்தர பாரதியார்

ArAicci nUlkaL - part 2
of nAvalar cOmacuntara pAratiyAr
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Kumar Mallikarjunan, Blacksburg, VA, USA for providing a scanned image/PDF version of this work for the etext preparation.
This etext has been produced via Distributed Proof-reading Implementation and
we thank the following volunteers for their assistance:
Arvind Sridhar, T Chockalingam, V. Devarajan, Sakthikumaran, R. Kameswaran,
Perumal, Mithra, M. K. Saravanan, Nalini Karthikeyan, R. Navaneethakrishnan,
Vijayalakshmi Periapoilan, Sankarasadasivan and Thamizhagazhvan,
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2013.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/


நாவலர் சோமசுந்தர பாரதியார் - ஆராய்ச்சி நூல்கள்
    பாகம் 11. திருவள்ளுவர் 2. தசரதன் குறையும் கைகேயி நிறையும்
    பாகம் 2 3. சேரர் தாய முறை 4. சேரர் பேரூர்

ஆராய்ச்சி நூல்கள் - பாகம் 2
நாவலர் சோமசுந்தர பாரதியார்

3. சேரர் தாய முறை
பகுதி 1. முன்னுரை


கழிந்த ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாகக் கேரளத்திற் பல வகுப்பார் பெண்வழியில் மருமக்கட்டாயமுறை பேணுவதைக் காணுகின்றோம். நாம் அறிய இவ்வழக்கம் நாயர் பெருமக்களிடம் மட்டுமில்லை; தென்திருவாங்கூரில் நாஞ்சில் நாட்டு வேளாளர்முதல் வடமலையாளத்தில் மகம்மதிய மாப்பிள்ளைமாரும், பொய்யானூர்க்கூற்றத்துப் பார்ப்பன நம்பூரிகளும், தென்கன்னடத் தொன் மக்கள் பலரும், துளுவர் கொங்கணர் சிலரும் இத்தாய் வழித்தாய முறையையே நெடுநாளாகக் கையாண்டு வருகின்றனர். இவ் வழக்கமுடையாரெல்லாரும் குடமலைக்கு மேற்கே பண்டைச் சேரநாட்டின் பகுதிகளான மேலைக்கடற்கரை நாடுகளிலே இருப்பதாகவும் அறிகின்றோம். பார்போசா. சோனரத்து முதலிய ஐரோப்பிய யாத்திரிகர் மேலமலைத்தொடருக்கு மேற்குநிலமக்கள் பலர் தம்முள் பிறிதிடத்திற் காணரிய இப்பெண்வழித் தாயம் பெரிதும் வழங்கப்பெறுவதைக் கவனித்துத் தம் யாத்திரைக் குறிப்பபுக்களில் இவ்வதிசயச் செய்தியை எழுதியிருக்கின்றனர்.

இக்கேரள வழக்கத்தை நாம் அறிவோம். எனினும், இது புதிதாகக் குடபுலத்தில் எப்படியோ வந்தேறி நடக்கும் ஒரு இடைக்கால வழக்கமெனக்கொண்டு வாளா அமைகின்றோம். சேரநாடு தமிழகத்தின் பகுதியென்றும், சேரர்பரம்பரையிலும் மற்றைத் தமிழ்வேந்தர் குடிமரபாம் மக்கட்டாயமே பண்டைநாளில் அடிப்பட்ட பழ வழக்காய் ஆட்சிபெற்றிருந்ததென்றும் நாம் நம்புகின்றோம். எப்படியானாலும் சங்ககாலத்துக்கு நெடியபல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே சேரநாட்டில் மருமக்கட்டாய முறை புதுவழக்காய்ப் புகுந்திருக்கவேண்டுமெனக் கொள்கின்றோம். அப்படி நாம் கொளவதால் அதன் உண்மையினை எனைத்தளவும் ஆராய்தற்கு அவசியம் நாம் காணகில்லோம். நம்மிடத்து இம்மனநிலைக்குத் துணையாகுங் காரணங்கள் பலவுள. எதனையுமே ஆராயாமல் கண்டபடி கொண்டமையும் இயல் நமது பெரியமாட்சி. ஊழொன்றிற் கிறைமைகொடுத்து, ஊக்கத்தை அறத் தொலைத்துப் பாழொன்றப் பொறுமையுடன் பலதுறைகளிலும் நாம் பயின்று வருகின்றோம். இப்பழக்கத்தால் நாம் பெற்ற பயன் பலவற்றுள், உண்மைகளைத் தேடுவதிற் பெருவெறுப்பும், கையறவிற் கழிவிருப்பும் என இரண்டுமாம். இவ்விரண்டும் நம் மனத்தில் நாளடைவில் மிகத்தடித்து வேரூன்றி வளர்கின்றன. மேனாட்டார் கண்டளந்து சொல்லுமுன்னே நமது பழஞ்சரிரங்களை நாம் உணரோம். நம்மிடையே கிடையாத நமது அரிய பழைய தமிழ்நூல்களெல்லாம் இன்றளவில் இலண்டனிலும் பாரிசிலும் இருக்கப் பார்ப்போம். நமது தற்கால நிலைக்கு இவ்வாறு உண்மைநலம் பேணாத நம்மவரின் பெருநொதுமல் மனப்பாங்கைச் சிறிதல்ல, செம்பாதி காரணமாக் கூறல் கூடும்.

'பார்ப்பனருக்கும், பணமுடைய மேல்வகுப்பார் பலருக்கும், பெண்டிரெல்லாம் மணமற்ற இன்பத்திற்குத் துணையாகி வாழவேண்டும்' என்ற இழிவழக்கைக் கேரளத்தில் வடவாரியமுனிப்பொருநர் பரசுராமர் அந்நாட்டார் நலம்பேணிப் புகுத்தியதாய் நம்பூரிமார் சிலர் நவில்வதனைப் பழமறைபோற் கொள்ளுகின்றோம். சங்கநூல்களில் யாதொன்றும் நம் மக்கட்டாய மரபிற்கு மாறாய தாயமுறை சேரருக்குச் சுட்டிலதென்று ஒருதலையாத் துணிகின்றோம். இவைகொண்டு மருமக்கட்டாய முறை சங்ககாலத் தமிழ்ச்சேரர்க்கில்லாத-பின்பெழுந்த- புதுவழக்கமென்று அதனிற் சங்கையற்றுத் தெளிந்து நிற்போம்.

நாம் அறிய நெடுங்கால ஆட்சியுடைய வழக்கொன்றைப் புதியதெனத் தெளிவிக்கும் தக்கசான்று காணுமட்டும், வழங்குமிடத்து அது நிலைத்த பழவழக்காய்க் கொள்ளுவதே ஆராய்ச்சித்துறையில் அறிவுடைய நெறியாகும். தொல்லைச்சேரர் கையாண்ட தாயமுறைக்குத் தமிழகத்திற் பழம்பனுவல் ஏதேனும் கரிபகரக் காணுவமேல், அதன் உண்மை ஆராயத்தக்கதாகும். சேரர்குடிப் புகழ்விரிக்கும் தொன்னூல்கள் சிலவற்றுள் இதுபற்றிய சான்று சிறிதுள்ளதென ஊகித்தற்கு இடமுண்டு. ஊன்றிநோக்கில், இந்நூல்கள் சிலவற்றுள், பழஞ்சேரர் பரம்பரையில் மக்கள்வழி பேணப்படாமல் தற்காலக் கேரளத்தார் கையாளும் மருமக்கட்டாயமுறையே வழங்கியதாய்க் கரிகூறும் சான்றுண்மை காணுகின்றோம். உண்மையினை உணர்தற்குக் காய்தல் உவத்தல் இல்லாத நடுநிலையில் நின்று நாம் ஆய்தல் வேண்டும்.
----------------

பகுதி-2: தாயமுறை நியமங்கள்


ஆயுமுன்னர் நாம் அவசியம் அறிந்து வைக்க வேண்டியவாய் இவ்வாராய்ச்சிக்கு உதவுவனவாய தாயமுறை வழக்கங்கள் சிலவற்றை வரையறுத்துத் தெளியவேண்டும். கேரளத்தில் வழங்கிவரும் மருமக்கட்டாய முறைக்கு அடிப்படையாயுள்ள சில வருமாறு:-

(1) ஆண்வழியிலன்றிப் பெண்வழியிலேயே உறவு முறையும் கிளைமரபும் ஆட்சிபெறும்; தாய்மாரே குடிபேணும் அடிமரமாய்க் கருதப்படுவர். கிளைவளமும் குடி
நிதியும் பெண்வழியே தழையும் வகை முறைவகுத்துக் குடியறங்கள் நிற்பனவாகும்.

(2) மக்களெல்லாம் தாய்க்குடியின் கிளைஞராவர்; அக்குடியில் ஆடவர்கள் தன் மாமன்மார்க்குரிய வழித் தோன்றல்களாய் வரன்முறையே உரிமைபெறுவர். மருகரெல்லாரும் வயதுவரிசையிலே வரன்முறையாய்த் தனித் தனியே குடியாளும் தலைமை கொள்வர்.

(3) தற்கால நாகரிகப் புதுமாற்றம் சில புகுந்து பழவழக்கத்தைப் பிறழ்வித்துத் தடுமாறச் செய்யுமுன்னே, கேரளத்திற் குலநிதியைப் பிரித்தாளும் பிறப்புரிமை ஆண்மக்கட்கு ஒன்றும் இல்லை. தாய்வழிகள் பிரிந்து சில புதுக்குடிகள் தழையலாகும். குடிதோறும் பொதுநிதியம் பிரியாமல் வளர்வதாகும். பெண்களுக்கு நிதியாட்சி யுரிமை இல்லை. குடிநிதியின் பயனுகர்ந்து பொதுவாழும் உரிமை அக்குடியிற் பிறந்தவர்கள்- ஒருதாயின் வழியினர்கள்-இருபாலார்-எல்லார்க்கும் பொதுவுடைமையாக நிற்கும். பொதுக்குடியைத் தருவாடு என்று அந்நாட்டார் தற்கால மொழிவழக்கிற் சொல்லுகின்றார்.

(4) தருவாட்டின் (குடியின்) தலைமை, அதன் நிதியாட்சி மேற்கொள்ளும் உரிமையெல்லாம் மருகருள்ளே படிப்படியாய் வயது முறைவரிசையினில் வழிமுறையே வந்திறங்கும். ஒருதலைமுறையாரின் தநயரெல்லாம் இம்முறையில் ஒப்புரிமையுடையவராய், அவர் பெற்ற புதல்வரெல்லாம் சோதரராய் வயதுமுறை வரிசையினில் ஒவ்வொருவராக இதை ஏற்கலாவர். அவர்கட்குப்பின் அவர் தாய்மாரின் பெண்மக்களீன்றுடைய ஆண்மக்கட்கு அவ்வுரிமை அம்முறையே வந்திறங்கும். குடித் தலைமைபெற்று அதனை ஆள்வோரைக் காரணவர் என்றும், அவருக்குப்பின் அக்குடியில் அவ்வுரிமையடைதற் குரியவரை அநந்தரவர் என்றும் இன்று கேரளத்தில் இத்தாயமுறை வழங்குங் குடிகளிலே கூறிவருவர். மருகரெல்லாம் வயதுமுறை வரிசையினில் வழிமுறையே இவ் வுரிமை வரப்பெற்றுத் தத்தம் முறையில் ஒவ்வொரு வரும் அத்தலைமை மேற்கொண்டு காரணவராகித் தம் கடனாற்றிக் கிளைதாங்கிக் குடியோம்பி (தருவாட்டைப் பேணி) ஆள்வர்.

(5) கேரளத்திற் கோக்குடிகள் தம்முள்ளும் நாடாளுங் கோலுரிமை, குடியாவார்தங்கள் சிறு குடித்தலைமை யுரிமையைப் போலவே, மருகர்வழியே வரிசைமுறையில் வருவதாகும். கோக்குடியிற் பெண்கள் சிலர் தகவுடைய குறுமன்னர் குடியினரை மணந்து வாழ்வார். எனின், மனைவியர்க்குக் கணவர்குடிகளில் உறவுக்கடன் உரிமைபதவிகள் ஒன்றும் இல்லை. பெண்கலெல்லாம் பிறந்தகுடியின் மட்டுமே கிளை உரிமைகடமைகளும் உரிய நிலை மேதகவும் உடையராவர்.

(6) ஆண்மக்கள் தம் தந்தையர்க்குப் புதல்வரெனினும், அன்னார் குடிசிறக்க வழிநிற்கும் உரிமைபெறும் பிறங்கடையர்(வாரிசு) ஆகமாட்டார். அத்தந்தையர்க்கு வழித்தோன்றலாவார் அவருடன் பிறந்த பெண்வயிற்று மருகரேயாவர். ஆகவே, ஆண்மக்கள் தத்தம் மாமன் மார்க்கு மட்டுமே வழித்தோன்றல்களாகி நிற்பர்.

இவைபலவும் மருமக்கட்டாயமுறைக்கு நிலைக்களமாய், அதனோடு ஆட்சிபெறும் அறவழக்காம். இதை மறவாமல் மனத்திருத்தித் தொன்னூல்களின் உதவி
கொண்டு, பழஞ்சேரர் பரம்பரையில் வழங்கியது இத்தகைய மருமக்கட்டாயமா நாம் ஆளும் மக்கட்டாயமா என்றதொரு சிற்றாராய்ச்சியில் இறங்குவோமாக.


பகுதி 3. சங்கநூற் சான்றுகள்


இவ்வாராய்ச்சிக்குத் துணையாகும் சான்றுகள் பல. அவற்றுள், சங்கநூல்கள் சிறந்தன. அவற்றுள்ளும் பதிற்றுப்பத்தே தலைசிறந்தது. சேரரைச் சோழபாண்டியருடன் சேர்த்துப்பாடும் பிறநூல்கள் போலாது, இது முழுதும் தனியே சேரரையே பாராட்டுவதாகும். பத்துப் பழம்பெரும் புலவர் ஒவ்வொரு சேரனையும் பப்பத்துப் பாட்டிற் பாராட்டிப்பாடிய பாக்களைத் தொகுத்துப் பதிற்றுப்பத்து எனும் பெயரால் நின்றுநிலவ வைக்கப் பெற்றதொரு தொகைநூல் இது. இதில் முதற்பத்தும் இறுதிப்பத்தும் கிடையாமல் இடையெட்டுப் பத்துப் பாட்டுக்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. இவற்றின் ஒவ்வொரு பத்துப்பாட்டின் தொகையிறுதியில் அப்பாட்டுடைக் கோச்சேரனின் குடிவழியும் அவன் வெற்றி முதலிய சில பிறசிறப்புக்களும் அடங்கிய பதிகமொன்று சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆகவே சேரர் குலமுறை தெளிவதற்கு இப்பதிகங்கள் மிகவும் உபகாரப்படும். இப்பதிகப் பாட்டுக்களில் சேரர்குடிவழிகூறும் அடிகளையும் தொடர்களையும் ஆதரவாகக்கொண்டே பண்டிதர் பலரும் இதுகாறும் இச்சேரர் குலமுறை கிளத்தியுள்ளனர்.

அதனால் ஈண்டு அவ்வடிகளையும் தொடர்களையுமே முதலில் நாம் ஊன்றி நோக்கி அவற்றின் பொருளும் குறிப்பும் ஆழச் சூழ்ந்து தெளியக்கடவோம். அவை வருமாறு:-

    1. முதற்பத்து:- முற்றுமே அகப்பட்டிலது.
    2. இரண்டாம்பத்து:- இமையவரம்பன் நெடுஞ் சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பாடியது.

    "மன்னிய பெரும்புகழ் மருவில் வாய்மொழி
    இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு,
    வெளியன் வேண்மாள் நல்லினி யீன்றமகன்"

    3. மூன்றாம்பத்து:- பல்யானைச் செல்குழுகுட்டுவனைப் பாலைக்கௌதமனார் பாடியது.

    "இமைய வரம்பன் தம்பி............
    .................................
    பல்யானைச் செல்குழுகுட்டுவனை"

    4. நான்காம்பத்து:- களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது.

    "ஆராத் திருவிற் சேர லாதற்கு,
    வேள் ஆவிக் கோமான்
    பதுமன் றேவி யீன்ற மகன்"

    5. ஐந்தாம்பத்து:- கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கரணமமைந்த காசறுசெய்யுட் பரணர்பாடியது.

    "வடவ ருட்கும் வான்றோய் வெல்கொடிக்
    குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்கு,
    சோழன் மணக்கிள்ளி யீன்றமகன்"

    6.ஆறாம்பத்து:- ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் பாடியது.

    "குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு, வேஎள்
    ஆவிக் கோமான் றேவி யீன்றமகன்"

    7. ஏழாம்பத்து:- செல்வக்கடுங்கோவாழியாதனைக் கபிலர் பாடியது.

    "மடியா வுள்ளமொடு மாற்றார்ப் பிணித்த
    நெடுநுண் கேள்வி யந்துவற்கு, ஒருதந்தை
    யீன்றமகள்-பொறையன் பெருந்தேவியீன்றமகன்"

    8. எட்டாம்பத்து:- பெருஞ்சேரலிரும் பொறையை அரிசில் கிழார் பாடியது.

    "பொய்யில் செல்வக் கடுங்கோ வுக்கு,
    வேளாவிக்கோமான் பதுமன்றேவி யீன்றமகன்"

    9. ஒன்பதாம்பத்து:- இளஞ்சேரலிரும்பொறையைப் பெருங் குன்றூர்கிழார் பாடியது.

    "குட்டுவ னிரும்பொறைக்கு, மையூர் கிழாஅன்
    வேண்மாள்-அந்துவஞ்செள்ளை யீன்றமகன்"

    10. இறுதிப்பத்தும் இறந்ததே போலும்.

இவையிற்றை உற்றுநோக்குங்கால், பதிகம் எட்டனுள் இரண்டு நான்கு ஆறுமுதல் ஒன்பதான ஆறுபதிகத் தொடர்களால் அவ்வப் பதிகப்பாட்டுடைத்தலைவனான கோச்சேரன் ஒவ்வொருவனும், ஓரோர் கோமாள் (கோக்குடிப்பெண்) தன் கணவனுக்கு மகனும் மற்றொரு கோச்சேரனுக்கு வழித்தோன்றலுமாய்ப் பெற்றெடுத்துதவிய பெருமகனாகவே தோன்றுகிறான். மூன்றாம் பதிகமான மற்றொன்றும் அதனையே வலியுறுத்தும். ஏனெனில், அதிற்பாடப்பெற்றவன் இரண்டாவதன் தலைவனான இமையவரம்பனுக்குத் தம்பியெனப்படுவதால், இப்பதிகமும் இரண்டாம்பதிகச்செய்யுள் கூறும் குலமுறையையே கூறுவதாகும். எஞ்சிய ஐந்தாம்பதிக அடிகள் சிறிது சங்கைக் கிடனாக நிற்கின்றன. இதில் ஏதோ ஒரு சொற்குறைவு காணப்படுகின்றது.* அக்குறைவால் இப்பதிகத்தொடர் இதுவரை சிறிது பிறழ்ச்சியுணர்ச்சிக்கு ஒருவாறு இடந்தந்து வருகிறது. இப்பதிகத் தொடர்களெல்லாம், பொருள்நேர்மையால் ஒருதிறப்படுமாயினும், சொன்னீர்மையாற் பலதுறைப்பட்டு நிற்கிறன. 4,6,8 பதிகங்கள் ஒருவகை; 2,9 ஒருவகை; 3-ஆவது தனிவகை; 7-ஆவது ஒருவகை; 5-ஆவது ஒருவகை; ஆக இவைகள் இப்படிப் பலபட அமைந்துகிடப்பதால், இப்பதிகத் தொகுதியை இம்முறையிலேயே பகுத்துத் தனித்தனியே அவ்வத் தொடர்வகைகளின் சொல்லாற்றலையும் பொருளாக்கத்தையும் ஈண்டுச் சிறிது ஆழத் துருவி ஆராயப் புகுவோம்.
--------------------------
*இம்மூன்றாம் பகுதியின் vஆவது உட்பிரிவைப் பார்க்க.

(i) பதிற்றுப்பத்து 4,6,8-ஆம் பதிகத்தொடர்களின் பொருட்குறிப்பு

(1) முதலிலே, நான்கு ஆறு எட்டுப் பதிகப்பாக்களில் அப்பாட்டுடைத் தலைவரின் தாய் அங்குப் பெயர் குறித்த சேரரல்லாத பெருந்தகையார் பிறர் ஒருவரின் தேவியெனச் சுட்டப்பட்டிருப்பது சிந்திக்கத்தக்கது. இதுவரை இப்பதிகங்களைக் கொண்டு சேரர்குலமுறை கண்ட பண்டிதர்கள், ஈண்டுத் 'தேவி' என்ற சொல்லினாற்றலை விசாரியாமல் அது 'தநயை' என்னும் பொருளுடையது போலவே கருதிச் சென்றிருப்பதாகத் தெரிகிறது. இச்சொல், தெய்வங்களில் பார்வதி காளி துர்க்கை என்பாரையும், மக்கள்வருக்கத்துள் முறைப்பொருளில் மனைவியையு மட்டுமே குறிப்பதாகும். 'தேவி' என்ற சொல்லுக்கு, மனைவிப்பொருளல்லது, மகள் அல்லது தநயை என்ற பொருள் இல்லை. இலக்கியம் திவாகராதி நிகண்டுகள் முதலிய நூல்களில் மகட்பொருளில் இச்சொல்லுக்கு ஆட்சி இல்லை. எனவே, இச்சொல் இயல்புவழக்கில் மனைவியையே சுட்டவேண்டும். ஆகவே 4,6,8 பதிகங்களிற்
சுட்டப்படும் கோச்சேரர்தாய், வேள்-ஆவிக் கோமானின் மனைவியாகவேண்டும். அதனாலே இவள் வேறு சேரருக்கு மனைவியாயிருந்திருக்க முடியாதாகும்.

(2) நார்முடிச்சேரல், ஆடுகோட்பாட்டுச்சேரலாதன், பெருஞ்சேரலிரும்பொறை என்ற மூன்று கோச்சேரர்களை யீன்ற தாயை வேள்ஆவிக்கோமான் பதுமனின் தேவி என்றே இம் மூன்றுபதிகங்களும் விசதமாக விளக்குகின்றன. எனவே, பதுமன்மனைவியான இக்கோப்பெரும் பெண்டு இப்பதிகங்களிற் பாட்டுடைத் தலைவருக்கு முன் தோன்றல்களாகக் குறிக்கப்படும் சேரலாதன், செல்வக் கடுங்கோ என்ற இருபெருஞ்சேர மன்னருக்கும் அறக்கிழத்தியா மாறில்லை.

அன்றியும், தேவிச்சொல்லுக்கு இல்லாத தநயைப் பொருள் கொடுத்துவைத்து, வேள்-ஆவிக்கோமான் பதுமனுக்கு இவளை அவன் பெற்ற மகளெனவே கொண்டாலும், இவள் இப்பதிகங்கள் சுட்டும் இருவேறு சேரருக்கு இற்கிழத்தியாகுமுறை கொள்ளற்கில்லை.

(3) இம்மூன்று பதிகத்தும் குறிக்கப்பெற்ற வேள்பதுமன் ஒருவனேயாகவேண்டும். வெவ்வேறு வேண்மானைச் சுட்டுவதான குறிப்பு ஒன்றும் இவற்றுள் இல்லாத நிலைமையில் இவை ஒருவனையே சுட்டும் எனக் கொள்ளுவதே முறையாகும். அன்றியும், பண்டிதர் திரு.மு. இராகவையங்காரவர்களும் பிறரும் இம்மூன்று பதிகமுமே ஆவிக்கோமான் பதுமனெனும் ஒரு வேளிர்தலைவனையே குறிக்குமென விளக்கியுள்ளார்கள். இயற்பொருளில் இப் பதிகத்தொடர்கள் சுட்டுகிறபடி இப் பதிகச்சேரரின்தாய் 'பதுமன்தேவி' ஆவளேல், சேரலாதன், கடுங்கோ என்ற இருவர் தமக்கும் இவள் மக்களீன்றாள் என்று உரைப்பதற்கு, தன் பதியாகும் பதுமனொடு மற்றிருவர் சேர்க்கை யும் இவட்கு ஏற்றவேண்டும். பதுமனுக்கு இவளைத் தநயை எனக்கொள்ளினுமே இருபெருங்கோச்சேரருக்கு அறத்துறையில் இவள் மக்கள் பெறுமாறில்லை. ஒருவேளை பெற்றாலும், அப்பெற்றி உலகறிய வசைநிற்கப் பாடாண்பாட்டில் அதைப் புலவர் பாடமாட்டார்.

(4) இவளை வேள்பதுமனுக்கு மகளாக்கிச் சேரர் பலர் சேர்க்கை இவட்கு எய்தாமல் அகற்ற விரும்புவோர்கள், பதுமனை ஈங்கு இருமகளிர்ப்பெறுவித்து, ஒருத்தியைச் சேரலாதற்கும் மற்றவளைக் கடுங்கோவுக்குமாகப் பிரித்து மணம்புரிவித்து விழவுகொள்வர். மூலத்தில் இரு மகளிர் எனும் குறிப்பே எங்கும் இல்லை. மூவேறு பதிகத்திற் குறித்த வேள்-ஆவிக்கோமானை, மூன்றில் ஒன்றிற் பதுமன் என்ற பெயர் குன்றவந்திருந்தும், ஒருவனே எனத் துணியும் பண்டிதர்கள், மூன்றிடத்தும் ஒருபடியே 'ஆவிக்கோமான் தேவி' எனக் குறித்த கோமாட்டியார் ஒருத்தியல்லள், மூவரல்லர், இருவரேயாவரெனக் கொள்ளுவானேன்? ஆவிக்கோமான் மனைவியை இங்கு அவனுக்கு மகளாக்கி, பதுமனை முன் மணந்தவளை மறுபடியும் கன்னியாக்கிப் புதுமன்றல் புரிவிக்க முயலும்போது, அதன்குறுக்கே வந்துபுகும் ஆபாசத் தொல்லைகளை விலக்குதற்கு ஒருத்திவிழாப் போதாமல் அவள் தந்தைக்கு இரு மகளிருண்டாக்கி, இருவரையும் இரு சேரர்க்கு உரியராக்கி, அவர் தம்மால் மும்மக்கட் பெறுவித்து ஒருவகையாய் முறைப்படுத்த அவசியங்கள் எழுகின்றன. இவள் பதுமனுக்கு மனையாளாய் அவனுக்கே தநயர்களைப் பெற்றெடுத்துத் தன்கிளையிற் சேரருக்குப் *பிறங்கடைய (as heirs) மருகர்களாய் உதவுவதிற் கோமகட்குக் குறையில்லை; குடிப்பழியும் கூறற்கில்லை.
--------------------
*பிறங்கடை-வழித்தோன்றல்-வாரிசு; பிறங்கடையான-வாரிசான.

மேலும்,ஏழாம்பத்துப் பதிகத்தில் இத் தேவிச் சொல் தெளிவாக மனைவிப்பொருட் குறிப்பிலேயே வந்திருப்பதும் இங்குச் சிந்திக்க வேண்டும். ஆண்டு எனைத்தானும் இச்சொல்லுக்கு மனைவியல்லாத எப்பொருளும் பொருந்தாது. "அந்துவற்கு ஒரு தந்தை யீன்ற மகள்- பொறையன் பெருந்தேவி" என்று கடுங்கோவை ஈன்ற தாயை அப்பதிக ஆசிரியர் விசதமாக விளக்கியுள்ளார். அந்துவன் தந்தைக்கு மகளும் பொறையனுக்குத் தேவியும் ஆவளென, அவளை ஈன்ற தந்தையோடும் கொண்ட கணவனோடும் தனித்தனியே அக்கோமாட்டிக்கு உள்ள தொடர்பை விளக்கும் முறைப் பெயர்களைப் புலவர் விதந்து பிரித்துக் கூறியிருப்பதால், தேவிச்சொல் ஆண்டு எவ்வகையிலும் மகளைக் குறிக்கவே முடியாது. மனைவியையே குறித்துத் தீரவேண்டும். பதிகங்களெல்லாம் ஒரு புலவராற் செய்யப்பெற்றன என்றே கொள்ளப்படுகின்றன. எப்படியும் எல்லாப் பதிகங்களிலும் ஒரே பொருளைக் குறிப்பதாய் ஒருபடியான சந்தர்ப்பத்திலே வரும் இத் தேவிச் சொல்லுக்கு யாண்டும் பொருந்துவதான மனைவிப் பொருள் ஒன்றையே இவ்வெல்லாப் பதிகங்களிலும் கொள்ள வேண்டுமென்பது நியதமாகிறது.

(5) இன்னும், இம்மூன்று பதிகத்துக் கோச்சேரர் தாயாரைப் பதுமனுக்கு மகளாயும், சேரருக்குத் தநயர்தரும் மனைவியாயும் குறிப்பதுவே ஆசிரியர் கருத்தாமேல், சேரரொடு இவளை மனையறக்கிழமை தரும் சொற் கொண்டு சேர்த்திருப்பர். பதுமனுக்குத் தநயை எனத் தெளிவிக்கும் சொற்பெய்யத் தவறி, மிகத் தடுமாறி மனைவியதன் மறுபெயரால் அவனொடுசேர்த்து ஈங்கு இவளைச் சுட்டமாட்டார். இப்பதிகப் பாவலர் மூவருள் ஒருவர் குறையா நிறையும் கணவன்பால் தூய காதலும் உடையராய்க் கற்பரசியாய்ப் புகழ் சிறந்த நச்செள்ளையார் என்ப. அத்தகைய பெருந்தகையார், நிறையிறந்து, மணந்தவனைத் தணந்து, தன் பெண்ணியலை மறந்து, பிற மன்னர் பலரைக் கூடி மக்களைப்பெறுபவளை வாயார வழுத்துவரோ? அல்லது அவள் இழிதகவைச் சுட்டித் தான் பாடுவாரோ?

(6) பாட்டுக்களிற் பதுமனுக்குத் தேவி எனப் பகர்ந்த பின்னர், "அவன் தேவி சேரருடன் சேர்க்கையினால் அவர் தமக்கு மைந்தர்களைப் பெற்றாள்" என்று உரைத்து அவளைப் பழிப்பதுடன், அவள் ஈன்ற கோச் சேரர் மூவர் புகழும் மாசுபட மூன்று புலவரும் பாடமாட்டார். பாடினரேல், ஒறுப்பதைவிட்டு அவர் பழிக்குப் பரிசில் தர அக்கோச்சேரர் மூவரும் கழிபித்தர்களாய் இருக்க வொல்லார். பாடினவர் பலவேறு புலவரென்றும், பாடிப்பெற்ற பரிசில் அளவிறந்ததென்றும் இப்பதிகங்களே விளக்குவதைக் கருதுங்கால், பாடப்பட்ட கோச் சேரரின் குற்றமற்ற குடிப்பிறப்பினையும், அவர் தம் கற்பு நிறை தாய் வயிற்றில் - தந்தை வேண்மான் - ஆவிக்கோ மாற்கு - மைந்தராய்ப் பிறந்து, தாய்வழியில் தலைசிறந்த சேரருக்கு மருகரென வழித்தோன்றி நின்றுயர்ந்த குறிப்பினையும், இப்பதிகத் தொடர்நிலைகள் சுட்டுவதைத் தெளியலாகும்.

இனைய பல நினையுங்கால் நான்கு ஆறு எட்டுப் பதிகங்களிற் புகழப்பெற்ற கோச்சேரர் மூவரும், ஆவிக்கோமான் பதுமனுக்கே மைந்தரும், சேரலாதன் செல்வக்
கடுங்கோ இருவருக்கும் வழித்தோன்றல்களாய்ச் சிறந்த பெருமருகரும், தம்கோத்தாயின் வயிற்றுதித்து வளர்ந்த கோப்பெருமக்களும் ஆவர் எனத் துணிவதே கருமமெனத் தோன்றக் காண்பாம்.
----------------------------

(ii) 2,9-ஆம் பதிகத்தொடர்ப் பொருட்குறிப்பு.

(1) இனி இரண்டாவதாக 2,9-ம் பதிகத்தொடர்களையும் அவை சுட்டும் பொருட் குறிப்பையும் நிதானித்தறிய முயல்வோம். இவை முறையே இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனை "உதியஞ்சேரலாதற்கு வெளியன் வேண்மாள்-நல்லினியீன்ற மகன்" என்றும், இளஞ்சேரலிரும்பொறையைக் "குட்டுவன் இரும்பொறைக்குமையூர் கிழான் வேண்மாள் அந்துவஞ்செள்ளையீன்ற மகன்" என்றும் கூறுகின்றன. 2,9 பதிகங்கள் அப்பாட்டுடைத் தலைவரின் தாய்மாரை 'வேண்மாள்-நல்லினி' 'வேண்மாள்-அந்துவஞ்செள்ளை' என்று சுட்டுகின்றன. இவ்விடங்களில் வேண்மாள் என்னுஞ் சொல் அத்தாய்மாரின் இயற்பெயரில்லையென்பது வெளிப்படை. 'நல்லினி' 'அந்துவஞ்செள்ளை' என்பன அவர்தம் இயற்பெயரும், 'வேண்மாள்' என்பது அவ்விருவருக்கும் பொதுவாயதொரு சிறப்புப் பெயருமாயிருக்க வேண்டும். "சிறப்பினாகிய பெயர்நிலைக் கிளவிக்கும்-இயற்பெயக்கிளவி முற்படக் கிளவார்" என்னும் தொல்காப்பியச் சூத்திர விதிப்படி, இவ்விருவர் இயற்பெயர்களுக்குள்ளும் முன்னிற்கும் 'வேண்மாள்' எனும் பொதுச்சொல், 'கோமனைவி' என்னும் பொருளுடையதொரு சிறப்புப் பெயரேயாதல் வேண்டும்.

(2) இன்னும், "வேண்மாள்" என்னும் சொல், கோவேந்தர் கோப்பெருந்தேவியரையும், கோவியலார் முடிபுனையாக் குறுமன்னர் தேவியரையும் குறிக்கும் ஒரு பொதுப்பெயராய்ப் பழந்தமிழிலக்கியங்களிற் பலவிடத்தும் வழங்கக் காண்பாம். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் தம்கோத்தமையன் செங்குட்டுவன் கோமனைவியை "வேண்மாள்" என்று சுட்டியுள்ளார். ஆண்டு அச் சொல் அத்தேவிக்கு இயற்பெயர் என்று நினைப்பவரும் சிலருளர். உண்மையிலே இது அவளுக்கு இயற்பெயரன்றென்று எளிதில் தெளியலாகும்.

    "வானவர் தோன்றல் வாய்வாட் கோதை
    விளங்கில வந்தி வெள்ளி மாடத்து
    *இளங்கோ வேண்மா ளுடனிருந் தருளி"

என்பன சிலப்பதிகாரக் காட்சிக்காதையடிகளாகும். சேரர் பெருமான் இயந்திரவாவி எழின்மாடத்தில் தம்பி இளங்கோவோடும் தனது தேவியோடும் ஒலக்கத்து எழுந்தருளியிருந்தவன், மலைவளம் காணுவமென அவரிருவருடனும் பரிவாரங்களோடும் புறப்பட்டான் என்று சுட்டும் குறிப்பின இவ்வடிகள்.
-------------------
*தம்பியைச்சுட்டும் "இளங்கோ"த் தொடரையும் வேண்மாளோடு சேர்த்துச் செங்குட்டுவன்தேவிக்கு "இளங்கோவேண்மாள்" எனும் தொடர்முழுதும் பெயராய் நிற்பதெனக் கொண்டு, அதனால் அவள் கோத்தேவி (பட்டமகிசி) யல்லள் என்றும், மன்னன் பின்னர்மணந்த காதற்கிழத்தியா யிருக்கவேண்டுமென்றும் நினைப்பாரும் உளர். அவர் கருத்துக்குப் போதிய ஆதரவு இல்லாததோடு, அது பொருந்தாது எனவும் சிலப்பதிகார அடிகளை ஊன்றி நோக்குவோர்க்கு வெளியாகும். இளங்கோவடிகள் மாடத்தில் மன்னனுடனிருந்து மலைகாணச்சென்று மீண்டதாய் அடிகளின் மருளற்ற செந்தொடர்கள் தெளிவிப்பதாலும், இளங்கோவடிகளைச் சுட்டாமற் கோத்தேவியைத் தனியே குறிக்கும் பிற இடங்களிலெல்லாம் இவ்விளங்கோத்தொடர் கொடுக்காமல் வாளா "மாபெருந்தேவி" [காட்சிக்காதை-வரி 110] எனவும், "வதுவை வேண்மாள் மங்கல மடந்தை மதியோர் வண்ணங் காணிய வருவழி" [நடுகற்காதை-வரி-51-52] என்ற அடிகளில் "வேண்மாள்" எனவுமே அடிகள் கூறிப்போவதாலும், காட்சிக்காதையின் முதலில் வரும் மேற்குறித்த தொடரிலும் 'இளங்கோ' என்பது வேண்மாளுக்கு அடையாகாமல் இளங்கோவடிகளையே குறிக்கும் என்பது மலையிலக்காம். மேலும் இளைய மனைவி என்ற பொருளில் 'இளங்கோ வேண்மாள்' என்று குறிப்பதே அடிகள் கருத்தாமேல், அதே காதையில் பின் இவள் பெருங்கோப்பெண்டென்பதை விசதமாக்கி 'மாபெருந்தேவி' எனச் சுட்டியிருப்பது பொருந்தாதாகும். ஆதலாலும் இத்தொடர் இளங்கோவடிகளையும் கோத்தேவியான வேண்மாளையுமே குறிக்கிறதென்பது தெள்ளிதிற் கொள்ளக் கிடக்கிறது.

இன்னும் செங்குட்டுவன் மனைவி இக்காட்சிக்காதையிற் பின்னோரிடத்தில் 'மாபெருந்தேவி' எனவும், நடுகற் காதையில் மீண்டும் வாளா 'வேண்மாள்' எனவுமே குறிக்கப்படக் காண்கின்றோம். இத்னால் 'வேண்மாளும்', 'மாபெருந்தேவியும்'-கோமனைவி என்ற ஒருபொருள் குறிக்கும் இரு விசேடணங்களென வெளியாகிறது. இவை இரண்டும் செங்குட்டுவனின் ஒரே கோமனைவியைக் குறிக்கும் இரு சிறப்புப் பெயர்களேயாகும்.

(3) மேலும், இளங்கோவுக்குச் செங்குட்டுவன் தமையன்; அதனால் குட்டுவன்கோத்தேவி அவருக்கு அண்ணியார்(மதிநியார்) ஆகவேண்டும். தமிழகத்தில் தமையன்மார் மனைவியர்பெயரைத் தம்பியர் கூறுவது மரபில்லை: வழக்குமில்லை, கோவேந்தன் பெருந்தேவிக்குரிய மதிப்பும் தமிழ்மரபும் ஒருங்கே நின்று இளங்கோ வடிகளை அவளியற்பெயரைச் சுட்டவொட்டாமல் தடுப்பது முறைமை. தமையன்பெயர் தன்பெயர்களைச் சொல்லுவதில் அத்தகைய தடைகிடையாது. அப்படியிருந்தும் இவ்விடத்தில் இவர்களியற்பெயரைகூடக் கூறாமல், மன்னனை வாளா 'வானவர் தோன்றல்,' 'கோதை' எனவும், தன்னை 'இளங்கோ' எனவும் கூறிப்போகும் அடிகள் மன்னவன் கோமனைவியைமட்டும் அவள் இயற்பெயர் கொண்டு சுட்டுவர் எனக் கொள்வதிற் பொருத்தமும் பொருளும் இல்லை.

(4) இதுவுமன்றி, இச்சொல் மன்னவர்மனைவியரின் பொதுப் பெயராகுமென்பதை வலியுறுத்தும் சான்றுசில இன்னும் உள. தொன்னூல்களில் 'நன்னன் வேண்மாள் 'உதியன்வேண்மாள்' என்ற பிரயோகங்களைக் காணுகின்றோம். ஈண்டு 'நன்னன்','உதியன்' என்ற சொற்கள் ஆண்பாற்பெயர்கள் என்பது ஒருதலை. அவற்றோடு 'வேண்மாள்' எனும் பெண்பாற்பெயர் தொடருங்கால் நன்னன்தேவி, உதியன்தோவி என்றே பொருள்படும். அல்லாக்கால் இப்பெயர்த்தொடர்கள் பொருளற்ற சொல்லின் வெறுங்கூட்டமாகும். இத்தெளிவுகண்டே மகா மகோபாத்தியாய சாமிநாதையரவர்களும் தம் அரும்பத அகராதியில் 'வேண்மான்' என்பதற்கு சிற்றரசன் எனவும், 'வேண்மாள்' என்பதற்கு சிற்றரசன் மனைவி- முடியுடை யரசன் மனைவி எனவுமே பொருள்குறித்துள்ளார்கள். இவ்வாறு 'வேண்மாள்' எனும் சொல் கோவேந்தர் குறுமன்னர்மனைவியர்க்குப் பொதுப்பெயராகவழங்குவதால், அது ஒருவருக்கும் இயற்பெயராகாமல் சிறப்புமுறை குறிக்கவரும் பொதுப்பெயரேயாதல் வேண்டும் என்பது ஐயமற்ற துணிபாய்க் கொள்ளக்கிடக்கின்றது.

(5) வேண்மாள் என்பது இயற்பெயராமேல் பிறிது சொற்சார்பு வேண்டாமல் தன்னிலையில்நின்று அந்தப் பெயருடைய பெண்மகளைச் சுட்டல்கூடும். இவ்வாறு தன்வழக்கு இக்கிளவிக்கு எங்குமில்லை. வருமிடங்கள் தோறும் இது ஆண்பாற் சொற்கள் பிறவற்றைத் தழுவியே வரக் காணுகின்றோம். ஆண்பாற் பெயரொடுவாளா தொடருங்கால் அவ்வாண்மகனுக்குத் தொடர்புடைய பெண்ணொருத்தியைச் சுட்டும் ஒரு சிறப்புமுறைப் பெயராவதன்றி, தொடர்புசுட்டவேண்டாத இயற்பெயராய்க் கெள்ளுவது பொருந்தாது, பொருள்தராது.

(6) ஆண்பெயரொடு பெண்ணொருத்தியினியற் பெயரைப் புணர்க்குங்கால், அவ்விருவருக்கும் உள்ளதொரு முறைகுறிக்கும் சொற்பெய்து விளக்குவதே மரபாகும். இராமன்தேவி சீதை, இராமன்தாய் கோசலை, இராமன் மைத்துனி ஊர்மிளை என்று ஒரு முறைப் பெயர்த்தொடர்புகொண்டே இருபாலார் இயற்பெயர்த் தொடர்கள் வழங்கப்பெறும். முறைசுட்டாமல் வாளா இராமன் ஊர்மிளை என்று இரண்டு இயற்பெயர்களைத் தொடுத்தால் ஒரு பொருளுமறியாமல் மருளுதற்கே ஏதுவாகும். அத்தகைய பிரயோகம் வழக்காறில்லை; மரபிறந்த தவறுமாகும்.

(7) ஈண்டு இரண்டு ஒன்பது பதிகப்பாட்டுக்களில் 'வெளியன்-வேண்மாள்' 'கிழாஅன்-வேண்மாள்' என்று ஆண்பெயர்களோடு தொடர்ந்து பிறசொற்சார்பின்றி நிற்றலால், வெளியன் கிழாஅன் இவ்விருவருக்கும் தனித் தனியே ஒருதொடர்புடைய பெண்களுக்கு "வேண்மாட்" சொல் முறைப்பெயராயமைவது அங்கையில் நெல்லி போல் தெளியப்படும். மற்றைய 4,6,8 பதிகங்களில் 'பதுமன் தேவி' 'ஆவிக்கோமான்தேவி' என்றிருப்பதே போல், ஈண்டும் 'வெளியன்-வேண்மாள்' 'கிழாஅன்-வேண்மாள்' எனவே வருவதால், தேவிப்பொருளிலேயே வேண்மாட் சொல்லும் நிற்கிறதென்று ஒருதலையாகத் துணியப்படும்.

(8) இனி, முறைப்பெயராய்க் கொண்டாலும் இதற்கு மனைவிப்பொருளைக் கொடுப்பானேன், மகட் பொருளிலேயே இதைக்கொள்ளுவோமென்பார்க்குச் சொல்லுவேம், மகள் என்னும் பொருளில் இச்சொல்லைக் கொள்ளற்கில்லை. தம் தமையன் செங்குட்டுவன் தேவியை இளங்கோவடிகள் வேண்மாள் என்று உரைப்பதாலும், மகட்பொருளில் யாண்டும் இதற்கு ஆட்சியில்லாததாலும் மனைவியையே வேண்மாட்சொல் குறிப்பதாகும்.

(9) பதிற்றுப்பத்தின் பதிகங்களைச் செய்தவர் ஒருவரே என்பது அப்பதிக இயல்பாற் புலப்படுவதாகும். திரு.மு. இராகவையங்காரவர்கள் போன்ற பண்டிதரும் அப்படியே கொள்ளுகின்றார்கள். இஃது எப்படியிருப்பினும், இந்நூலில் ஐந்தொழியப் பிறபதிகங்களிலெல்லாம் ஆசிரியர் ஆண்பாற்சொற்களோடு 'தேவி','வேண்மாள்' என்ற சொற்களை நிறுத்தி, அவைகொண்டே அங்குக் குறித்த பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள முறையை விளக்கிப் போவதனால், இச்சொற்களிரண்டுமே 'மனைவி' என்னும் ஒருபொருளில் முறைப்பெயராய் வருமாறு தெளியக்கிடக்கின்றது. இவ்வமைப்பால் 'தேவி' 'வேண்மாள்' என்ற இருசொல்லும், ஒருநிலையில் ஒன்றை யொன்று விளக்கி, இரண்டிற்கும் மனைவி என்னும் ஒரே முறைப்பொருளுண்மையை வலியுறுத்தும். சுருங்கச் சொல்லின், வேண்மாள் என்பது வேண்மாளின் பெண்பாலாம். வேண்மான் என்னுஞ்சொல் சிற்றரசரான வேளிர் அல்லது குறுமன்னருக்குப் பொதுப்பெயர் என்று அறிவோம். ஆகவே வேண்மாள் என்பது குறுமன்னர் தேவியர்க்குப் பொதுப்பெயராய், கோவேந்தர் மனைவியர்க்கும் சில இடத்தே முறைப்பெயராய் வழங்குமென அறியலாகும்.

(10) 4,6,8 பதிகங்களிற் தேவி என்னும் முறைப் பொதுப் பெயர்மட்டும்நின்று, அம்முறையுடையாளான பதுமன்தேவியின் இயற்பெயர் சுட்டப்பெறாமலிருக்கிறது. 2,9 பதிகங்களிலோ வேண்மாள் என்ற முறைப் பெயரோடு 'நல்லினி' 'அந்துவஞ்செள்ளை' எனும் இயற்\ பெயர்கள் தொடர்ந்து 'வெளியன்மனைவி நல்லினி', 'மையூர்கிழான் மனைவி அந்துவஞ்செள்ளை' எனத் தெளிக்கப்படுகின்றது. இங்கு இவர்கள் இயற்பெயரைத் தனித்தனியே விளக்குவதால்,இருவருக்கும் பொதுவான வேண்மாட்சொல் முறைப்பெயரேயாவதனை முன்னரே விளக்கியுள்ளேம்.

(11) இன்னும், 'வேண்மான்' என்பதற்குச் 'சிற்றரசன்' என்றும், 'வேண்மாள்' என்பதற்குச் 'சிற்றரசன் மனைவி-முடியுடையரசன்மனைவி என்றுமே பதிற்றுப் பத்து அரும்பத அகராதியில் மகா மகோபாத்தியாய சாமிநாதையரவர்கள் பொருள்குறித்துள்ளார்கள். அதனாலும் இச்சொல் இப்பதிகங்களில் சிற்றரசான வெளியன்மையூர்கிழான் என்ற வேளிர்களின் மனைவிமாரையே சுட்டுகின்ற தென்று துணியலாகும்.

(12) இவை பலவற்றாலும், இப்பதிகங்களில்வரும் வேண்மாட்சொல் மனைவிப்பொருளையே குறிக்குமென்பது விசதாமாகும்.ஆகவே,இரண்டாம்பதிகத்தால் வேள் வெளியனுக்கு 'நல்லினி' மனைவியென விளங்குகிறது. இனி இப்பதிகத்திலேயே இமையவரம்பன்-நெடுஞ்சேரலாதன் வேள்-வெளியனுக்கும் அவன் வேண்மாள்-நல்லினிக்கும் மகனென்று சொல்லலப்படுவதலால், அவன் உதியஞ்சேரலாதற்கு மகனாமாறில்லை,மருகனேயாவனெனத் தெளிகின்றோம். அதுவேபோல்,9-ஆம் பதிகத்தாலும் இளஞ்சேரலிரும்பொறைவேள்-மையூர்கிழானுக்கும் அவன்தேவி அந்துவஞ்செள்ளைக்கும் மைந்தனாய், குட்டுவன் இரும்பொறைக்கு மருகனே-யாவனென அறிகிறோம். "குட்டுவன் இரும்பொறை-குடக்கோ இளஞ் சேரலிரும்பொறையின் மாமன்" என்று மகாமகோபாத்தியாய பிரும்மஸ்ரீ உ.வே. சாமிநாதையரவர்கள் பதிற்றுப்பத்தின் அரும்பத முதலியவற்றின் அகராதியிற் காட்டியிருப்பதும் இதனை வலியுறுத்தும்.

(iii) 3-ஆம் பதிகத்தொடர் பொருட்குறிப்பு.

இனி மூன்றாம்பதிகத்தைப்பற்றிய தொல்லையில்லை அப்பதிகத்தலைவனான பல்யானைச்செழுகுட்டுவனைப் பதிக ஆசிரியர் வாளா 'இமையவரம்பன்தம்பி' என்றே,
சுட்டியமைவதனால்,அவன்,தன் தமையன் 2-ஆம் பதிகத்தலைவனான நெடுஞ்சேரலாதனைப் போலவே, வேள்வெளியனுக்குத் தநயனும் உதியஞ் சேரலாதற்கு மருகனும் ஆவனென்பது எளிதறியக் கிடைப்பதாகும்.

(iv) 7-ஆம் பதிகத்தொடர்ப் பொருட்குறிப்பு.

ஏழாம்பதிகத்தொடரோ, நெடுங்கால இருளகற்றிச் சேரர் குடித்தாயவழி யுண்மைமுறையைத் துலக்கும் ஒளிவிளக்காயிருக்கிறது. இவ்வுண்மையறிதற்கு இது மிகவும் துணையாவதாய்த் தோன்றுவதால், இதனைச் சிறிது ஊன்றி ஆராயவேண்டுவது மிகவும் அவசியம். இக்கிளைமுறை கிளத்தும் தொடராவது:- "அந்துவற்கு ஒரு தந்தை யீன்றமகள்-பொறையன் பெருந்தேவி-யீன்ற மகன்" என்பதே. இதிற் பாட்டுடைத்தலைவனான செல் வக்கடுங்கோவை ஈன்ற தாயைப் 'பொறையன்பெருந் தேவி'யெனவும், 'அந்துவற்கு ஒருதந்தையீன்றமகள்' எனவும் இப்பதிக ஆசிரியர் தெளிவித்துள்ளார். இவர் கபிலர் எனவே கொண்டால், கபிலர் பொய்யாநாவிற் புலவராதலால் அவர்கூறுவது மெய்யென்பது ஒருதலை. யாவர் கூற்றாயினும் இத்தொடர் கூறும்பொருளைத் தெளிய முயல்வோம்.

முதலில், இத்தொடரில் அந்துவனும் கடுங்கோவின் அன்னையும் ஒரு தந்தையீன்றமக்களென்பது துளக்கமற விளக்கப்படுகிறது. அதனால் அந்துவஞ்சேரற்கு அவன் சோதரியாவளென்று அறிகின்றோம். அதுவுமன்றி, அவள் அடுத்து உடனே பொறையன்தேவி எனவும் விதந்து விசேடிக்கப்படுகிறாள். அதனாலும் முற்கூறிய அந்துவற்கு அவள் மனைவியாமாறில்லை. இத்தொடரிறுதியில் இவளீன்ற கடுங்கோ அந்துவற்கு மகனெனவும் சுட்டப்படுகிறான். இந்நிலையில் இவள் அந்துவற்கு மைந்தனீன்று தருவது எப்படி? பொறையனுக்கு மனைவியாதலாலும், அந்துவனின் தந்தைக்கு மகளாகவே- அந்துவனுக்கு இவள் சோதரியாவதாலும், இவள் அவனை மணந்து மகப்பெற முடியாது. மணவாக்காதலனாக அவனைக்கூடிக் கடுங்கோவை-யீன்றாளென்றால், அது அவளையும் அவள் குடியையும் சுடும் பழியாவதல்லால், சேரர்குலம் தழைய அவள் மகனீன்று தந்தாளென நன்மக்களாற் புகழத் தகுதியன்றாம். அவள் பெர்ற கடுங்கோவை அந்துவதற்குத் தநயனாக்குவதால் அவளுக்குச் சகோதரனுடன் விபசார தோசம் சம்பவிக்கும். இத்துணை விபரீதம் விளைக்கும் இக்கருத்தைவிட்டு, வேறு செம்பொருள் உண்டாயின் அதைக் கொள்ளுவதே நமது கடமையாகும்.

இவ்வாக்கியத்தில் வந்துள்ள விசேடணச் சொற்களிந் நிலையும் அமைப்பும் விபரீதப்பொருளுக்குச் சிறிதும் இடமின்றி உண்*மையை எளிதில் தெளிவிக்கின்றன. முதலிற் கடுங்கோவின் தாயை அந்துவனின் தந்தை மகனென்று கூறிய தோடமையாமல், மீண்டும் அவளைப் பொறையன்தேவி என இடைத்தொடர் கொடுத்தும் விசேடித்திருப்பதாற் புலவர்கருத்துச் சந்தேக விபரீதங்களுக்குச் சிறிதும் இடந்தராமல் விளங்குகிறது. அந்துவனின் சோதரியும் பொறையனின் மனைவியுமான கொமாட்டி கடுங்கோவைப் பெறுகின்றாள். அவள் பெற்ற கடுங்கோவே, பொறையனுக்குத் தநயனும், அந்துவற்குப் பிறங்கடையாம் மருமானு மாகின்றான். தெளிவான இத்தொடர்மொழிப்பொருளை மாற்றிக் கடுங்கோவை அந்துவனுக்கு மகனெனவே கொள்ளப்புகின், "ஒருவனே மற்றொருவனுக்கு ஒருங்கே மகனும் மருகனும் ஆவன்" என ஒரு அபூக அசாம்பாவித விபரீதத்தைக் கூறுவதாக முடியும்.

எப்படியும் இத்தொடரில் 'தேவி' என்பதற்கு மகளெனப்பொருள்கொண்டு இவளைப் பொறையனுக்கு மகளாக்க இடமில்லை. தமிழ்வழக்கில் 'தேவி'ச்சொல் முறைப்பெயராக, "புதல்வி"ப்பொருளில் ஆட்சிபெறாது என்பதை மேலே (7,8-ஆம் பக்கம் 3-ஆம்பகுதி, 1-ஆவது உட்பிரிவில்) காட்டியுள்ளேன். "இவள் தந்தை பொறையனல்லன்; பொறையன் தேவியான இவளுக்குப் பொறையனல்லாத வேறு ஒரு தந்தை உண்டு" என்றே பதிற்றுப் பத்துப் பழையஉரைகாரரும் பதிப்பாசிரியர் மகா மகோபாத்தியாய சாமிநாதையரவர்களும் கருதுகிறார்கள். இதனை, 'ஒருதந்தை-பொறையன் தேவியின்பிதா' என்ற அவர்கள் உரைக்குறிப்பு விளக்குகின்றது.

'பொறையன் பெருந்தேவி' எனும் தொடர்கொண்டு பொறையனை இவளுக்குத் தந்தை எனக் கொள்ளக்கூடுமாயின், 'ஒருதந்தை' என்றதற்குப் "பொறையனாகிய ஒரு தந்தை" என்று இவர்கள் பொருள்கூறியிருக்கவேண்டும். அதைவிட்டுப் 'பொறையன்தேவியின்பிதா' என்று பொருளுரைக்கமாட்டார்கள். அவ்வாறு இவர்கள் பொருள்கொண்டிருப்பதால், 'தேவி' என்ற சொல்லுக்கு மகள் என்னும் பொருள் இவர்களுக்கு ஒவ்வாமையும், மனைவி என்ற பொருளே இவர்களுக்கு உடன்பாடும் ஆவதனை அறிகின்றோம். ஆகவே, கடுங்கோவிந் தாய், வேண்மான் பொறையனுக்கு மனைவியும், அந்துவன் தந்தைக்கு மகளுமே ஆவளென இப்பதிகத்தொடரால் தெளிகிறோம்.

அன்றியும் இத்தகைய ஐயம் எதுவுமே நிகழாவண்ணம் நிறுத்த சொற்பெய்து புலவர் இதன்மெய்ப்பொருளை விளக்கிவைத்திருக்கிறார். அந்துவன் தந்தைக்குக் கடுங் கோவின் தாய் மகள் என முதலிற்கூறினார், 'மகள்' எனும் சொல்லுக்கு மனைவி, பெண், தநயை எனப் பலபொருள் உண்மையால், பிற பொருந்தாப்பொருள்களை விலக்கி இவள் அவனக்குத் தநயை என்பதைத் தெளிவிப்பதற்கு மகளுக்குமுன் 'ஒருதந்தையீன்ற' என்ற அடைகொடுத்தார். எனவே இவள் அந்துவன் தந்தைக்கு மனைவியல்லள், அவன்பெற்ற தநயையேயாவன் என்பது மலையிலக்காகிறது.

இனி, மகட்சொற்போலவே, தமிழில் மகன் எனு மொழியும் ஆண்மகன், கணவன், வழித்தோன்றலாம் மருமான்,புதல்வன் எனப் பலபொருள்களில் வரும். ஆதலால் இத்தொடரிறுதியில் 'பொறையன் பெருந்தேவி யீன்ற மகன்' என்றவிடத்தில் 'மகன்' என்ற சொல்லுக்குப் பொருளென்னை? இவ்விடத் திச்சொல்லின் பொருத்தமென்ன?-என்பன சிந்திக்கத்தக்கனவாம். அந்துவன் பெற்ற புதல்வியாய்ப் பொறையனை மணந்த தேவி யீன்ற கடுங்கோ, தன் தாயை மணந்த பொறையனுக்குப் புதல்வனும்,தன் மாதுலனான அந்துவனுக்கு வழித்தோன்றலான மருமானுமாவன். இவ் வீரியைபையும் விளக்க மகன் என்னு மொருசொல்லே அமைவுடையதாதலின், இப்பதிகப்புலவர் ஈண்டு அச்சொல்லைப் பெய்துவைத்தார். இதனை இக்கட்டுரையின் இறுதிப்பகுதியில் விசதமாக ஆராய்வதால் ஈண்டு விரியா திம்மட்டில் நிறுத்துகின்றேன்.

அப்படியே இவள்பெற்ற மகன் அந்துவற்குத் தநயனல்லன், மருகனேயாவ னென்று தெளிவிப்பதற்காகப் புலவர் மீண்டும் இவளைப் 'பொறையன்தேவி' என்று விசேடித்து, 'ஒருதந்தை யீன்ற மகள்" என்பதற்கும்- (இவள்)'ஈன்றமகன்' என்பதற்கும் இடையே விசேடணம்(அடை) கொடுத்துப் பிரித்து நிறுத்துகின்றார். இவ்வாறு அந்துவன், பொறையன், கடுங்கோ ஆகிய மூவருக்கும் இவளுக்கும் உள்ள முறை நிரல்நிறையே தெளிக்கப்படுகின்றது. இவள் முதல்வனுக்குச் சோதரி, நடுவனுக்கு மனைவி, கடையனுக்குத் தாய் என்பது வெள்ளிடை மலையாம். எப்படியும் இத்தொடரால் அந்துவனுக்குக் கடுங்கோவின் தாய் மனைவியாதல் இயலாதென்பது ஒருதலை; எனவே, அவனுக்கு இவன் தநயனாகான், வழித்தோன்றலான மருமானேயாக வேண்டுமென்பது தெளியக் கிடக்கின்றது. மருமக்கட்டாயத்தைச் சுட்டுஞ் சான்று இதைவிட வேறு எப்படிக் காணமுடியும். இத்தொடர் மக்கட்டாயத்தோடமைவுபெற மறுக்கின்றது. கடுங்க்கோவை அந்துவனுக்கு மகன் என்றுகொள்ள இத் தொடர் மக்கட்டாயத்தோடமைவுபெற மறுக்கின்றது. கடுங்கோவை அந்துவனுக்கு மகன் என்றுகொள்ள இத் தொடர் எவ்வாற்றானும் இடந்தரவில்லை: மருகனெனும் ஒருபொருளே இத்தொடருக்கு ஒருதலையாய் அமைந்த பொருளென்பதை இத்தொடர்மொழிகள் நின்று பறையடிக்கின்றன. இப்பொருளிற் பிறபதிகத் தொடர்களெல்லாம் இதனோடு பொருந்தக் காண்பாம். பிறிதுபொருட்கு இப்பதிகம் இடந்தராது. இந்நிலையில் இவையெல்லாம் ஒருங்கு நின்று தெளிவிப்பது மருமக்கட்டாயமன்றி மக்கட்டாயமன்றென்று விளக்கமாகும்.

(V) 5-ஆம் பதிகத்தொடர்ப் பொருட்குறிப்பு,

(1) இனி, எஞ்சிநிற்கும் 5-ஆம் பதிகமொன்று ஆராயக்கிடக்கின்றது. அதன் பொருளையும் ஒருவாறு அளந்தறிய முயலுவோம். இதில் கிளைகிளத்தும் தொடர் "நெடுஞ்சேரலாதற்கு, சோழன்மணக்கிள்ளியீன்ற மகன்" என்று நிற்கிறது. இதில் நிரப்ப வேண்டிய சொற்குறையுண்மை புலப்படுகிறது. நிற்கிறபடி இச்சொற்றொடரில் பொருத்தமும் பொருளும் இல்லை.

(2) இதுவரையில், இப்பதிகத்தலைவனான செங்குட்டுவனை நெடுஞ்சேரலாதற்கும் சோழன்மகள் மணக்கிள்ளிக்கும் பிறந்த மகனென்று இத்தொடர் குறிப்பதாகப் பலரும் கொண்டமைந்தனர். அதாவது:- செங்குட்டுவனுக்குச் சேரல் ஆதனைத்தந்தையும் சோழன் மணக்கிள்ளியைத் தாயுமாகக் கருதிவந்தனர். இம்முறைக்கு வேறு ஆதாரமிருந்தால் அதைக்கண்டபோது விசாரிப்போம். இதுவரையும் பலரும் இத்தொடரொன்றையே இதற்கு ஆதரவாக எடுத்தாளப் பார்க்கின்றோம். இத்தொடர் இப்பொருள் தருமாறில்லை யென்பதுமட்டும் இதைச் சிந்திக்கப் புகுந்தவுடன் தெளிவாகிறது.

(3) இப்போது நிற்குநிலையில் இத்தொடரில் செங்குட்டுவன் தாய் (பெயர்) குறிக்கப்படவில்லை. 'சோழன் மணக்கிள்ளி' ஆண்பாற் பெயர்; அதனால் செங்குட்டுவனின் தாய் பெயராகமாட்டாது. மணக்கிள்ளி என்பது அவன் தாயின் இயற்பெயராகவும், அவளை ஒரு சோழன் மகளாகவும் சிலர் கருதுவர். மணக்கிள்ளி என்னும் சொல் ஒரு பெண்பாற் பெயராய் யாண்டும் வழங்கக் காணற்கில்லை. அதற்கு மாறாகப் பலவிடத்தும் கிள்ளி என்பது ஆண்பாற் பெயராய்ச் சோழ மன்னர் பலருக்குரிய சிறப்புப் பெயராய் வழங்கிவருவது பிரசித்தம். 'வென்வேற்கிள்ளி', 'நெடுங்கிள்ளி', 'கழற்கிள்ளி', 'நெடுமுடிக்கிள்ளி' 'வடிவேற்கிள்ளி', 'இளங்கிள்ளி', 'மாவண்கிள்ளி' எனப் பல பெயருடைய சோழ வேந்தரைச்சுட்டும் பாட்டுக்கள் சங்க நூல்களிற் பல காணலாம். இப்படிச் சில மன்னரின் சிறப்புடைப் பெயராவதுமன்றி, சோழர் குடியரசுக்கே இது நிலைத்த ஒருபொதுப்பெயராகவும் துலங்குகிறது. திவாகரத்தில், கோச்சோழன் பெயர் - "சென்னி, வளவன், கிள்ளி, செம்பியன்" என்று சேந்தனார் கூறிப்போவதனால், இச்சொல் சோழமன்னர் பொதுப்பெயராதல் தெளியப்படும். ஆகவே இப்பதிகத்தொடரில் "மணக்கிள்ளி" யென்பது, யாதொரு பெண்ணையும் குறியாமல் சோழன் பெயராகவே நிற்பதெனக் கொள்ளுதலே முறைமையாகும்.

(4) பின்னும் மற்றைப் பதிகங்களிலெல்லாம் பாட்டுடைத் தலைவரின் தாய்மார் பெயர் சுட்டினும் சுட்டா விடினும், அவ்வவரின் தந்தையர் பெயர் தவறாமற் சுட்டப் படுவது கவனிக்கத்தக்கது. அதன் சிறப்புக்காரணத்தைப் பின்னர் விசாரிப்போம்*. இவ்விடத்தில் மற்றப் பதிகப் போக்குக்கு மாறாக 5-ஆம் பதிகத்தில் மட்டும் தந்தை பெயரைச் சுட்டாமல்விடவும், தாயை மட்டும் மணக் கிள்ளியென விதந்து கூறவும் தனிக்காரணம் ஒன்றுமில்லை. பதிகங்களெல்லாம் ஒரே ஆசிரியர் செய்தனவென்றே ஆராய்ச்சியாளரனைவரும் ஊகிக்கின்றனர். இப்பதிகப் புலவர் பிற இடங்களிலெல்லாம் தாம்கொண்ட முறையை இங்கு மட்டும் கைவிடக் கருதுவானேன்? அவர் நன்றென யாண்டும் கையாண்ட ஒரு துறையை நெகிழாமல் இப்பதிகத்திலும் பின்பற்றியதாகக் கொள்வதே முறையாகும்.

மற்றெல்லாப் பதிகங்களிலும் பாட்டுடைத்தலைவரின் தந்தையர்க்குரிய இயற்பெயரும் சிறப்புப்பெயரும் ஒருங்கே கூறப்படுகின்றன. அதுபோல் இதிலும் கூறப் பட்டிருக்க வேண்டுமெனக் கொள்ளுவது நியாயமாகும். அம்முறையிற் சோழன் என்ற சிறப்புப் பெயரின் பின் மணக்கிள்ளி என்று அவன் இயற்பெயர் சொல்லப்படுவது அவசியமும் பொருத்தமுமாகும்.
------------
*4-ஆம் பகுதி 4-ஆவது உட்பிரிவில் காண்க.

(5) இன்னும் அடியார்க்குநல்லாரும் பிறரும் செங்குட்டுவன் தாய்பெயர் நற்சோணை என விதந்து கூறுகின்றனர். யாண்டும் அவர் மணக்கிள்ளி என்பது அவள்பெயரெனச் சுட்டவில்லை. இவை பலவற்றாலும் ஈண்டு மணக்கிள்ளி யென்பது செங்குட்டுவன் தந்தை பெயராக வேண்டுமென்பதே நிலைபெறுகிறது.

(6) ஆனால் சோழன்மணக்கிள்ளி சேரலாதற்குத் தானே மகப்பெறமாட்டான். ஐயனாரைப்பெறுவிக்கும் அரிகரக் கூட்டம் மக்கட்கில்லை. பெண்ணின்றி இருபுருடர் தம்மளவில் புத்திரப்பேறெய்தற்கில்லை. அதனால், செங்குட்டுவனை ஈன்ற தாயைச் சுட்டுஞ் சொல்லொன்று இத்தொடரில் இருக்க வேண்டுவது அவசியம்.

(7) இனி, மணக்கிள்ளியைப் பெண் பெயராகவே கொள்வதானாலுங்கூட அப்பெயருடைப் பெண்ணுக்கும் சோழனுக்கும் உள்ள முறை குறிக்குஞ் சொல்லெதுவும், இல்லாததால் இத்தொடருக்குப் பொருளில்லாதாகிவிடும் இருவேறு பாலாரிருவ ரியற்பெயர்களின் வெறும்தொடையால் அவர்களின் முறையியைபு தெளியுமாறில்லை. ஆகையால் எப்போதும் அப்பெயர்த்தொடர்கள் தம்மிடை இயைபுயைய முறைப்பெயரைப் பெறினல்லாற் பொருள் தராவாம். அதனாலும் இங்கு ஒரு சொற்குறைவு தெளியப்படும்.*

(8) மேலும் 4,6,7,8 பதிகங்களில் 'தேவி' என்றும் 2,9 பதிகங்களில் மேண்மாள் என்றும் முறைப்பெயர்கள் நின்றே அத்தொடர்கள் பொருள்பயத்தலால், அங்ஙனமே இவ்விடத்தும் அவை போன்றதொரு முறைப்பெயர்ச்சொல் இன்றியமையாததாகும். அதுவும் மற்றைப் பதிகங்களில் வந்தமைந்த முறைப்பெயர்ச்சொற் பொருளுடையதாக இருத்தலே பொருத்தமாகும். எனவே, அது வேண்மாள், தேவி என்பவற்றுள் ஒன்றாகக்கொள்ளுவது தவறாகாது. 'தேவி' என்ற சொல் மணக்கிள்ளிக்கு முன் அல்லது பின் நிற்கவேண்டும். முன்வைப்பின் மணக்கிள்ளிச்சொல் பொருளின்றி நின்றுவற்றும். அதுபெண்பெயராகாமையையும் சோழன் பெயராக வேண்டுமென்பதையும் மேலே தெளிந்தோம். ஆதலால், தேவிபோல்வதொரு முறைப் பெயர் "மணக்கிள்ளி" என்பதன் பின்னும், "ஈன்றமகன்" என்பதற்கு முன்னும் நிற்பதுவே அமைவுடைத்தாம்.
------------------------------------------------
* "சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி யீன்றமகன்என்ற இச்சொற்றொடர் நின்றபடியே நல்லபொருளமை வுடைத்து. பொருட்குறை நிறைப்பதற்காக யாதொரு சொல்லும் இங்குப் பெய்து கூட்டற்கவசியமுல்லை" என்று, இவ்வாராய்ச்சிக் கட்டுரைக்குப்பண்டிதர் திரு.மு. இராகவையங்கார் அவர்கள் எழுதி வெளியிட்ட கண்டனத்தை மறுத்து (செந்தமிழ்த் தொகுதி 28 பக்.277-321ல்) மதுரை உயர்நீதி மன்ற வழக்குவல்லார் திரு. கிருட்டிணசாமி பாரதியார் தாம் வெளியிட்ட மறுப்புரையில், விளக்கிப்போந்தனர். ஒருவாறு இதிற் சிறிதுண்மையுண்டுதான். "நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி யீன்றமகன்' எனுந்தொடர் நின்றபடியே நல்லபொருள் தரக்கூடியதேயாம். செங்குட்டுவனைப் பெற்ற தாயைக் குறிக்குஞ் சொற்பெயரின்றி-யமையாததன்று" என்றும், "அவ்வரசன் தந்தை சோழன்மணக்கிள்ளி தனக்கு மகனாகவும்- சேரலாதற்கு வாரிசான மருமானாகவும்-செங்குட்டுவனை ஈன்றுதவினன்' என் றித்தொடரே விசதமாக்குவதாலும் செங்குட்டுவனையீன்ற சோழன்மணக்கிள்ளி எவ்வாற்றானும் சேரலாதற்கு மனைவியாதல் கூடாதென்பது வெளிப்படையாதலானும் மக்கட்டாயத்தை மறுத்து மருமக்கட்டாயத்தை வலியுறுத்த இப்பதிகத் தொடரே ஏனைய பதிகத் தொடர்களைவிட மிகவு முபகாரப்படுகிறநிலையில், இத்தொடரில் 'தேவி' 'வேண்மாள்' என்ற மனைவிப்பொருள் குறிக்கும் சொல்லொன்றைச் சோழன் மணக்கிள்ளி என்பதையடுத்துப் பெய்தமைக்க வேண்டாவாம் என்றும், அம்மறுப்புரைகாரர் கருதுவதில் பொருத்தமும் பொருளுமிருக்கிறதென்பதில் ஐயமில்லை. எனினும், பிற பதிகங்களிலெல்லாம் கோச்சேரர் குடிப்பிறந்து, பிற குறுமன்னரை மணந்து, சேரமன்னருக்கு அவர் பழங்குடி தழைய வழித்தோன்றலாம் மருமான்மாரை யீன்றுதவும் தாய்மாரை ஒருபடியே சுட்டி, தந்தையொடு தாய்மாரையும் புலவர் விதந்து பாடியிருக்கும் மரபை இப்பதிகத்தில் மட்டும் நெகிழவிட்டுச் செங்குட்டுவனுக்குத் தாயைச்சுட்டாது தந்தை சோழன் மணங்கிள்ளியை மட்டும் குறித்தார் என்று கொள்ளப் போதிய ஆதாரமில்லை. மேலும், நற்சோணை என்பாள் செங்குட்டுவன் தாயென அடியார்க்கு நல்லாரும், அவளை 'ஞாயிற்றுச் சோழன்மகள்' என இளங்கோவும் கூறுவதாலும் ஆண்டு 'மகள்' என்பது மனைவிப் பொருட்டென்பதை இக்கட்டுரையில் கீழே 3-ஆம் பகுதி 6-ஆவது உட்பகுதியில் விசதமாக்கியிருப்பதாலும், பதிற்றுப்பத்தின் மற்றெல்லாப் பதிகத் தொடர்களுடனடைவுபட இவ்விடத்து மமைவதாகக் கோடலே சால்புடைத்தெனக் கருதி நான் இத்தொடரிலும் மனைவிமுறை குறிக்கும் தேவிச்சொல் போன்றதோர் சொற்குறையுண்டெனவே கொண்டு அதைப் பெய்தமைப்பதே முறையெனக் கருதுகிறேன்.
----

அத்தகைய குறைநிரப்புஞ் சொற்பெய்து பாடங்கொள்ளின் இப்பதிகத் தொடர் தெளிவுபெற்றுச் சிறப்பதாகும். ஆகையினாலே இவ்விடத்தில் "சேரலாதற்கு சோழன் மணக்கிள்ளிதேவி ஈன்ற மகன்" என்பது போன்றதொரு பாடம்கொள்வது அவசியமும் அழகுமாகும். இனையதொருசொல் நிரப்பப்பெறாதவரை இத்தொடருக்கு எப்பொருளும் தெளிதற்கில்லை. பெய்தமைத்தால் அது பொருந்தும் பொருள்தந்து சிறந்துநிற்கும். எனவே இப்பதிகத் தொடரால், செங்குட்டுவன் சோழனுக்குத் தநயனும் சேரலாதற்கு மருகனும் ஆவனெனத் தெளியலாகும்.

(vi) மகட்சொல்லின் பொருள்விளக்கம்

(a) இந்தப் பகுதியை முடிக்குமுன்னே இங்கு நாம் கருத வேண்டிய பிறிதொரு செய்தியுண்டு. செங்குட்டுவனுக்குச் சேரத் தந்தையும் சோழத்தாயும் தருபவர் தமது கொள்கைக்கு ஆதாரமாக எடுத்துக்காட்டும் மேற்கோள் வாக்கியம் ஒன்றுண்டு. சிலப்பதிகாரப் பாயிரவுரையில், "சேரலாதற்கு......சோழன்றன் மகள் நற்சோணை யீன்ற மக்களிருவருள் முன்னோன்" எனச் செங்குட்டுவனை அடியார்க்குநல்லார் குறிக்கின்றார். இதிற் குறிக்கும் செய்திக்கு அவ்வுரையாசிரியர் கண்ட ஆதரவை அவர் விளக்கினாரில்லை; என்றாலும் அவருரையின் இத்தொடரை ஆதாரமாக்கி, சேரலாதற்குச் செங்குட்டுவன் தநயனெனவும், அவன்தாய் சோழன் மகளெனவும் சிலர் கருதுகின்றனர். இவர்கொள்கைக்கு ஆதாரமாய்க் காட்டக்கூடிய இதனினும் சிறந்த ஒரு சொற்றொடரும் நான் காணுகின்றேன். இளங்கோவடிகளே தம் நாடகக்காப்பியத்தில் "திகழொளிஞாயிற்றுச் சோழன் மகளீன்றமைந்தன்.........செங்குட்டுவன்"* என்று கூறுகின்றார். அடிகளைவிட அவர்குலமுறையைத் தெளிவிக்கப் பிறர்யாரும் அருகரில்லை. அவர்வாக்கியத்தை எடுத்தெறிய அதிகாரம் எவர்க்குமில்லை. ஆகவே இவ்வாக்கியத்தால் அவருக்கும் அவர்தமையன் செங்குட்டுவனுக்கும் தாயாவாள் சோழன்தநயை என்றே ஏற்படுமானால், இதை ஒப்புக்கொண்டு பதிற்றுப்பத்துப் பதிகப்பாக்களின் ஆதரவைக்கூடப் புறக்கணிக்க வேண்டிவரும். ஏனெனில், அப்பதிகப்பாவலர் சேரர்குலத்துக்கு அந்நியர். அடிகளோ, அக்குடியிற் பிறந்து சிறந்த பெருந்தகை யாராவதோடு, செங்குட்டுவனுக்கு உடன்பிறந்த தம்பியுமாவர். அதனால் இது சம்பந்தமாக அவர்கூற்றே ஏற்ற பெற்றியதாகும். இவருடைய இவ்வாக்கியமே அடியார்க்கு நல்லாருரைத்தொடருக்கும் ஆதரவாயிருக்கலாமெனவும் தோன்றுகிறது. ஆதலால் இத்தொடர்களின் பொருளை ஊன்றி ஆராயவேண்டுவது மிகவும் அவசியமேயாம்.

(b) அடிகளின் மூலவாக்கியத்திலும் அடியார்க்கு நல்லாரின் உரைத்தொடரிலும் வருகின்ற 'மகள்' எனும் சொல் தநயைய்(ப்)@ பொருளிலேயே நிற்குமாயின், இதுவரை நாம்செய்த ஆராய்ச்சியெல்லாம் விழல்நீராகும். அதற்கஞ்சி, அச்சொல்லுக்கு அப்பொருளே அமையுமாயின் அதைக்கொள்ளப் பின்னிடையும் பெற்றியில்லை. பதிற்றுப் பத்துப் பதிகத்தொடர்கள் ஈண்டு மகட்சொல்லைத் தநயை எனக் கொள்ளற்கு இடந்தருமாயின், சங்கையின்றிச் சேரருக்கு மக்கட்டாயமேயுள்ளதெனக் கொள்ளல்கூடும். பதிகங்களோ மருமக்கட்டாயத்தையே சுட்டுகின்றன. 7-ஆம் பதிகத்தொடர் அறவே மக்கட்டாயத்தை மறுத்து மற்றதனையே வலியுறுத்துகின்றது. இவற்றை யெல்லாம் மேலே விசாரித்தோம். பதிகம்பாடிய பழம் புலவர் பிழைத்தனரென்று அவர்பாக்களை எளிதிற் கழித்தற்கில்லை.
-------------------
*வாழ்த்துக்காதை.உரைப்பாட்டுமடை.வரி-2,3.
@'ய'கர மெய்க்குப் பதில் 'ப'கர மெய்வரும் என எண்ணுகிறேன்.

என்றாலும் இளங்கோவடிகளின் சொற்றொடர், மக்கட்டாயத்தை மட்டுமே சுட்டுமாயின், அவரையே தழுவிப் பதிகப்பாவலரை நழுவவிடவேண்டிவரும். ஆனால், அப்படி நழுவவிடுமுன், அவர் பதிகத்தொடரும் இளங்கோவடிகள் சொற்றொடரும் தம்முள் மாறுபடாமல் நின்றமையும் பொருளமைதி பெறக்கூடுமா என்று விசாரிப்பது நமது முதற்கடமை. "பெரும்புலவர் சொல்லாற்றல் மெய்ம்மைபிறழாமற்காக்கும்" என்னும் மரபுண்மையை மறவாமல், முதலில் இவற்றை அமைத்துக் கொள்ளும் முயற்சியை நாம் மேற்கொள்வதே முறையாகும். எவ்வாற்றானும் அமைதிபெற வழிகாணாதவரை, இவற்றுட் சிறந்ததுகொண்டு பிறவற்றைக் கழிப்பது இழுக்காகாது. இம்முறையை இங்கு நாம்மேற்கொண்டு அடிகளுடையவும், அவரைப்பற்றியெழும் அடியார்க்கு நல்லாருடையவுமான சொற்றொடர்களைச் சிறிது ஊன்றி ஆராயப்புகுவோம்.

(c) இந்நெருக்கடியில், இவ்வாராய்ச்சிக்கு உதவியாக, எதிர்பாராத இடத்திலிருந்து நமது ஐய இருளகற்ற வரும் விளக்கத்தைப் பெறுகின்றோம். சங்கப்புலவரான சாத்தனார், செங்குட்டுவன்-இளங்கோவடிகள் இருவருக்கும் சமகாலத்தவர்; அதுமட்டுமில்லை. அவ்விருவர்பழக்கமும் நட்பும் பெற்றவராவர். மாபத்தினியின் மறக்கற்பால் மதுரை அழலுண்டழிந்தபிறகு இவர் சேரநாடுசென்று வஞ்சியிற் கோச்சேரன்வண்மையையும் இளங்கோவின் மதிப்பும் பெற்று வாழ்ந்துவந்தார். அக்காலத்தில் இவர் மணிமேகலைநூலை இளங்கோவுக்குப் பாடிக்காட்டியும், அடிகளின் சிலப்பதிகாரத்தை அவர் பாடக்கேட்டும், ஒருவர்நூலையொருவர் பாராட்டியதாகத் தெரிகின்றோம். அடிகளின் அங்கீகாரச் சிறப்புடைய மணிமேகலையுள் "மகள்" எனும்சொல் "மனைவி" எனும்பொருளில் வழங்கப் பார்க்கின்றோம்.

    "நினக்கிவன் மகனாத் தோன்றிய தூஉம்
    மனக்கினி யாற்குநீ மகளாய தூஉம்
    பண்டும் பண்டும் பலபிறப் புளவால்"
    (மணிமேகலை, காதை-22, வரி 29-31).

எனும் அடிகளிற் சாத்தனார் மணிமேகலையும் உதயகுமரனும் பல முற்பிறப்புக்களிற் சதிபதிகளாக வாழ்ந்த விவரத்தை விளக்குகின்றார். இவ்வடிகளில் 'மகள்' என்பது மனைவியையே சுட்டிநிற்பது வெளிப்படை. மகாமகோபாத்தியாய சாமிநாதையரவர்களும் இவ்வடிகளுக்குத் தாமெழுதிய குறிப்புரையில் 'மகள்' என்பதற்கு 'மனைவி' யென்றே பொருள்வரைந்துள்ளார்கள். இதனால் மகட் சொல்லுக்கு மனைவிப் பொருள் வழக்குண்டென்பது தெளியப்படுகிறது. இன்னும் "கணவன்"-"மனைவி"யெனும் பொருளில் "மகன்"-"மகள்" என்ற சொற்கள் வருமென்பதை 'நோதக வுண்டோ நும்ம னார்க்கினி'* என இளங்கோவும் கூறுதலாலும், செய்யுளிலும் வழக்கிலும் 'மணமகன்'- 'மணமகள்' என்ற பிரயோகங்கள் அடிப்பட்ட ஆட்சி பெறுதலாலும், நன்கறியலாம். ஆகவே, 'மகள்' எனுஞ்சொல் 'மனைவி'யெனும் பொருளில் வருவது அருமையில்லை, ஆன்றசான்றோராட்சியும் தமிழ் நன்மக்களிடை நெடுவழக்கு முடையதென்றே தெரிகின்றது.
-----------
*சிலப்பதிகாரம்-கொலைக்களக்காதை-வரி-17.

(d) இப்பொருளில் அடிகள் வாக்கும் அடியார்க்கு நல்லார் உரைத்தொடரும் பதிற்றுப்பத்துப் பாக்களோடு எவ்விதப் பிணக்குமின்றிப் பொருந்தியமைகின்றன. "சோழன்மகள்" என்பதற்குச் "சோழன்மனைவி"யென்று பொருள்கொண்டால், சோழனுக்கு அவன் தேவியீன்ற மக்கள் சேரனுக்குத் தநயராகார். மருகரேயாவரென்பது விசிதமாகும். எனவே "சேரலாதற்குச் சோழன்மகள் ஈன்ற மகன் செங்குட்டுவன்" என்ற பிரயோகத்தை மட்டும் வைத்துச் சேரலாதற்குச் செங்குட்டுவனை நேரே தநயனாகவும், சோழனுக்கு அவனை மகள்' பிள்ளை பேரனாகவும் கொண்டு தீரவேண்டிய அவசியமேற்படவில்லை. எனவே, சிலப்பதிகாரத்தில்வரும் இம்மகட் சொற்பிரயோகம் பதிற்றுப்பத்துப் பதிகக் குறிப்புகளோடு முரணுவதாகக் கொள்ளவேண்டா. இப்பதிகத்தொடர்கள் சேரர் குடியில் ஒருதலையாக மருகர் அல்லது வழித்தோன்றல்களையே சுட்டுவனவாகவும், அப்பதிகத் தலைவர் சேர மன்னருக்குத் தநயனாகார் மருகரேயாவரென விளக்குவனவாகவும் தாமே தெளியத் தெரிக்கின்றன. சிலப்பதிகாரப் பிரயோ கங்களும் இத்தகைய முறையைத் தழுவ அமைவனவாகக் காண்கின்றோம்.

(7) மற்றுமோரையமகற்றல்.

இனி, 'நுந்தை தாணிழ லிருந்தோய் நின்னை' என்று வரந்தரு காதையில் இளங்கோவும், 'நிமித்திகன்........ சேர்தி நீயெனச் சேரலற் குரைத்தவன் மைந்தரைநோக்கி நந்தாச்செங்கோ லந்தமிலின்பத் தரசாளுரிமை யிளையோற் குண்டென' என்று பதிகவுரையில் அடியார்க்கு நல்லாரும், இமையவரம்பனையும் செங்குட்டுவன் இளங்கோ என்பாரையும் முறையே 'நுந்தை', 'மைந்தர்' எனச்சுட்டிக் கூறியதைக்கொண்டு, இவர்கள் அவனுக்குப் புதல்வரேயாக வேண்டும் எனச் சிலர் வாதிக்க வரலாம். ஆனால், இவ்வாராய்ச்சியில் எவ்வித முடிபையும் இச்சொற்களைக் கொண்டு துணிதற்கில்லை. தந்தை நுந்தை எந்தை என்பன முன்னோன் உன் தலைவன் என்னிறைவன் என்ற பொதுப்பொருளில் மேம்பாட்டுச் சொற்களாயும், 'மைந்தர்' என்பது ஆண்மக்கள் ஆண்சிறார் என்று குறிக்கும் ஒரு பாராட்டுப் பொதுச்சொல்லாயும், சான்றோர் பாட்டுக்களிற் பெருவழக்காய் வருகின்றன. இவை 'பிதா' 'புதல்வர்' என்ற முறையைமட்டும் யாண்டும் சுட்டிநிற்கும் நியதியுடையனவல்ல. 'எந்தை வாழி ஆதனுங்க' என்று வேங்கடத்து வேள் ஒருவனைப் புலவர் ஆத்திரையனாரும், 'அஃதை தந்தை அண்ணல்யானை அடுபோர்ச்சோழர்' எனப் பிறரும் பாடியதும், இனைய பல பிறவும் கொண்டு, நுந்தைச்சொல்,-உன் இறைவன்-உன் முன்னவன் -என்ற பொருளில் அமையுமெனத் தெளிகின்றோம். 'மாந்தர் மைந்தர் மக்களாண் பொதுப்பெயர்' எனும் திவாகரச் சூத்திரத்தால், மைந்தர்-ஆண்மக்களின் பொதுப்பெயரென்று அறிகின்றோம். ஆகவே, 'நுந்தை' 'மைந்தர்' என்ற சொற்களை வைத்துச் செங்குட்டுவனும் அவன் தம்பி இளங்கோவும் நெடுஞ்சேரலாதற்கு நேரே பெற்ற புதல்வராவரென வரையறுத்து முறைகொள்ள இயலாது. மருமான்மாராய மைந்தருக்கு அவர்தம் குல முதல்வனான அம்மான்கோவை 'நுந்தை' என்று சுட்டுவது தவறாகாது, தகவுடையதேயாகும். பிதா-புதல்வர் என்று தெளிவாக விதந்துசுட்டும் வேறு பிரயோகம் ஒன்றும் சேரரைப் பற்றிய பழம்பாட்டுக்களில் யாண்டும் இன்மையால், ஈண்டும் அம்முறையை இச்சொற்களால் மட்டும் அமைத்துக்கோடற்கு அவசியமில்லை. ஆகவே, இதுவரை செய்த இவ்வாராய்ச்சியாற் மக்கட்டாயமுடையராகத் தெளிவிக்கும் சான்றுகளெதுவுங் கிடையாமையோடு, அவர் மரபினர் மருமக்கட்டாயத்தினரேயாவரென்று ஒருவாறு துணியப் போதிய ஆதாரமும் கண்டோமாவோம்.


பகுதி 4. பிற சான்றுகள்.


இதுவரையில் பதிகத்தொடர்களின் சொல்லமைப்பையும் ஆற்றலையும் கொண்டு அவற்றைத் தனித்தனியே ஆய்ந்துவந்தோம். இனி இவ்வாராய்ச்சிக்குப் பொது நின்றுதவும் சில செய்திகளையும் துணைக் கொள்கைகள் சிலவற்றையும்
இங்கு விசாரிப்போம்.

துணைச்சான்றாய்ச் சேரர் தாய்வழித்தாயமுறை துலக்குஞ் செய்திகளாவன:-

(1) பதிகங்குறிக்கும் சேரர் தாய்மார் பாட்டுக்களில் சுட்டப்பெறாமை.

(1) பதிற்றுப்பத்துப் பாட்டுக்களில், சேரலாதன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் செங்குட்டுவன் செல்வக் கடுங்கோவாழியாதன் இரும்பொறை இளஞ்சேரலிரும்பொறை என்ற பாட்டுடைச் சேரவேந்தர்பலர் பெயர்கள் குறிக்கப்படுகின்றன. 'நன்னுதல் கணவ', 'நல்லோள் கணவ', 'புரையோள்கணவ', 'ஒண்டொடிகணவ', 'நின் பேரியலரிவை', 'நின் கற்பின் மாணிழையரிவை', வாணுதலரிவை யொடுகாண்வர' என்று அவர் பலரை அவரவர் மனைவிமார் கற்புறுகாதற்சிறப்பாற் சுட்டியும் அவரைப் பாடிய புலவர் பாராட்டிச்செல்கின்றனர். எனினும் பதிகத்திற் குறிக்கப் பெற்ற வெளியன்வேணமாள் - நல்லினி, பதுமன்தேவி, சோழன்மகள் நற்சோணை, வேண்மாள்- அந்துவஞ்செள்ளை முதலிய பெண்டிர்யாரும் யாண்டும் எச்சேரருக்கும் மனைவியராகச் சுட்டப்பெறாமை ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. இப்பெண்மணிகள் கோச்சேரருக்குரிய பெருந்தேவிமாராயின், அச்சேரரைப்பாடும் புலவர் அவர் பெண்டிரைச் சுட்டிப் பாராட்டும் பல இடங்களில் யாண்டேனும் இப்பெருமாட்டிகளுள் யார்பேரையாவது ஒரு புலவரேனும் சுட்டாமல், எல்லோரையுமே எல்லாப் புலவருமே மறந்துவிட்டு, பிற்குறிப்பாகப் பதிகப்பாட்டுக்களில் மட்டும் இவரை விதந்துகூறுவானேன்? உண்மையில் இப்பெண்மைப் பெருந்தகையார் கோமன்னர்மனைவிமாராயின், பாட்டுடைத்தலைவரின் பெண்டிரைச் சுட்டி 'இன்னவள் கணவ' என்று விதந்துபாராட்டு மிடங்களிலேனும் பாடும் புலவர் இவர்களை விசதமாகச் சுட்டாமல் விட்டிராரன்றோ? இப்பெண்டிர்யாரும் மூலப்பாட்டுகளில் யாண்டும் கோச்சேரர்யாருக்கும் மனைவியராகக் குறிக்கப் படாமையாலேயே இவரைச் சேரமன்னவருக்கு மனைவியராய்க் கருதுவது தவறு என்று தெளியலாகும். இக் கோப்பெண்டிர் சேரருக்குத் தாயரும் சோதரிமாரும் ஆவதன்றி மனைவிமாராகார் என்பதை முன்பதிகப்பாக்களின் ஆராய்ச்சியால் ஒருவாறு துணிந்துகொண்டோம். அத் துணிவை, மூலப்பாட்டுக்களில் இவர்பெயர் துலங்காமல் பாட்டுடைச்சேரரின் கற்புடை மனைவிமார் பிறரை அப்புலவர் பாராட்டிப்போவது இன்னும் அதிகம் வலியுறுத்துவதாகும்.

(2) மருமக்கட்டாயமுடைய சேரர்குடியில் மனைவி மார்க்குப் பெரும்பதவி யொன்றுமில்லை. அம்மனைவியரின் வயிற்றுமக்களும் சேரர்குடிதாங்கும்பெற்றி பெறார். வேந்தர்க்குத் தேவியராவதல்லால் மனைவியர்க்குக் கோக்குடியில் வேறுவித உரிமை இல்லை. அரசியராம் பதவியொடு குடிதழைய மகப்பெற்றுதவும் பெருமை கோச்சேரர் சோதரிமார், அவர்வயிற்று மருகியர்கள் இவர்கட்கே உரியதாகும். அதனாற்றான் சேரரைப்பாடும் புலவர், தம் மூலப்பாட்டுக்களில் அவர் மனைவியர் பெயர் விளக்கமுறத் துலக்காமற் பாடிப்போவார். கோவேந்தர் தாய்மாரைச் சுட்டுங்கால், அத்தாயர் கோக்குடியிற் பெண்வழியில் அரசியராய் பதவியுள்ளாராதலாலே பதிகப் பாட்டுக்களில் அவர்பெயர்கள் உறவுமுறை பதவியொடு பெருமை யெல்லாம் விளக்கமுறப் பேசப்பெறுகின்றன.

(3) மருமக்கட்டாயமுடைய பெருங்குடிப் பெண்டிர் ஒத்த தகவுடைய பிறிதுகுடிப் பெரியாரை வாழ்வர். மணந்து அப்பெண்டிர் பெறும் மக்கள் தாய்க்குடியில் மாமன்மார்க்குப் *பிறங்கடைகளாகிநிற்பர். தம் தந்தையர்குடியில் அவர்க்குத் தொடர்புரிமை யாதும் இல்லை. கோச்சேரர்குடிப்பெண்டிர், பெரும்பாலும் அக்கோக்குடியில் மகள்கொள்ளற்குரிய தகவுடைய குறுமன்னரான வேண்மாரை மணப்பர்; சிறுபான்மை பிறகுலத்து முடிமன்னர் தமையும் அவர் வேட்டல்கூடும். இவர் யாரைமணந்தாலும், இப்பெண்கள் பெறும் ஆண்மக்கள் எல்லாரும் சேரருக்கு மருகராய்ச் சேரநாட்டில் வழிமுறையே அரசுரிமைக்கு அருகராவர்.
----------------------
*பிறங்கடைகள்-வாரிசுகள்.

(4) மாதுலச்சேரரொடு மருகச்சேரரைமட்டும் சுட்டி, அவர் தந்தையரைத் துலக்காவிட்டால், அவர் தாயரை மணந்தகணவரில்லாத மகளிராகக் கருத நேருமாகையால் அவ்விழிதகவை அற விலக்கி, "மக்கட்டாய முடைய தமிழகம் மதிக்க மணந்து சிறந்த கற்புடைத் தாய்க்குடிப்பெருமையுடையர் பாட்டுடைத்தலைவ"ரென விளக்கும் பெற்றி வேண்டப்படுகிறது. அதனாலே அக்கோச்சேரர்குலம் விளக்கும் பதிகங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோச்சேரன் தாயையும் அவன் தந்தையொடு விளக்கி, அவ்விருவர் பெற்ற மகன் இனையன் எனத் துலக்கி, இன்ன பெருங்கோச்சேரற்கு இவன் மருமான் எனக்குறித்து, விவரமெல்லாம் விளக்கமுற விரிக்கின்றது. ஒவ்வொருபதிகமும் பாட்டுடைத்தலைவனின் இரு முதுகுரவரையும் விதந்துகூறி, அதன்பின் அவனை அவரீன்றமகனென ஒருபடியே தெரிநிலைமுறையிற் குறித்துப் போகின்றது. அன்றியும், அவன்முன் தோன்றலான கோச்சேரனை முதலிற்கூறி, பின் பெற்றோர்பெயர் கூறி, அச்சேரனுக்கு அப்பெற்றோர் ஈன்றுதவியமகன் எனப் பதிகந் தோறும் தவறாமற் கூறிப்போவதால், அப்பாட்டுடைத் தலைவன் கோச்சேரனுக்கு வழித்தோன்றலான மருகன் என்பதும் குறிப்பு வகையால் துலக்கப்படுகிறது.

(2) பதிற்றுப்பத்துச்சேரரின் ஆட்சிமுறை

இனி இப்பதிகங்கள் கூறுமரசர் வரிசையைச் சிறிதாராய்வோம். சேரசிம்மாதனத்தில் உதியஞ்சேரலுக்குப்பின் இமையவரம்பனும், அவனுக்குப்பிறகு அவன் தம்பி பல்யானைச்செல்கெழுகுட்டுவனும் முறையே ஏறினரெனவும், இவருள் இளையோனாகிய குட்டுவனும் ஆண்டு முடிந்தபின்னரே இவரிருவருக்கும் தொடர்புடைய பதுமன் தேவிமக்களிருவரான நார்முடிச்சேரலும், ஆடுகோட் பாட்டுச் சேரலாதனும், அவர்களுக்கிடையே சோழன் மணக்கிள்ளிதேவி மகன் செங்குட்டுவனும் முறையே அரசு கட்டிலேறி நாடாண்டனரெனவும் தெரிகிறது. மற்றொரு கிளைச்சேரர் வழிமுறையில் அந்துவன்சேரல் முதல் இளஞ்சேரலிரும்பொறை யீறாக நான்கரசர் வரன்முறையாய் ஆட்சிபுரிந்தனரெனவும் விளங்குகிறது. இவற்றைக் கொண்டு இமையவரம்பனுக்குப் பதுமன்மகளும் சோழன் மகளும் மனைவியராய் மக்கள் மூவரைப் பெற்றுக் கொடுத்தனரெனவும், அம்மக்கள் தம்தந்தை சிறிய தந்தை இருவரும் ஆண்டபிறகு முறையே நாம் முடி புனைந்து தனித்தனியே எல்லாரும் சேரநாட்டை ஆண்டனரெனவும், அதுவேபோல அந்துவஞ்சேரலுக்குக் கடுங்கோவும், அவனுக்குப் பெருஞ்சேரலிரும்பொறையும் அவனுக்கு இளஞ்சேரலிரும் பொறையும் வழி முறையே மகன் மகனாய்க் கிளைச்சேரர் சிறுநாட்டை ஆண்டு வந்தனரெனவும் ஒருசிலர் கருதுகின்றனர்.

ஆனால், ஆழ்ந்து சீழ்ந்து நோக்குங்கால் உண்மை வேறாகத் தோன்றுகிறது. இமைய வரம்பனும் அவன் தம்பியும் வேள்வெளியனுக்கு மக்கள். இவர் தம் மாமன் உதியஞ்சேரலுக்கு மருகராய், அவனுக்குப்பின் சேரநாட்டுரிமை பெற்று, ஒருவர்பின் ஒருவராய் ஆண்டனர். அவருக்குச் சோதரிமுறையினரான அவர்கோக்குடிப் பிறந்த பெண்டிருள் ஒருத்தி வேள்பதுமனையும் மற்றொருத்தி சோழனையுமாக மணந்து மக்களைப்பெற்றனர். அம்மக்கள் தம் தாயர்குடிச் சேரமன்னருக்கு வழிமுறையில் மருகராகையால், மாமன்மாரிருவரும் தத்தம் முறையில் ஆண்டு முடிந்தபின்னர் மருகருரிமையில் வரிசை முறையாய்த் தாமும் சேரசிங்காதனம் ஏறுகின்றனர். பதுமன்தேவி ஒருத்தியே-சேரர்பெருங்குடியில் இமைய வரம்பனுக்குச் சகோதரியாயும்-கிளைச்சேரர்குடியிற் கடுங்கோவுக்குச் சோதரிமுறையுடையளாயும் நின்று, தான்பெற்ற மக்களுள் ஒருவனைத் தன்குடியில் மருகனில்லாத கடுங்கோவுக்கு மருகனாய் அவன் கிளைக்குடிதழையக் கொடுத்துதவியிருக்கலாம். அல்லது வேள்பதுமனுக்குக் கோக்குடி நெடுஞ்சேரலாதன் சோதரி ஒருமனைவியும் கிளைச்சேரர்குடிக் கடுங்கோவின்சோதரி ஒரு மனைவியுமாயிருந்து அவரவர் தாய்க்குடியைத் தாங்க இவ்விருமனைவிமாரும் பதுமனுக்கு மக்களைப் பெற்றுமிருக்கலாம். எப்படியாயினும், இம்மக்கள் ஒவ்வொருவரையும் பதுமன்தேவி மக்கள் எனச் சுட்டுவது தவறாகாது. இவ்விருகுடியிலும் இவ்வாறு மாமன்மார்க்கு மருகர்-வழித்தோன்றல்களாய் நின்று, வரன்முறையே நாடாண்டனர். இதுவே இப்பதிகத் தொடர்கள் தெரிவிக்கும் செய்தியெனத் துணியக் கிடக்கிறது. இப்பதிற்றுப்பத்துச் சேரரின் ஆட்சிமுறையால் இத்துணிவை வலியுறுத்தி, இதற்கு மாறான மக்கட்டாயக்கொள்கையை நலிவிக்கும் நியாயங்கள் சிலவற்றை இங்கு நிதானிப்போம். அவை வருமாறு:-

(1) மக்கட்டாயமுடைய கோக்குடியில், மயின் முறையாய் முதல் மகனின் முதல்மகனே வழிமுறையே அரசுபெறற்குரிமைபூண்பான், கோலோச்சுங் கோவேந்தற்கு ஆண்மக்கள் பிறந்திருக்க, அவரை விலக்கி வேந்தனுடன் பிறந்தவர்கள் நாடாளுமுரிமை கொள்ளார், மருமக்கட்டாயக் குடியாமேல் உடன் பிறந்தாரனை வருமே வரிசை முறையில் ஆண்டுமுடிந்தபிறகுதான், அடுத்த கீழ்ப்படியிற் சோதரிமார் மக்கள்-அநந்தரவராகிய மருகர்கள்-ஆட்சிபெறுவர்.

இம்முறையிற் பதிற்றுப்பத்திற் பாடப்பெற்றுள்ள சேர பரம்பரையைப் பரிசோதித்துப் பார்ப்போம். சேரரை மக்கட்டாய முடையராய்க் கருதுபவர் எண்ணுகிறபடி 2-ஆம்பதிகத்தலைவனான இமையவரம்பன் நெடுஞ் சேரலாதனுக்கு, பதுமன்மகன், மணக்கிள்ளிமகள் எனும் இருமனைவியரால், -களங்காய்க்கண்ணிநார்முடிச்சேரல், செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் என மூவர் மக்கள் உளர். இருந்தும், இவர்களை விலக்கி இவர்தம் சிறிய தந்தையான பல்யானைச்செல்கெழுகுட்டுவன் முடி சூடி 25 ஆண்டு அரசு வீற்றிருக்கின்றான். அவனுக்குப் பிறகுதான் அவன் தமையன்மக்களான இம்மூவரும் நாடாட்சி பெறுகின்றனர். இது மக்கட்டாய அறமுறையில் நிகழொணாதது.

ஆனால், சேரர் மருமக்கட்டாயமுடையராகில், பதிற்றுப்பத்தில் நாம் காணும் முறைதான் அறமுறையாகும். இமையவரம்பனுக்குப்பின் அவன் தம்பியே தாய்வழித் தாயக்கிரம உரிமையில் அரசனாகவேண்டும். அவ்விருவர்களுக்கும் பிறகே, அவர்களின் மருகர்கள் தங்கள் வயதுக் கிரமவரிசைப்படி ஒவ்வொருவராய் முடிபுனைந்து நாடாள்வர். மேலேநாம்கண்டபடி, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் இவர்களின் தாய் சேரர்கோக்குடிப் பிறப்புடையவள், பதுமனுக்கு மனைவி. ஆவிக்கோமான் பதுமன் எனும்வேளுக்கு வாழ்க்கைப்பட்டு, அவனால் இவர் சேரர்கோக்குடிக்கு இருமக்களை ஈன்றுதவினள். அதுவேபோல் நற்சோணை என்பாளும் சேரர்குடிப்பிறந்து சோழனை மணந்து வாழ்ந்தவளாகும். அவளீன்ற மக்கள் செங்குட்டுவனும் இளங்கோவும் ஆவர். இளங்கோ துறவுபூண்டு அடிகளாகவே, அத்தாய்வழியிற் கோலுரிமைக்குடையவன் குட்டுவன்மட்டுமே யாகிநிற்பன். இவர்கள் தாய் நற்சோணையும் வேள்பதுமனின்மனைவியும் சேரர்குடியில் மணந்து புகுந்த பிறகுடிப் பெண்டிரில்லை, அக்குடியிற் பிறந்து சிறந்த பேரரசிமாராவர். அவர்கள் வயிற்றுதித்த மக்களான மூவரும் இமையவரம்பனுக்கும் அவன் தம்பி குட்டுவனுக்கும் பிறங்கடையரான மருகராவர். ஆகவே தங்கள் மாமன்மாரான அவ்விருவரும் ஆண்டுமுடிந்தபிறகு இம்மருகர் மூவரும் வழி முறையில் தம் மரபு நியதிப்படி ஆட்சிபெறுகின்றனர். இது அறமும் அடிப்பட்ட குடிவழக்குமாய்ப் பொருத்தமும் சிறப்பும் பெற்று அமைகின்றது. இவர்களுக்குமுன் இமையவரம்பனுக்குப்பின் இவர்தம் இளைய மாமனான செல்கெழுகுட்டுவன் நாடாளுவதில் வரிசை முறைப்பிறழ்ச்சியில்லை. இவர்தம் ஆட்சிமுறையில் தாய்க்குடித் தாயமுறையறமே பேணி ஓம்பப்படுகின்றது.

(2) மேலும், இம்மூவருக்கும் தாம்பெற்ற தநயர் இல்லையென்று யாண்டும் துலக்கப்படவில்லை. இவருட் செங்குட்டுவனுக்கு அவன் பெற்ற மகன் இருந்ததாக 5-ஆம் பதிகம் விதந்தும் கூறுகிறது. அவ்வாறு தநயர் உளராயின், மக்கட்டாயமுறைப்படி தந்தைக்குப் பிறகு உடனே உரியதநயரே முடிசூடவேண்டுவதன்றி, இவ்வாறு சோதரர்மூவரும் தம்முள் வரிசைமுறையில் ஒவ் வொருவராய் ஆட்சி பெறுவது அவசியமும் அறமும் இல்லை. தம் தநயரைவிலக்கி இம்மூவரும் முறையே ஆண்டதும், இவர்களை விலக்கி இவர்களுக்கு முன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆண்டதும் இவர் குடியில் மருமக் கட்டாயம் உண்மையையும், அம்முறையில் இவர்களுக்கு உள்ள தாய்வழித்தாய உரிமையையும் நன்கு வலியுறுத்தும்.

(3) இன்னும், மக்கட்டாயமுறையிற் கடைசியில் ஆண்ட அரசனின் அடுத்த பிறங்கடை(வாரிசு)க்குத்தான் அடு்த்த பட்டம். ஒருதாய்வயிற்று மக்கள் மாற்றாந்தாய் வயிற்று மக்களைவிட நெருங்கிய தொடர்புடையர்; அதனால் சிறந்த உரிமையும் அடைகின்றனர். அற நூல்விதியும் ஆட்சியும் நமது நாட்டில் ஒருதந்தைமக்கள் பலருள், ஒருவருக்கு சகஉதரரல்லாதாரை விலக்கி, அவருடன் ஒரு வயிற்றுதித்தாரையே அவருக்குச் சிறந்த பிறங்கடைகளாக்கி நிற்கும். எனவே, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலுக்கு ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் சகோதரன்; செங்குட்டுவன் மாற்றாந்தாய் மகன். இவர்களெல்லார்க்கும் தந்தை இமையவரம்பனாயின், அவனுக்குப்பின் அவன் மக்கள்மூவருள் மூத்தவனே சிறந்தபிறப்புரிமையுடன் பட்டமெய்துவன். அவனுக்குப் பின் அம் மூத்தமகனுடைய வாரிசுக்குப் பட்டமிறங்குவ தல்லது, அவ்வாரிசுகளை விலக்கி, முந்தியதந்தையின் வாரிசுகளுக்குப் போவது முறையில்லை. செங்குட்டுவன் மூத்தவனாயிருந்தால், முதலில் அவனே முடிபுனைந் திருப்பான். அவனுக்குப்பின் அவன் தநயரும் அவனுக்கு ஒருவயிற்றுத் தம்பியருமே ஆட்சிபெறுவர். இவர்க்கு முன்னே அவன் மாற்றாந்தாய்மக்களுக்கு உரிமையில்லை. ஆனால், செங்குட்டுவனுக்குமுன் நார்முடிச்சேரல் ஆண்டிருப்பதாய் அறிகின்றோம். அதனால் அவனே வயதில் மூத்தவனாகப் பட்டமெய்தினான் என்று தெரிகிறது. அவனுக்குப் பின் அவன் தநயரும், தநயரில்லையானால் அவனுக்கு ஒரு வயிற்றுத்தம்பியான ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுமே அவன் அரசு பெறுதற்குச் சிறப்புரிமையுடையவராவர். இவர்களைவிட்டு இடையே செங்குட்டுவன் ஆட்சி பெறுதற்கு அவசியமும் நியாயமும் இல்லை.

ஆனால் மருமக்கட்டாயக்குடியில் இவர்கள் கோச்சேரருக்கு மருகராவர். ஆகவே வயதுக்கிரமப்படி இம்மூவரும் ஆட்சிபெற்றுத் தீரவேண்டும். மருகருள் ஒருவயிற்றுதித்ததால் மட்டும் யாருக்கும் எவ்விதச் சிறப்புரிமையும் ஏற்படாது. வயது முறைவரிசையில் மட்டுமே அவரவர் ஆட்சியுரிமை வரையறுக்கப்படும். ஆளும் அரசருக்கு மக்கள் இருந்தாலும் அம்மக்களுக்கு உரிமையில்லையாகவே, ஒருவர்பின்னொருவராய்ச் சோதரரும் சோதரருக்குப்பின் அவர்தம் மருகருமே ஆட்சிபெறுவர். பதிற்றுப்பத்துப் பதிகங்களால் இவர்மூவரும் முறையே சேரநாட்டை ஆண்டதாயும், இவருள் ஒருவயிற்றுடன் பிறந்தார் இருவர்க்கிடையே ஒருவயிற்றுதியாத செங்குட்டுவன் ஆட்சிபெற்றதாயும் அறிகின்றோம். இவையெல்லாம் மருமக்கட்டாயத்தொடு பொருந்துவனவன்றி, மக்கட்டாயமுறைக்கு ஒவ்வா. இவற்றாலும் சேரர்குடியில் மக்கட்டாயம் வழங்க வில்லை என்பது உறுதிபெறுகிறது.

(3) சேரமன்னரை யாண்டும் தந்தைக்குத் தநயரென்னாது
முன்னவற்கு மருகரெனவே கூறுமரபின் குறிக்கோள்.

இதை வலியுறுத்தும் செய்தி இன்னுமொன்றுஉளது. பதிற்றுப்பத்திலும் மற்றும் பண்டைச் சங்கநூல்கள் பலவற்றிலும் சேரரைக் குறிக்கும் பாட்டுக்கள் பல. அவற்றுள் ஒன்றிலேனும் ஒரு சேரனையாவது அவன் தந்தைக்கு மகன் என்று சுட்டுங்குறிப்பே கிடையாது. அதற்குமாறாக முன்னரசரின் தொடர்புகுறிக்கு மிடத்திலெல்லாம் பாட்டுடைச்சேரனை அம்முன்னோரின் "மருகன்" எனவே எல்லாப் பழம்புலவரும் யாண்டும் ஒருபடியே சுட்டிப் போகப் பார்க்கின்றோம். இது மிகவும் சிந்திக்கத்தக்கது.

"மருகன்" என்பது வழித்தோன்றல் என்ற பொருளுடைய சொல்லாகையாலும், அடுத்த தந்தையைச் சுட்டாமற் புகழ்சிறந்த மூதாதையரையே சுட்டித் தொடர்புகாட்டுவது புலவர்முறையாகையாலும், அம்முறையிற் பாட்டுடைத் தலைவரை அம்முன்னோருக்கு மருகரெனவே சுட்டிப் பாடுகின்றனரெனச் சிலர் சமாதானம் காட்டவரலாம். எனில், சேரகுலத்தில் புகழ் படைத்த ஒரு சேரலற்குப் புகழ்படைத்த பெருமக்கள் ஒருவருமே எஞ்ஞான்றும் பிறக்கவில்லை யென்றாவது, அடுத்துப் பெரும்புகழ்கொண்ட இருதலைமுறைச் சேர வேந்தரைப் பாடப் புலவரில்லை யென்றாவது கொள்ளுவது அசம்பாவிதம். பதிற்றுபத்துப் பதிகப்பாட்டுக்களை மககட்டாயமுறையிற் பொருள்கொள்ளுவோரே இமையவரம்பனுக்குப்பின் அவனை யொத்துப் பாடல்பெறும் புகழ்படைத்த மூவர்மக்கள் இருந்தனரென்றும், அந்துவன்சேரல்முதல் இளஞ்சேரலிரும்பொறைவரை நாலு தலைமுறையாக ஒவ்வொருசேரனுக்குக்ம் பாடப்பெறுஞ் சிறப்புடைய பெருமகனே பிறந்து புகழ்சிறந்துளனென்றும் கூறுகின்றனரே. இப்பெருமக்கள் பலருள் யாரேனும் ஒருவனைப்பாடிய புலவர்கூட அவனை அவன்பெருந் தந்தைக்கு மகனெனச் சுட்டிப் பாடாததற்குக் காரணம் என்ன? ஒவ்வொரு பதிகத்தலைவனுடைய மனைவியின் தந்தையைக்கூடப் புலவர் தவறாமற் சுட்டிச் சிறப்பிப்பதாக இப் பதிகத்தொடர்களுக்குப் பொருள்கொள்ளுகிறவர்கள், அச்சேரருக்கு முன் பெரும்புகழ்படைத்துப் பல புலவராற் பாடப்பெற்ற அவர் தம் தந்தையரின் தொடர்பை மட்டும் எல்லாப்புலவரும் ஒருபடியாக மறைத் தொதுக்குவானேன்? மக்களைப்பாடும் புலவரெல்லாரும், அம்மக்களினும் புகழ்சிறந்த அவர்தம் தந்தையரை அறமறந்து ஒதுக்கிவிட்டு, பெயர்சுட்டும் பெற்றிபெறாப் பெண்டிரையும், அப்பெண்டிர் பிதாக்களையும் தம்பாட்டுக்களில் மறவாமற் பாராட்டுவானேன்? போகட்டும். ஒரு தலையாகப் பாடும் சேரரின் முன்னோரை மதியாமல் விட்டொழித்து, அச்சேரர்காதற்பெண்டிரோடு அப்பெண்டிர் தந்தையரை மட்டுமே பழம்புலவரெல்லாரும் பாராட்டினர் என்றாவது கொள்ளக்கிடந்தாலும் ஒருவாறு அமைதிபெறலாம். உண்மையிற் புலவர் பலரும் தம் பாட்டுடைத் தலைவரின் முன்னோரை விட்டபாடில்லை. அன்ன பெருமுன்னோரைச் சுட்டி, அவர்மருகரெனப்பாட்டுடைத் தலைவர்தமை விதந்து பாராட்டிப்போக நாம் பார்க்கின்றோம். பதிற்றுப்பத்திலே அத்தகைய குறிப்புக்கள் பல வருகின்றன. இதனை ஊன்றிச் சிந்திக்கும்போது மக்கட்டாயமுறை இக்கோச்சேரர்குடியில் இல்லாமையே இவ்வாறு சேரரெல்லாம் மருகரெனவே பாடப்பெறுதற்குக் காரணமென்று தெரிகிறது. இளஞ்சேரலிரும்பொறையைப் பெருஞ்சேரலிரும்பொறையின் மகனென்னாது 'விறல்மாந்தரன் விறன்மருகன்' என்று பெருங்குன்றூர் கிழார் பாடத் தக்ககாரணம் இம்மருமக் கட்டாயமன்றிப் பிறிது காணல் அரிது.


பகுதி 5. மருகன் என்ற சொல்லின் பொருளாட்சிகள்.


ஊன்றிச்சிந்தித்தால், 'மருகன்' என்னும் சொல்லுக்கு "வழித்தோன்றல்" என்னும் பொருளே இம்மருமக் கட்டாய வழக்கால் வந்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. மருகன் எனும் சொல், நேரே சோதரிமகனையும், மகள் மணவாளனையுமே குறிப்பது மரபு. அந்நேர்பொருளில் வழங்குவதோடமையாமல் அச்சொல் சில புலவர் செய்யுள்களில் மக்கட்டாயக்குடிகளில் வழித்தோன்றலாவாரைச் சுட்டவும் வருகின்றது. மக்கட்டாயநாடுகளில் மருகர் மாமன்மார்க்கு என்றும் வழித்தோன்றலாகமாட்டார். மருமான்மார்க்குரிய பெயர்ச்சொல் அவ்வுறவுமுறைக் குரிமையின்றித் தம் தந்தைக்குத் தநயராய் வழித் தோன்றலாவாரைக் குறிக்கப்பெறுவானேன்? மக்கட்டாய முறையில் அச்சொல் அப்பொருளி லாட்சிபெறும் ஆற்றலும் ஆறும் இல்லை. மருமக்கட்டாயவழக்கம் தமிழகத்தில் உளதாயின் அம்முறையில் வழித்தோன்றலாவார் மருகரே யாகையால், நாளடைவில் "மருகன்" எனும்சொல், மருமான்-எனும் முறைசுட்டும் தன்நேர்பொருளை மட்டுமன்றி, வழித்தோன்றல் எனும் சார்புப்பொருளையும் வழக்காற்றாற்பெறுவது இயல்பாகும். பிறகு இருதாயக் குடிகளிலும் தாயமுறையைக் குறியாமலே பிறங்கடை (வாரிசு) ஆவார் எவரையும் வழித்தோன்றல் எனச்சுட்டும் பொதுச்சொல்லாகி வழங்கப்பெறும். இதுவே இச் சொல்லுக்கு இப்பொருள் கிடைத்த வரலாறாக வேண்டும். என்றும் யாண்டும் மருமக்கட்டாய மறியாத மக்கட்டாயம் மட்டுமே வழங்கும் ஒருநாட்டில் மருகர் என்றுமே வழித்தோன்றலாகாராகையால், அவர் பெயர் அப்பொருளெய்த நியதியில்லை; வழியுமில்லை. ஆகவே, தமிழில் இப்பொருளில் இச்சொல் வழங்கி வருவதாலும், தமிழகத்திற் சேரநாடல்லாத பிறிதுபுலமெல்லாம் மக்கட்டாயமே தொன்றுதொட்டு நினைவெட்டும் நூல்குறிக்கும் கால மெல்லாம் கையாளப்பெறுவதாலும், இச்சொல்லுக்கு இப்பொருளாட்சி குடபுலச்சேரர் குடித்தாயமுறை கொண்டே கிடைத்திருக்க வேண்டுமென்பது தெளிவு பெறுகிறது. எனவே, பழம்பாட்டுக்களிற் சேரரையெல்லாம் மருகர் எனவே குறித்துப்போகும் வழக்காற்றால் அச்சொல்லின் பிந்திய பொருள்கொண்டு அவரை மக்கட்டாயமுறையில் வழித்தோன்றல்கள் எனக் கொள்ளுவதைவிட, அவர்களின் மருமக்கட்டாயமுறையையே அது சுட்டுமெனவும், அவர்தம் தாயமுறை வழக்குப்பற்றியே நாளடைவில் அச்சொல் வழித்தோன்றல் எனும் பொதுப்பொருள்பெற்று மக்கட்டாயமுறையில் வழித் தோன்றலாவாரையும் குறிக்கலாயிற்றெனவும் கொள்ளுவதே பொருத்தமாகும்.
-----------------------------------------------------------


பகுதி - 6
பதிற்றுப்பத்துப் பாட்டுக்களிலெல்லாம் மருகரென்றே சுட்டவும் பதிகங்களில்
மட்டும் 'மகன்' என்று வந்த பிரயோகத்தின் பொருட் பொருத்தம்.


இனி, இங்கு நாம் பொதுவாக விசாரித்தறியவேண்டிய செய்தி பிறிதொன்று உண்டு. பதிற்றுப்பத்துப் பதிக ஆசிரியர் பாட்டுடைத் தலைவனைப் பதிகத்திற்குறித்த வேறு சேரவேந்தனுக்கு மேலேகூறியபடி 'மருகன்' என்னாமல் வாளா மகனென்றே கூறிவைத்திருக்கின்றார். ஆகவே இங்கு 'மகன்' எனும் சொற்பொருளை நாம் சிறிது விசாரிப்பது பொருத்தமாகும். பதிற்றுப்பத்து நூலிலும் மற்றச் சங்கச்செய்யுட்களிலும் நிரந்தரமாகப் புலவரெல்லாம் தாம் பாடும் சேரரை அவர்தம் முன்னோருக்கு மருகர் என்றே குறித்துப்போவதற்கு மாறாக, இப்பதிகப் பாட்டுக்களிலெல்லாம் ஒருபடியாக ஒவ்வொரு பாட்டுடைச் சேரனையும் மற்றொரு பெயர்குறித்த சேரமன்னனுக்கு 'மருகன்' என்னாது வாளா 'மகன்' எனவே கூறி வைத்திருப்பது சிந்திக்கத்தக்கது. ஒருசேரனுக்கு மற்றொருவன் மகன் என்று மட்டும் கூறப்பட்டாலுங் கூட, அதுகொண்டு பின்னவன் முன்னவனுக்கு அவன் பெற்ற புதல்வன் என்று ஒருதலையாகத் துணிய இயலாது. அப்படியிருக்க, இங்குப் பதிகங்களெல்லாம் வாளா இரு சேரரைமட்டும் சுட்டி அவருள் ஒருவனை மற்றவனுக்கு மகன் எனப் பேசவும் இல்லை. ஒவ்வொரு பதிகத்திலும் 'மகன்' எனும் சொல், தனியே இருசேரர் பெயர்க்கிடையில் முறைப்பெயராய் நில்லாமல், இடையே பிற சொற்றொடராக்கம் பெற்றே வருகின்றது. ஆகவே இங்கு இதன்பொருளைச் சிறிது ஊன்றி விசாரிப்பது அவசியமாகிறது.

மகன் என்ற சொல் தமிழில் (1) ஆடவன், (2) மணவாளன், (3) பெற்ற புதல்வன், (4) பெறாத வழித்தோன்றல் அல்லது வாரிசு எனப் பலபொருளிலும் வருவதாகும். ஆகவே இச்சொல்லுக்கு ஆங்காங்கே இடம் நோக்கிப் பொருள் இன்னதென்று வகுத்துக்கொள்ள வேண்டுவது இன்றியமையாத கடமையாகும். பதிகங்களிலெல்லாம் இச்சொல் எங்கும் நிரக்க 'ஈன்ற' என்னும் அடையடுத்தே நிற்பதால் இதற்குக் கேவலம் 'ஆடவன்' அல்லது 'மணமகன்' என்ற பொருள்கள் விலக்கப்படும். பெற்றோர் பெயர் குறித்து, இன்னார் "மனைவியீன்றமகன்" என்று விதந்து கூறப்படுவதால், அப்பெற்றோருக்குப் பாட்டுடைத்தலைவன் அவர் "பெற்றபுதல்வனே" என்று தெளியப்படும்.

அதனாலேயே பதிகமுதலிற் பெயர்குறிக்கப்பெற்ற "சேரனுக்கு அவன் புதல்வன் ஆகான்" என்பதும் தெளியப்படும். எனினும், அச்சேரனுக்கும் பாட்டுடைத் தலைவனுக்கும் உள்ள தொடர்பைக் குறிக்கும் வேறு முறைச் சொற்கள் எதுவும் அங்கு இல்லாததால், அத்தொடர்பையும் இம் மகற்சொல்லே குறிப்பதாகக் கொள்ளவேண்டும். கொண்டால், அக் குறிப்பில் இச்சொல்லுக்குப் பெற்ற புதல்வனல்லாத வழித்தோன்றல் என்ற பொருளே அமைவதாகும். ஏனெனில், இங்கு ஒவ்வொருபதிகத்தலைவனையும் புலவர் பதிகப் பாட்டில் அவனைப் பெற்றோரிருவரொடும் விதந்து சுட்டி, அவன் அவருள் இன்னோன்தேவி யீன்ற மகன் என விளக்குவதோடு, பதிகமுதலிற் பெயர் குறித்த மற்றொருசேரனுக்கும் அவன் "வழிமுறைமகனாவான்" என்றும் தெளிவிக்கின்றார் - என்பது விசதமாகிறது. ஆகவே, இங்குப் பதிகங்களில்வரும் 'மகன்' எனும்சொல் "பதிகத்தலைவனைப்" பெற்றோரின் தொடர்புகுறிக்கும் போது அவருக்கு அவன் புதல்வன் முறைப்பொருளிலும், மற்றொரு சேரமன்னனின் தொடர்பு குறிக்கும்போது வழித் தோன்றல் என்ற தகவுப்பொருளிலும் - ஆட்சிபெறுகின்ற தென்று தெளிவாகின்றது.

இதைத் தெளிவிப்பதற்காகவே ஆசிரியர் பாட்டுச் சேரனைப்பெற்ற இருமுதுகுரவரைக் குறிக்குஞ் சொற்றொடரை அவனைச்சுட்டும் 'மகன்' என்ற சொல்லுக்கு அண்மையில் வைத்ததோடமையாமல், அடுத்து அச் சொல்லுடன் 'ஈன்ற' என்ற அடைதொடுத்து நிறுத்தியும்- அவனைத் தனக்குப் புதல்வனாகாமல் வழித்தோன்றலாக மட்டும் பெறும் மற்றொரு சேரமன்னன்பெயரைக் குவ்வுருபு கொடுத்துப் பிரித்துச் சேய்மையில் நிறுத்தியும்- வைத்திருக்கும் அழகு கவனித்துப் பாராட்டத்தக்கது. இங்கு நான்கனுருபு 'கொடை' 'பொருட்டு' 'முறை'ப் பொருள்களில் வந்துள்ளது. பதிகமுதலிற்குறித்த ஒரு சேரனுக்கு அவன் மரபு தழையும்பொருட்டு அவன்குடிசிறக்க மகப்பெற்று ஈயும் உரிமையுடைய கோமாள் ஒருத்தி விதந்து கூறப்பட்ட வேறொரு தக்க கணவனை மணந்து அவன் மனைவியாவாள். தனக்கு மகனாய்த் தான்பிறந்த சேரர்குடி தழைய அச்சேரனுக்கு முறைக்கு மகனாய் (வாரிசாய்) ஈன்று கொடுத்தவனே பாட்டுடைச்சேரன் என்பது பதிகத்தொடரமைப்பால் இனிது போதருகின்றது. பதிகமுதலிற் குறிக்கும் சேரன்பெயர்க்கு நான்காம் வேற்றுமையுருபு புணர்த்திப் பிரித்து அதைச் சேய்மையில் நிறுத்தியதனால், அப்பெயருடையானுக்குப் பின் "ஈன்றமகன்" என்றுவரும் தொடர் குறிக்கும் பாட்டுடைத் தலைவன் நேரே பெற்ற மகனாகாவிட்டாலும் அச்சேரன் குடி சிறக்கும் பொருட்டு அவனுக்கு மகன் (வாரிசு) முறையாக அவன் குடிப்பிறந்தாளொரு கோமாட்டி பெற்றுக்கொடுத்த (மகன்) வழித் தோன்றலாவான் என்று இப்பதிகத்தொடர் பொருள்பயத்தலால், இங்குப் 'பொருட்டு' 'முறை'ப் பொருள்களையும் 'கொடை'ப் பொருளையும் முறையே "கு"வ்வுருபு கொடுப்பதாகும். பெற்றோர் பெயர்களை அண்மையிற் குறிப்பதால் அவர்களுக்குப் பாட்டுடைத்தலைவன் நேரே யீன்றமகனாவதைப் பொருந்தக்கூறவேண்டுவதன் பொருட்டும், சேய்மையிற் சுட்டிய சேரனுக்கு அவன் வழித்தோன்றலாவதைக் குறிக்கும் பொருட்டும், இரண்டுக்கும் உதவவொண்ணாத 'மருகன்' என்பதைவிலக்கி ஒருங்கே இருபொருளிலும் செவ்வனே நின்றமைவதான 'மகன்' என்ற சொல்லையே இங்கு இப்பதிகங்களிற் புலவர் ஓர்ந்து உபயோகித்துள்ளார் என்பது பதிகத்தொடரமைப்பால் இனிது தெளியக்கிடக்கின்றது.


பகுதி 7. முடிவுரை


தமிழ்நாட்டில் குடகுமலைத்தொடருக்கு மேற்கே குடபுலத்தில் மட்டுமே இம்மருமக்கட்டாயம் நெடுவழக்காய் நின்று வருகின்றதென்று இவ்வாராய்ச்சியால் தெளியக் கிடைக்கிறது. எனினும், அம்மலைத்தொடருக்குக் கிழக்கே தமிழகம் முழுவதும் சங்ககாலந்தொட்டு மக்கட்டாயமே நிலைத்து நிற்கின்றது. இக் கீழ்புலத்தில் என்றும் யாண்டும் யாராலும் மருமக்கட்டாயம் ஆட்சிபெற்றதான குறிப்பே நூல்களிற் கிடையாது. இந்நிலையில் இருமக் கட்டாயம் தொல்லைத் தமிழ்மரபா? பழமரபாமேல், தமிழகத்திற் கேரளமொழிந்த பிற பகுதிகளிலெல்லாம் இது வழக்கிழந்தது மட்டுமின்றி, பழஞ்சேரருக்கு மக்கட்டாயமே மரபாமெனத் தமிழர் மயங்கும்படி இது மறக்கப்படவும் காரணமென்ன? தமிழமரபன்றேல், சேரர் எக்காலத்தில் யாண்டிருந்து எப்படி இதனை மேற்கொள்ளலாயினர்? சேரரே தமிழர்தானா? அன்றி 'வடவாரியரை வணக்கியது' போலவே, 'தமிழப்படையையெல்லாம் இடையறப் படுத்தி'த், தருக்கினர் என்று இவர் கீர்த்தி கொள்வதால், இச்சேரர் தமிழரல்லாத அந்நியரா?

இவ்விடத்தில் நாம் கருதவேண்டியன இன்னும் சிலவுள. தமிழகத்தில் மேல்புலத்துமட்டுமே இத் தாய் வழித்தாயமுறை நடக்கின்றது. அங்கே நாயர் முதலிய திராவிட சமுதாயத்தார் மட்டுமில்லை; தம்மை நல்ல அசல் ஆரியப் பிராமணராகப் பாராட்டித் தருக்கும் நம்பூரிமாரும், புறமதத்தராய்ப் பிறநாட்டிலிருந்து வந்து குடியேறிய மாப்பிள்ளைமாருமே மருமக்கட்டாயிகளாயிருக்கின்றனர். சமீபகாலத்தில் கீழத்தமிழ்நாடுகளிலிருந்து வந்தேறிய சிலரொழிய, நெடுங்காலமாகக் குடமலைக்கு மேற்கிலுள்ள சேரநாட்டார் எல்லாரும் தொன்றுதொட்டு மருமக்கட்டாயத்தையே கையாண்டு வருகின்றனர்.

இவ்வாறு மேல்புலத்தில் மட்டும் தாய்வழியும் பிறிதெங்கும் தந்தைவழியுமாயிருப்பதன் சரிதமூலச் செய்திகளைத் தேர்ந்துதெளிதல் தமிழர்கடனாகுமன்றோ? மிகப் பழங்காலத்தில் தமிழகமுழுவதும் தாய்வழிமரபே பரவியிருந்து, பிறகு மக்கட்டாய ஆரியர் வந்தேறியபின் கீழத் தமிழ்நாடுகளில் தாய்வழி நெகிழ்ந்தொழிந்து தந்தை வழித்தாயம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். எனினும், இத்தாய மாற்றம் குடமலைத் தொடர்கடந்து மேலைப்புலச் சேரரையிணக்கமாட்டாமல் கேரளத்தில் மட்டும் பழைய தாய்வழி தங்கியதெனலாம்.

கேரளத்தில் மாப்பிள்ளைமார் என்பார் ஆதியில் அராபிநாட்டினரென்பது எல்லாருக்கும் ஒப்பமுடிவ தொன்றே. சமயத்தாலுமிவர் மகம்மதியர். மகம்மதியர் சமுதாய வழக்கவனுட்டானங்களை எளிதில் மாற்ற இணங்காத பிடிவாதிகளென்பதும், தங்கள் அனுட்டானங்களுக்காகத் தமதுயிரைப் பொருட்படுத்தாது கொடுத்தேனும் தம்மொழுக்க வழக்கங்களைப் பேணுபவரென்பதும் உலகறிந்த செய்தி. இப்படியிருக்க, இவ்வரபிய மாப்பிள்ளைமார் குடநாடு புகுந்தபின், அங்கே பரசு ராமர் சாபத்துக்குப் பயந்து தம் பழைய குலவொழுக்கங் குன்றப்பல புதிய அனாரிய ஆசார அனுட்டானங்களோடு மருமக்கட்டாயத்தையும் மேற்கொண்டுள்ள இந்துக்களின் தூண்டுதலால், தாங்களும் மருமக்கட்டாயிகளாகி விட்டார்களா? அல்லது இவர்கள் பூர்வீக அராபியாவில் கையாளப்பட்ட பண்டை மருமக்கட்டாயத்தைப் புதிய மகம்மதியர் அந்நாட்டில் மாற்றினபோது அதனைத் தாம் கைவிடச்சம்மதியாமல் அரபியாவைவிட்டுக் குடநாடு புகுந்து, தம் பழந் தாயமுறையை விடாது பேணிவருகின்றனரா? அராபி தேசத்தில் ஆதிகாலத்தில் மருமக்கட்டாயமே இருந்ததென்பது நல்ல ஆராய்ச்சியாளர் ஆய்ந்து துணிந்த செய்தி. *அராபி நாட்டுக்கும் குடபுலத்துக்கும் தொன்றுதொட்டு நெருங்கிய தொடர்புண்மையும் சரிதமறிந்த செய்தியேயாகும்.
--------------------------
* W. ராபர்ட்சன் ஸ்மித் என்பவர் எழுதிய "பழைய அராபியாவில் உறவுமுறையும் மணவியலும்" என்ற புத்தகம் பார்க்க.(Kingship & marrage in Early Arabia by W. Robertson Smith.)

இந்நிலையில், அராபியர் மகம்மதியராகிப் பல புதிய ஆசாரத் திருத்தங்களை ஏற்படுத்தியமைவதற்கு வெகு காலத்துக்கு முன்னரே, சில மருமக்கட்டாய அராபியர் குடபுலத்திற் குடியேறினவர் நாளடைவில் இந்துக்களாயினர்:- அவரோடு பின்னர் மகம்மதிய மருமக்கட்டாயிகளான அரபி மாப்பிள்ளைமாரும் சமயமாறினும் தங்கள் பழவழக்கங்களைக் கைவிட மனமில்லாதவராய், அப்பழ வழக்குக்கட் கிடமற்ற தமது நாட்டைவிட்டுச் சேர நாட்டில் வந்தேறி, தங்குலத்தவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆண்டுப்போந்து தமதுநாட்டுத் தாய்வழித் தாயமுறையை விடாது பேணிவரும் குடபுலக் குடிகளோடு ஒருங்கு வாழலாயினரென்று கொள்ளலாமா?

இத்தாய்வழித் தாயத்தார் ஆதிக்கம் வளர்ந்தவிடத்தில், தெற்கே நாஞ்சில்நாட்டுத் தமிழரைப்போலப் பிற மக்கட்டாயிகள் சிலரும் நாளடைவில் கால இட மாறுதலால் தாய்வழிமுறையைத் தாமும் கையாளத் தொடங்கியிருக்கலாம். அதற்குச் சமாதானங் கூறுமுகத்தால், வட நாட்டில் தாம்தாயைக் கொன்ற உள்ளுளைக்கு முணர்வு தூண்டப் பரசுராமர் தென்மேற்கே கேரளத்தில் தாய் வழிவகுத்துத் தாய்மார்க்குச் சிறப்புநிலை மிகுத்துதவும் புதுமுறைகள் படைத்துத் தம் பழைய பழி துடைத்தது போலோர் அற்புதக் கதையினைக் கற்பித்துமிருக்கலாம்.

இன்னும், வடகங்கை வளநாட்டில் மூன்றூழிகட்கு முன்னிருந்த அசல் ஆரியப்பார்ப்பனப் பரசுராமரைப் பல காடும் நெடுமலையும் கடத்தியிழுத்துக் குடநாட்டிற் புகுத்தியதோடு, அவரை ஆரிய ஆசாரங்களை அறவொழிக்குங் குலக்கோடரியாகவும் பழிசுமத்தும் பொருந்தாப் பொய்க்கதைகளைப் புறக்கணித்து, அராபி நாட்டுத் தொடர்பு குறிக்கும் பல சரித சூசனைகளை ஆராய்வது பலன் தராதா? வெள்ளையானை மீது கைலாயஞ் சென்றதாக நம்மவர் பாராட்டிப் புகழும் சேரமான், வெண்ணுரையெழுவி யலைமலைதழுவும் தண்கடல் மார்பு தவழுங் கப்பலேறி அராபிநாடு புகுந்தவராக அந்நாட்டில் வழங்கும் வரலாற்றின் உண்மையை விசாரிப்பது மெய்ச்சரிதப் பழஞ்செய்தி யறிய விரும்புவோர்க்குக் கடமையன்றோ? இனைய பல கேள்விகளும் எழுபவெல்லாம் நடுநிலையிலுண்மை காணும் நோக்கமொடு ஆராயத் தக்கனவேயாம்.

ஆனால் இவையெல்லாம் எடுத்துக்கொண்ட இந்த ஆராய்ச்சிக்கு அவசியமில்லாதனவாகையால், அவற்றைப் பிந்தித் தக்க சமயம் கிடைத்துழிச் சாவகாசமாக விசாரிக்க விடையேற்பேம்.

தற்போது தமிழகத்தே மேல்புலத்தில் வழங்கிவரும் மருமக்கட்டாயமுறை புதிதொன்றில்லையென்பதும், தொல்லைச் சங்ககாலப் பழஞ் சேரர் குடிகளிலும் அடிப்பட்ட தொன்மரபாய் ஆட்சிபெற்றுத் தொன்றுதொட்டே வழங்கிவருவதாய்த் தெரிகிறதுஎன்பதுமே, இவ்வாராய்ச்சியால் நாம் காணக்கிடைக்கும் பொருளாகும்.
---------------


4. சேரர் பேரூர்
முதற்பகுதி.......முன்னுரை


குடதிசைச்சேரர் கோநகர்வஞ்சி யாண்டையது? என்பது வினா. இதற்கு முத்திறக் கொள்கையோர் மூவேறு விடைதருவராயினார்

சிலப்பதிகாரத்திற்குரைவகுத்த ஆசிரியர் அடியார்க்கு நல்லாரும், பெரிய புராண நூலுடையாரும் மகாமகோபாத்தியாயர் ஸ்ரீ சாமிநாதையரவர்களும், அடிப்பட்ட
தமிழ் வழக்குடையாரும் மலைநாட்டுத் தலைநகராம் வஞ்சியைக் கடலோரம் பேராற்றின்மேலதெனக் கொள்ப(1)
----------------------------
(1) சிலம்பு பக்கம் 18,66. பெரியபுராணம் சேரமான் செய்யுள் 1,2,4,45-47. வெள்ளானை செய்யுள் 3,22; மணிமேகலை பக்கம் 190,191

காலஞ்சென்ற ஸ்ரீகனகசபைப்பிள்ளையவர்கள், பின் வழக்கில் வஞ்சிக் கருவூரெனவு மொருபெயருண்மை கொண்டும், குடமலைத் தொடரினடிவாரத்திற் பேரியாற்றங்கரையில் ஒரு பாழூருக்குத் திருக்கரூர் என்னும் பெயருண்மை கொண்டும், அப்பாழூரையே சேரர் பேரூராகக் கருதினர்.

சமீபத்தில் வெளிவந்த "சேரன் செங்குட்டுவன்" என்னுஞ் சரித நூலாரோ, இவையிருகூற்றும் "கொள்வதற்குப் பொருத்தமும் பிரமாணமும் இல்லை" எனவும், வஞ்சி யென்பது திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே ஆம்பிராவதிக்கரைமேலதாய 'கருவூரானிலை'யாமெனவும், வற்புறுத்துவர்.(2)
------------------------------------------
(2) சேரன் செங்குட்டுவன் வஞ்சிமாநகரப்பகுதி

இம் முத்திறக்கொள்கையுள்ளு மொன்றேமுந்து நூன்முடிபுக் கொத்ததாகும் என்பதொருதலை. எனவே அஃதாமாறென்னை? வஞ்சிநகரொன்றோ? பலவோ? ஒன்றெனின், அது மலைநாட்டதோ? அன்றிப் புனனாட்டூரேயோ? என்றவாராய்ச்சி நிகழ்வதியல்பாம்.

முதற்கண், இவ்வூர்சுட்டிய சில பெரும்பழநூலருந் தொடர்களை யுய்த்து நோக்கலேற்புடைத்து.

    (1) "தண்பொருநைப்புனற்பாயும்
    விண்பொருபுகழ்விறல்வஞ்சி" (புறம் 11.)

    (2) "நெடிதே வஞ்சிப்புறமதிலலைக்கும்
    கல்லென்பொருநைமணலினும்" (புறம் 387.)

    (3) "தண்பொருநை சூழ்தரும்வஞ்சியார்கோமான்" (சிலம்பு காதை29)

    (4) "கலிகெழு வஞ்சியு மொலிபுனற் காரும்" (சிலப்பு காதை 8.)

    (5) "குட்டுவன், வருபுனல் வாயில் வஞ்சியும்" (பத்து)

    (6) "புரிந்த யானிப் பூங்கொடிப் பெயர்ப்படூஉந்
    திருந்திய நன்னகர் சேர்ந்தது கேளாய்" (மணிமேகலை காதை 28 வரி 101,102.)

    (7) "செங்குட் டுவனெனுஞ் செங்கோல் வேந்தன்
    பூத்த வஞ்சி பூவா வஞ்சியில்
    போர்த்தொழிற் றானை குஞ்சியிற் புனைய"
    (மேற்படி காதை 26 வரி 77, 78,79.)

    (8) "சேரன்
    விற்றிறல் வெய்யோன் றன்புகழ் விளங்கப்
    பொற்கொடிப் பெயர்ப்படூஉம் பொன்னகர் பொலிந்தனள்"
    (மேற்படி காதை 26 வரி 29.)

இன்னும்

"வானவன்வஞ்சி" "பொற்கொடிவஞ்சியில்"
"பூவாவஞ்சி" "வஞ்சியிலிருந்துவஞ்சிசூடி"
"வாடாவஞ்சி" "பூங்கொடிவஞ்சிமாநகர்"

எனவும்வருவன பண்டை நூல்களிற் பலவிடத்தும் பரக்கக்காணலாம். பின்னும்

    "வஞ்சியகநகர்வாய்"
    "மதிதங்கியமஞ்சணியிஞ்சிவஞ்சி"

எனப் பெரியபுராணத்தும் வந்துள.

இவையன்ன அச்சிட்டு வெளியான பழநூல்கள் பலவற்றுள்ளும், சேரர் பேரூருக்கு வஞ்சியென்பதன்றி, கருவூர் என்னும் பெயர் வரயாண்டுங்கண்டிலம். ஸ்ரீ இராகவையங்காரவர்கள் தங்களாராய்ச்சியிலெடுத் தாண்டுள

    "கோதை
    திருமா வியனகர்க் கருவூர் முன்றுறைத்
    தெண்ணீ ருயர்கரை குவையிய
    தண்ணான் பொருநை மணலினும் பலவே" (அகம் 93)

என்னுஞ் செய்யுளையறிவேம். அதுபற்றிக் கீழே விரித்துரைப்பேம். தற்போது, வெளிப்பட்ட பழ நூலொன்றேனும் வஞ்சியுங் கருவூருமொன்றென விதந்துகூறக் காண்கின்றிலம். இதுவரை, அடிப்பட்ட பழையநூல்களிற்கண்ட மேற்கோள்களாற் கிடைக்கப் பெறுவன:-

(i) சேரர்கோநகர்வஞ்சி
(ii) அது பொருநைக்கரை மேலது.
என்னுமிரண்டே. இவை நிற்க.

இனி: "வஞ்சுளாரணியம், வஞ்சி கருவூ"ரெனவும் "பொற்புமலியாம்பிரவதியான் பொருனையெனவும்புகலுவரால்," எனவும், "செய்தவன் பெயர்முதலிய வரலா'றொன்றுமே யறியப்படாத தற்காலக் கருவூர்த் தல புராண பிரமாணத்தையும், சோணாட்டுக்கருவூர்ப் பெருமாள் கோயிற் கற்சாசனத்தொன்றில் "வஞ்சி ........... ஸ்ரீவைஷ்ணவரோம்." என்னுந்தொடர்கண்டதையுங் கொண்டிக் கருவூரே வஞ்சியெனவும், அதனருகோடு மாம்பிராவதியே பொருநையெனவும் துணிந்த ஸ்ரீ இராக வையங்காரவர்கள், பின் தங்கருத்தை வலியுறுத்தச் சில பல தடை விடைகளுமெடுத்தாண்டுளார்கள். அவையிற்றின் வலியும், தகவுடைமையுமொரு-தலையாத் துணியக் கிடப்பின், அவர்கள் கொள்கையையே முடிந்த துணிபாகக் கொள்ளுவதிற் சிறிது மாட்சேபமில்லை. எனில், முறையே அவற்றையுற்று நோக்க, அடிப்பட்ட பழவழக்கே வலிபெற்று, ஐயங்காரவர்கள்கருத்து நலிவதாக் காணப்படுகின்றது. அரிய ஆராய்ச்சித்திறம் பலவிடத்தும் காட்டிச்செல்லும் "சேரன் செங்குட்டுவன்" என்னுமினிய புத்தகத்தில்,"வஞ்சிமாநகரம்" என்னுந் தலைப் பெயர் கொண்டபகுதியில், கருவூரானிலையே வஞ்சியெனத் துணிவதற்குக் காட்டிய காரணங்களை முறையே சிறிதாராய்வாம்.
---------------------

2-ஆம்பகுதி. வஞ்சி வஞ்சுளாரணியமா?


முதலில், "வஞ்சுளாரணியம் வஞ்சி கருவூர்" என்னுமிக்காலக் கருவூர்ப்புராணச் செய்யுளும், கருவூரானிலையருகே 'வஞ்சியம்மன்', 'வஞ்சுளேச்சுரலிங்கம் என்னுந் தெய்வப்பெயர்கள் வழங்குவதுங்காட்டி, இதனால்' "இக்கருவூரே 'வஞ்சி' யெனத்தமிழிலும், 'வஞ்சுளாரணிய'மென வடமொழியிலும் வழங்கப்படுவதாம்,"(1) என்றார்கள். சேரர் பேரூராம் வஞ்சிக்குக் 'கருவூர்' எனுமறுபெயர் பண்டை வழக்கிலுண்டோவென்னு மாராய்ச்சி நிற்க, எனைத்துவகையானும் வடமொழி 'வஞ்சுளாரணியம்', தமிழ்வஞ்சியாகாதென்பது வெளிப் படை. 'வஞ்சுளம்' என்னும் வடசொல்லுக்கு, 'அசோகமரம்' (Uvaria) என்று பொருள். செங்குட்டுவன் சரித நூலார், "வஞ்சுளாரணியம்", "வஞ்சுளாடவி" என்னுங்கருவூரானிலை" "வஞ்சி (அசோக) மரம் நிறைந்த காடாதலின், இப்பெயர்பெற்றதென்பர்." (2) வஞ்சி என்னுந் தமிழ் மொழியோ கொடிப்பெயரேயன்றி யாண்டும் மரப்பெயராகாமை உய்த்துணரத்தக்கது.
---------------------------------
(1) பக்கம் 121
(2) பக்கம் 121 அடிக்குறிப்பு

அன்றியும் சேரர்கோநகரை, "பூங்கொடிப் பெயர்ப் படூஉந்திருந்தியநன்னகர்" என்றும், "பொற்கொடிவஞ்சி" என்றும், "பூங்கொடி வஞ்சிமாநகர்" "பொற்கொடிப் பெயர்ப்படூஉம் பொன்னகர்" என்றும், "பொற்கொடி மூதூர்" என்றும், (3)கடைச்சங்கப்புலவரும், செங்குட்டுவன் காலத்தவருமான சாத்தனார் தம் மணிமேகலையில் விதந்து கூறியுள்ளார். இவ்வாறு, குட்டுவர்கோநகர் வஞ்சியெனும் வல்லியின் தனித்தமிழ்ப்பெயர் கொண்டதெனப் பண்டைநூல் கூறுவதுணர்ந்து- வைத்தும், அதற்கெட்டுணையும் பொருத்தமின்றி தமிழறிந்த ஐயங்காரவர்கள் நேற்றெழுந்தவோர நாமதேயியின் பாட்டை யாதாரமாக் கொண்டு, வஞ்சுளாரணியமே தமிழில் வஞ்சியெனமருவிற் றெனக்கூறியதுமிக வியப்பைத் தருமன்றோ?

ஆரியர்வந்து கருவூரானிலையை வஞ்சுளாரணியச் சேத்திரமாகப் பிரதிட்டித்துக் கொள்ளுமுன்னர்ச் சேரருக்குத் தலைநகரில்லைபோலும். உண்டேல், அக்காலத் தமிழ்ப்பேர்தான் யாதோ? மிகப்பழந்தமிழ் நூலெல்லாம் மலைநாட்டுக்கோநகரை வஞ்சியென்றே கூறக் காண்கின்றோம். ஆனால், பாண்டவருக்குப் பல்லாயிர-மாண்டுகளுக்கு முன்னரே வான்மீகரறிந்த கபாடபுரத்திருந்து செங்கோலோச்சி, பாணினிக்குமுன் தொல்காப்பியமியற்று வித்துப் 'பழையன்' என்னுங் காரணவியற் பெயருமுடைய பாண்டியன் கோமுதுகுடியையே, ஓசை ஒற்றுமை ஒன்று கண்டு, பின்னூழியிறுதியிற் பொருத பாண்டவரிலொருவன் மணலியூர்க்கிளைப் பாண்டியன் மகளை மணந்த கதைகொண்டு, பாண்டவர் வமிசத்துப் பிறந்ததாலே பாண்டியர் குலமாயிற்றென வாய்கூசாது கூறியவர்களுக்கு, கொடிப் பெயரை மரப் பெயராக்கி வட மொழிக்கு வாகைசூடுவதருமையாமா?
-----------------------------------------------
(3) மணிமேகலைப்பதிகம் வரி 86 காதை 21 வரி 91, 26-92, 28-101,102,170.

பாண்டவ ரென்பதே தத்திதாந்த நாமம். பாண்டு புத்திரர் என்பது பொருள். இனி யிதினின்று பிறிதொருதத்திதாந்த நாமம் பிறக்குமென்பது வடமொழி வழக்காமோ வில்லையோ தெரிகிலேம். மனுவழிப் பிறந்தாரெல்லாம் மானவராவதன்றி, ஒருமானவன் பின்னோருக்கு அப்புனைவுப் பெயரைத் திரித்து அதனடியாக வொரு புதுப் பெயர் தரும் வழக்கறியேம். மானவரெல்லாம், மனு வமிசத்தாராவதுபோல, "பாண்டிய"ரென்பது வட மொழித்தத்திதாந்தப் பெயராமாகில், பாண்டியரெல்லாம் பாண்டுபுத்திரரேயாகவேண்டும். பாண்டவன் என்று பற்குனனுக்கு இயற்பெயருமில்லை. அன்றியும், பாண்டவரிலிருந்து பாண்டியர் என்பது பிறக்கும் வடமொழி விதிதானென்னையோ? இஃதிடைப்பிறவரல்: எனினும், ஐயங்காரவர்கள் ஆராய்ச்சிமுறை யிவ்வாறோசை யாசையானிடையிடையே யிழுக்கப்பட்டிடர்ப்- படுவதை யினிதுணர்த்துதல்பற்றி ஈண்டுக் குறிக்கப்பட்டதன்றி வேறில்லை.

இவ்வாறே வஞ்சுளேச்சுரலிங்கம் என்று கருவூரருகே விளங்கும் தெய்வப்பெயரும், அசோகடி முளைத்த இலிங்கமெனக் காரணப் பெயராய் வடமொழியடியாகப் பிறந்ததாதலா லதற்கும் வஞ்சிக்குமெனைத்தேனுந் தொடர்பில்லையென்பதும் தெளிவாகும். இப்பெயர் ஆண்டு வழங்குதல்பற்றி வஞ்சிமூதூரிக்கருவூரானிலை-யென்று கொள்ளுவது ஆராய்ச்சி முறையாகாது. இனி, இக் கருவூருக்குத் தெற்கே நதிக்கரைத்துர்க்காதேவி வஞ்சியம்மன் என்றழைக்கப்படுவதால், கருவூர் வஞ்சியாகுமென்பர். வஞ்சியென்னுந் தமிழ்ச்சொல், ஒரு பூங் கொடிக்கு மதன்சார்பாகச் சேரரூருக்கும் பெயராவதன்றி, தமிழகத்தே பெண்ணுக்கும், தருமதேவதைக்கும் பெயராய் வழங்குவதுமுண்டு. எனவே, கருவூர்க் கருகுளார் தம்மூர்த் துர்க்கையை அறத்தெய்வமாக வழிபட விசேடக் குறிப்பொன்றும் வேண்டார். அன்றி ஒருகால் இப்பெயர் செங்குட்டுவனால் முதலில் வஞ்சியிற் கோவிலமைத்து விழவெடுக்கப்பட்ட பத்தினிக் கடவுளுக்கேவுரியதெனினும் இதனாற் கருவூரானிலை வஞ்சி நகராகக் கருதப்படவேண்டிய அவசியம் புலப்படவில்லை. இவ்வஞ்சித் தெய்வத்திற்கு இலங்கை முதலிய பிறநாட்டரசரும், சோழபாண்டியரும் தத்தம் நாட்டிற்கோவினாட்டி விழவெடுத்து வழி பட்டாரெனச் சிலப்பதிகார வாயிலாகத் தெரிவதோடு, தற்காலத்தும் கண்ணகி வழிபாடு பலவிடத்திருப்பதையுங் காண்கின்றோம். ஆகையால் மலைநாட்டுத் தலைநகருக்கணித்தில்லாக் கருவூரரு கூராரும் வரதையான வஞ்சித் தெய்வத்தை வணங்குவதியல்பாகலாமே? இதுகொண்டொரு, பெருஞ்சரிதவாராய்ச்சி நிகழ்த்தி, கோவலன் மனைவிகோவிலுள்ளாங்கெல்லாம் மூதூர் முழுமணமோந்திடலாமோ?

-------

3-ஆம் பகுதி, "கோதைதிருமாவியனகர்க்கருவூர்" பேரியாற்றின் மேல்"வஞ்சியநகர்"
ஆவதன்றி, ஆனிலைக்கருவூரன்றாம்.


இன்னுமிதுவேபோல்,"தண்பொருநைப்புனற் பாயும் விண்பொருபுகழ் விறல்வஞ்சி" என்ற பேய்மகள் இளவெயினிபாட்டொடும்,"தண்பொருநை சூழ்தரும் வஞ்சியர் கோமான்" என்னுமடிகள் தொடரொடும், "பொற்புமலியாம் பிரபாவதியான் பொருனையெனவும் புகலுவரால்" என்னுங் கருவூர்ப்புராணச் செய்யுள் வரியையிணைத்து. ஆம்பிராவதியே தண்பொருநையெனவும், கருவூரேவஞ்சி யெனவும் சாதிக்கலாயினர். முதலில் மூதூர்வஞ்சிக்குக் கருவூர் எனவுமோரியற்பெயற் பண்டை வழக்கிலுண்டென்பதொருதலையாத் துணியப்படாததாகும். ஐயங்காரவர்கள் காட்டிய வெளிப்படா அகப்பாட்டொன்றொழிய விதுகாறுமச்சேறிவெளிப்போந்த முன்னூல் மூலங்களில், சேரர் பேரூரை வஞ்சியெனக் காண்பதல்லால் யாண்டுங் கருவூரென்றழைக்கக் காணேம். புறநானூறு, பத்துப்பாட்டு, மணிமேகலை, சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறுமுதலிய பழநூல்களில் இவ்வஞ்சி குறித்த பலவிடங்களையு மேலே காட்டியுள்ளேம். அகப்பாட்டு அடிகளையுஞ் சிறிதாழ நோக்கில், 'கருவூ'ரென்பதியற்பெயராகாமல், புலவன் புனைந்துரையாகலா-மெனவுந் தோற்றுகிறது. அற்றேல் அது பெரியவூர் (கருமை-பெருமை) எனப் பொருள்பட நிற்கும். அன்றியுமிக்கவியில், "கருவூர் முன்றுறை மணலே" விசேடிக்கப் படுவதால், வஞ்சியநகரொழித்தாற்று வாய்த்துறையையே நுதலிற்றெனல் பொருத்தமாகும். கடற்கரைப் பேரூரெல்லாம், அலைவாய்ப்பாக்கம், அகவூர்ப் பாக்கமெனப் பிரிபடுவதியல்பு. சிலப்பதிகாரத்தும் புகாரை மருவூர்ப்பாக்கமும், பட்டினப்பாக்கமுமெனப் பிரித்துக் கூறப்பட்டிருத்தல் நோக்கற்பாற்று.

(i), இதுவேபோல், வஞ்சியும் பேராறு கடலொடு கலக்குமிடத்ததாகவே, அவ்வாற்றின் வாய்த்துறை வேறு உண்ணகர் வேறாகவேண்டும். ஆகவே, வஞ்சியகநகர், கருவூரும்,முன்றுறைப்பட்டினம் முசுறி அல்லது மகோதையுமாம் போலும். இது கொண்டே மணிமேகலை சிலப்பதிகார நூலுடையாரும், இவ்"வானவன்வஞ்சியை "குணவாயிற் "புறக்குடியும்" அரசன்புரிசையமைந்த அகவூர்ப்பாக்கமாம் "வஞ்சிமுற்ற"மென்னும் "இடைநிலை வரைப்பும். "இப்"பேரிசைவஞ்சிப்புறத்து"க் "கொடி மதின்மூதூர்க்குடக்கண்" கடற்கரைத்துறைமுகமாம் "முழங்குநீர்வேலி மூதூ"ரும். என்றித் திறத்தவாய்ப் பிரித்தே வருணித்துள்ளார். ;(ii) இன்னும் பெரிய புராணமுடையாருமிவ்வூரை 'வஞ்சியகநகர்'வேறு, வேலை மிசை "மகோதை"த்துறை வேறாகப் பிரித்துக் காட்டியுமுள்ளார். (iii)பேரியாற்றின் முகம் மிக விரிந்து, அலையொடு சமனிலையாகத் தணிந்து, ஆற்றுவாயெனத் தோற்றாது கலந்து கடலேயாதல் கொண்டதற்கலிமுக-மென்றே பெயருண்டு. இதை அக்காலத்து யவனவணிகர் குறித்திதற்கு (Psudostomos) (iv) பொய்முக மென்றே தங்கள் கிரேக்க மொழியிலும் பெயர் வைத்திருத்தல் கவனிக்கத்தக்கது. இத்தகைய வாணிபத்துறை முகமே முன்றுறையாகும். அத்துறைமணலைக் குறிக்கும் புலவன், 'மேடான அகநகர்க்கு முன்றுறையில் அலிமுகமாகப் பெருகும் பொருநைக்கரைமணலெ'னத் தோற்றுவாய் செய்து, "கோதைத்திருமாவியனகர்க் கருவூர் முன்றுறைத் தெண்ணீருயர் கரைக்குவையிய தண்ணாந் பொருநைமணல்" ஒன்று பாடினர் போலும். ஈண்டு, 'கருவூர்' என்பது மேட்டூர் அல்லது நடுவூர் என்று பொருள்படுவதாகும். ஆகவே அலைவாய்ப்பாக்கத்தினும், மேடான நடுவூராம் அரசன் "கொடிமதின்மூதூ"ராகிய இவ்வஞ்சிமுற்றம் அல்லது வஞ்சைக்களத்திற்கே 'கருவூரெ'னவுமொருகாரணப்-பெயரமைந்திருக்க வேண்டுமென்பது மிகப்பொருத்த-முடையதாகும்.
----------
(i) இந்தியரவிழவூர்க்காதை 7-58
(ii) சிலப்புகாதை 25 வரி 9, காதை 28 வரி 196, 206, காதை 28 வரி 424-164.
(iii)சேரமான்புராணம் செய்யுள் 1, 4 46.

மணிமேகலையிலிப் "பொற்கொடி மூதூர்ப்புரிசை"யை(1) "இடைநிலை வரை" (1)ப்பெனச் சுட்டியிருப்பதும் இக்கருத்தையே வலுயுறுத்துகின்றது(2). இவ்வகப்பாட்டுக் "கருவூர் முன்றுறைமணல்," வஞ்சியகவூராம் 'கருவூர்' என்னும் 'வஞ்சைக்கள'த்தின் முன்றுரைமகோதைப்பட்டினக் "குண்டுநீரடைகரைவேலை வாலுகமே"(3) யென்பதைச் சுட்டும் சில மணிமேகலை சிலப்பதிகாரச் சான்றுகளு மீண்டுக் கவனிக்கத்தக்கன.

சோணாட்டுக் கீழ்கடலில், காவிரிப்பட்டினத்திற்குத் தெற்குள்ள மணிபல்லவத்திலிருந்து, வடமேற்கே வஞ்சிக்குச்சென்ற மணிமேகலை, கண்ணகி கோயில் கொண்டிருந்த செங்குன்று மலையை வழியிற்கண்டு, அக்கோயிற் பத்தினிக்கடவுளை வந்திப்பான் சிந்தித்திறங்கி, அன்னையை வலம்வந்து வழிபட்டு அவள்பால்வரம்பெற்று, மீண்டம்மலையினின்று மேற்கே வஞ்சிக்குவழிக்கொண்டவள், முதலில் வஞ்சிப்பேரூரின் குணவாயிற்புறத்துள்ள சிறு "புறஞ்சேரி"பிற்புகுந்து, ஆங்கறவொழுக்கத் தமைந்து நின்ற பல சமயவாதிகளின் வேறுபட்ட கொள்கைகளையு மவர்கள் கூறக்கேட்டு, பின் தன் "தாயரொடு அறவணவடிகளைக்காண விரும்பி அப்புறஞ்சிறையைக் கடந்து," "இடைநிலைவரைப்பாம்" கருவூரென்னுங் 'கொடிமதின்' 'வஞ்சிமுற்றத்'துள் நுழைந் தவ்வரசர் குடிப்பாக்கத்தழகு பலவுங்கண்டு மகிழ்ந்து, கடைசியாகப் 'பௌத்ததருமங்களைச் சொல்லுமுனிவர்களின் தவச்சாலை கணிறைந்த' அவ்வஞ்சியின் குடவாயில் முன்றுறைப் பட்டினத்திற்சென்று, அங்கே 'தவஞ்செய்திருந்த மாசாத்துவானைப் பணிய அவன் "மாதவி அறவணவடிகள் முதலாயினோர் காஞ்சிநகரத்திருப்பதாகவும்,
--------------------------------------------------------
(1)&(2) மணிமேகலைக்காதை 28 வரி24,170
(3) சிலப்புகாதை 27 வரி 242.

அவ்வூர் சென்றறஞ் செய்யெனவும்" சொல்ல, "மணிமேகலை யவனைவணங்கி," தானின்ற அவ் "வஞ்சிநகரத்தின் மேற்றிசையினின்று மேலேயெழுந்து வடதிசைக்கட் சென்று, காஞ்சிநகரினடுவே யிறங்கி"னள் என்பது மணிமேகலையிற் கூறிய(1) சரித்திரம். மணிபல்லவத் திருந்து கண்ணகி கோயில்காணப் போவதாகப்புறப்பட்டு, மணிபல்லவத்திற்கு வடமேற்கே அவள் கோயில் கொண்டுள்ள செங்குன்றத்திற்குச் சென்று, மீண்டுங் கிழக்கே வஞ்சிநோக்கி வந்ததாகக்கூறாமல், புறப்படும் பொழுதே, "வஞ்சியுட்செல்குவனென்றந்தரத்தெழுந்த" (2) மணிமேகலை வஞ்சிக்குப்போகும் வழியிற் செங்குன் றிலிறங்கித் தாய்கோயிலிற்பணிந்து பிறகு வஞ்சிப்புறஞ்சேரி புகுந்ததாகத்தெரிவதாலும், இவ்வாறு செங்குன்றத்திற்கு மேற்கே இவ்வஞ்சிப்புறவூரும், கருவூராமகவூரும், மகோதைப்பட்டினமும், ஒன்றற்குமேற்கொன்றாயடுத்துநின்ற வரிசைப்படி மணிமேகலை யவ் வோரூர் மூன்றுபாக்கங்க(3)ளையு முறையே சென்று கண்டதாக கூறப்படுதலானும், சேரர்வஞ்சி யிக்கடலருகே மகோதை வஞ்சைக்களமே யன்றிப் புனனாட்டிற் செங்குன்றமலைக்கு 300 மைலுக்குக் கிழக்கிலுள்ள சோழர்தொல்குடிக்கருவூ ரானிலையாகா தென்பது வலிபெறுகின்றது. இதனா லரசர்புரிசை யமைந்த நடுவூர்ப்பாக்கமாம் வஞ்சிமுற்றத்திற்குக் கிழக்கே புறஞ்சேரிநோக்கி யொருவாயிலமைந்திருந்தாலு மது புறக்கடைவாயிலே யென்பதும்,
-------------
(1) மணிகாதைகள் 26,27,28; (2) காதை 25 வரி 38,39.
(3) பாக்கம் = ஓர் பேரூரின் சிறு பகுதி; கூழை = கடையணி (Rearguard.)

அம்மூதூரின் முக்கியவாயில் முன்றுறை நோக்கிய குடவாயிலே யென்பதும் போதருகின்றது; போதரவே, சுபதினத்தில் வடதிசைநோக்கிப் புறப்பட்ட செங்குட்டுவன் தானை வஞ்சிமுற்றத்தின் முன்றுறைக்கடல் நோக்கிய பிரதான மேற்குவாயில் வழியே தான் சென்றிருக்க வேண்டுமென்பதுந் தெளிவாகின்றது. இதனாற்றான் அடிகள், தம் தமையன் வடயாத்திரையி லவனுடனடந்தசேனையின் தலைத்தார் சேரநாட்டின் கீழெல்லையானமலைமுதுகு நெளியவேற, கூழைப்படை வஞ்சிமுற்றத்தின் முன்றுறைக் கடலினலை விளிம்புசூழ்போத, நடுவணிகள் இக் கடல்மலைகளுக்கிடை நிலமதர்பட நடந்தனவென் றெழில்பட வருணித்துள்ளார். இப்பெரும்புலவர் தருஞ்சான்றி ரண்டானும், மலைநாட்டுத் தலைநகரான வஞ்சிமூதூர், குணவாயிற் புறஞ்சிறை, 'இடைநிலைவரை'ப்பென்ற 'கருவூர்' அல்லது 'வஞ்சிமுற்றம்'. குடவாயில் முன்றுறை வெண்மணலடை கரைப்பட்டினமாம் மகோதை எனுமிம் முக்குடிப்பாக்கங்களாற் கூடிய பேரூரேயாமென்பதையமற வலியுறுத்தப்படுகின்றது.

இஃதெவ்வாறாயினும், இவ்வகப்பாட்டுச்செய்யு ளொன்றேகொண்டு வஞ்சியே கருவூரானிலையெனச் சாதித்தல் கூடாதாம். "பிற்பட்டசேரராசதானியாகத் தெரிகின்ற இவ்வூரை (கொடுங்கோளூரை)ப் பழைய வஞ்சி யல்லது கருவூரென்று கொள்வதற்குச் சங்கநூற் பிரமாணமொன்றுமே கிடையாது........ கொடுங்கோளூர் என்ற பெயரே பழைய நூல்களுக்குச் சிறிதுந் தெரியாத தொன்றாகும் ........சேர ராசதானியாகிய வஞ்சியென்பது ஆம்பிராவதிக்கரையிலுள்ள கருவூரேயன்றித் கொடுங் கோளூரேனும் திருவஞ்சைக்களமேனு மாகாவென்பதும் ......பேரியாற்றங்கரைத் திருக்கருவூரைப் பழைய வஞ்சியாகக் ..... கொள்வதற்குப் பொருத்தமும் பிரமாணமுமில்லை யென்பதும் நன்கு விளங்கத்தக்கன", என்று வரையறுத்துவாதிக்கும் ஐயங்காரவர்கள், கருவூரானிலையே வஞ்சியெனவும், ஆம்பிராவதியே பொருநைப் பேராறெனவுங் கொண்டதற்குக்கண்ட சங்கநூற் பிரமாணங்கள்தாம் யாவோ? கொடுங்கோளூரே-வஞ்சியென வற்புறுத்திய பலநூற்றாண்டுகளுக்கு முன்னுள்ள சேக்கிழார் வாக்கையும் அடியார்க்கு நல்லாருரையையு மடிப்பட்ட வதிகாரமாகாவென நிராகரித்தவர்கள், நேற்றெழுந்தவோர நாமதேயியின் கருவூர்க்கதைப்பாட்டை மேற்கோளாகக் கொள்வதென்ன வியப்போ? இப்புராணம் எச்சங்கநூலோ? இப்பாட்டு எவ்வளவு பழையநூற் பிரமாணமாகுமோ? இனி, "திருவஞ்சைக்களமே" 'வஞ்சி'யென்பாரிருவரும் தமிழகம்போற்றும் நல்லாசிரியரும் பெரும்புலவருமாகவும், ஐயங்காரவர்கள் இவரை ஒலி ஒற்றுமையொன்றேகொண் டிவ்வாறு தடுமாறினரன்றி வேறு பிரமாணங்காட்டாமையா லிவருரை மறுக்கற்பாற்றென்பர்களேல், இவர்கள்கூற் றிருவகையானு மிடர்ப்பட்டழியும், "இக்கருவூரின் தானத்தில் மலைநாட்டுக் கொடுங்கோளூர் சேரராச தானியாகப் பின்னூல்கள் கூறப்படுதல் காணலா" மெனவும், கருவூர் சோணாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றானசெய்தி சாசனங்களாலும் நூல்களாலுந் தெரிகின்றதெனவு மிவர்களே தம் புத்தகத்திலொத்துக் கொள்கின்றார்கள்(1). எனவே, ஆசிரியர் அடியார்க்குநல்லார் மகாமகோ பாத்தியாயரிவர்கள் கொள்கைக்குப் பிரமாணமுண்மை கண்டவராகின்றார்கள்; தம் துணிபுக்கோ கருவூர்ப்புராணப் பாட்டொன்றன்றி, "திருவானிலைக்கோயிலைப் பற்றிய தேவாரப் பதிகங்களிலேனும், அக்கோயிலிற் கண்ட சாசனங்களிலேனும் வஞ்சியின் பழஞ்செய்தி சிறிதும் குறிக்கப்பட்டிருக்கவில்லை" என்று பரிபவப்படுத்துவதல்லால், யாண்டும் யாதும் பிரமாணங்கண்டிலர்கள்.
-------
(1) பக்கம் 181.

ஸ்ரீகனக சபைப்பிள்ளை அவர்களின் "கொள்கைக்கு ஆதாரமா-யிருப்பதெல்லாம், கருவூரென்ற பெயரொற்றுமையொன்றைத் தவிர வேறு சாதனமில்லை. இங்ஙனம் பெயரொப்பொன்றையே கொண்டு நாம் ஒரு முடிவுபடுத்தல் எங்ஙனங் கூடும்?" என்றதனை யதுக்கியொதுக்கு மையங்காரவர்கள் தம் துணிவுக்குக் கண்டதெல்லாம், பொருநைசூழ் 'வஞ்சி'-ஆம்பிராவதிமேல் "வஞ்சுளாடவி," "அகப்பாட்டுக் கருவூர்"-"தேவாரக்கருவூரானிலை," புறப்பாட்டு ஆந் பொருநை"-கருவூர்ப்புராண "ஆன்பொருந்தம்" என்னும் பெயர்களுக்குள்ள வேகதேசவோசையொப்பேயாகக் காண்கின்றோம். ஏகதேசவோசையொற்றுமை யென்றேம்; கனகசபைப்பிள்ளை-யவர்கள் கண்ட "கருவூர்" "பேராறு" என்னுமுழுப்பெயரொற்றுமையும் ஐயங்காரவர்களுக்குக் கிடைத்திலாமையானும், இவர்கள் கொண்ட வஞ்சுளாரணியம், கருவூரானிலை, ஆம்பிராவதி என்பன முறையே பழைய வஞ்சி, கருவூர், ஆந்பொருந்தம் என்பவற்றிற்குச் சிறிது பிறிதிசைக்கும் வேற்றுமையுடைமையானும்.

ஐயங்காரவர்கள் புத்தகத்தில், தம்முடிபுக்காதவராக வஞ்சியிற் செங்குட்டுவன் வழிபட்ட சிவபெருமானாலயம் கருவூரில் "இப்போதுள்ள பசுபதீசுவரர் கோயிலேயாதல் வேண்டும்" எனுந் தம்மனுமானத்தையும், "காமதேனுவாகிய பசுவினாற் செய்யப்பட்ட ஆலயமாதலின் இதற்கு 'ஆனிலை' என பெயர் வழங்கியதென்பர். இது பற்றியே, இக்கோயிற் சிவபிரான் பசுபதீசுவரர் எனப் பட்டார்" என்னும் பிற்காலப் புராணக்கதையையுங் காட்டி, அமையாது பின்னும் "இவ்வாலயம் கருவூர்த் திருவானிலை' எனத் தேவாரப்பாடல் பெற்றிருத்தலோடு சோழர் சாசனங்கள் பல கொண்டதாகவுமுள" தென்றும் இங்ஙனம் கருவூர்க்கு 'ஆனிலை'யெனப் பெயரிருத்தல் போலவே, "அவ்வூரையடுத்துச்செல்லு மாம்பிராவதிக்கு ஆன்பொருந்தம் எனப்பெயர் வழங்குதல் ஈண்டுச் சிந்திக்கத் தக்கதெனவும்" வற்புறுத்துவாரானார்கள். "வஞ்சியிற் சேரன் வழிபட்ட சிவாலயம் கருவூரானிலை" யென்பதை ஐயங்காரவர்களனுமானமே யென்றேம். மூவேந்தர் மூதூர்களிலுமுள்ள பலகோட்டங்களையு மவையிற்றின் வரலாறுகளையும் விரித்துரைக்கு மிளங்கோவடிகள் காமதேனுக்கதை கூறினாரில்லை. சிலப்பதிகாரமுழுவதிலும் 'ஆனிலை', 'கருவூர்', 'ஆம்பிராவதி'ப்பெயர்களேனும் வரக்காணேம். கதைபல விளக்கிக் காதைகள் பெருக்கி, சிவபிரானை "ஆனேறுயர்த்தோன்", "தெண்ணீர்க்கரந்த செஞ்சடைக்கடவுள்", "நிலவுக்கதிர்முடித்த நீளிருஞ் சென்னியுலகு பொதியுருவத்துயர்ந்தோன்", "பிறவா யாக்கைப் பெரியோன்கோயிலும்", "நுதல்விழிநாட்டத் திறையோன்கோயிலும்" எனப் பலபடப் புனைந்து பாடிய அடிகள், "பசுபதீசுரப்" பான்மையை யறவே மறந்தனர் போலும். "ஆனிலை" சுட்டிய தேவாரப் பாசுரங்களும், சோழர் சாசனங்களும் மூதூர்வஞ்சியை முழுவது மறந்தன. இதற்கு மாறாகச்சேக்கிழாரோ, "சேவீற்றிருந்தார்"(i) திருவஞ்சைக்களமே 'சேரர் குலக்கோமூதூ"ரென்பர்.(11) சுந்தரருமிவ்வஞ்சைக் களத்தையு மதன் துறையான மகோதையுமே பாடியுள்ளார். (iii)இவ்வாறிளங்கோவும், பிள்ளையாரும், சுந்தரரும், அடியார்க்கு நல்லாரும், சேக்கிழாரும், சாசனச்சோழருமறந்த விவ் வருங்கதையெலா மொருங்குவந்து செங்குட்டுவன் சரித நூலாரை நினைப்பூட்டியவர் வாயுருவெடுக்க நேர்ந்தவிந்தை தானென்னே?
---------------------------------------------------------
(i)சேவீற்றிருந்தார்-விருடபாரூடரான சிவபெருமான்
(ii)சேரமான் புராணம் கவி 1
(iii) தேவாரம், திருவஞ்சைக்களம் பதிகம்

ஐயங்காரவர்கள் கொண்டபடி ஆனிலையே "குட்டுவர் குலமுதற்கோயி"லாமாயின், அக்கோயிற் சாசனமெலாஞ் சோழரேதரவு மென்றேனுஞ் சேரரைச் சேராததென்னோ? இவை பல விரிப்பிற் பெருகுமென விடுப்பேம். பண்டை நூலறியாப்பட்டி-யெலாந்தலமாகி, தத்தமக்குப் புராணங்களமைத்துக்கொண்ட இடைக்கால முதல், பாவலர் பலர் ஆரியப் பழங்கதைகளை வாரியிறைத்து, விரித்தும் திரித்தும், குறைத்தும் கூட்டியும், தத்தமாற்றலுக் கேற்றபடி கற்பனைக் காவியமலிவித்த தன்மை தெரிவாரெவரே யித்தலப் புராணக்கதைகொண்டொரு பழஞ்சரித முடிவு செய்வார்?


4ம் பகுதி - ஆனிலையருகாம்பிராவதி வஞ்சிசூழ்பொருநைதானா?


இவ் வஞ்சிசூழ்பொருநை, 'சிலப்பதிகாரமும்' 'பதிற்றுப் பத்தும்' புகழும் பேராறோ? அன்றி ஐயங்காரவர்கள் கூறியாங் காம்பிராவதியேயாமோ? ஆலத்தூர் கிழார் புறப்பாட்டும்(1), நக்கீரர் அகப்பாட்டு(2)மன்றி, சங்க நூல்களிற் பலவிடங்களிலு-மிவ்வாறு 'தண்பொருநை'(3) -'தண்ணம்பொருநை'(3)-'தண்ணென் பொருநை'(3) -'தண்ணார் பொருநை'(3)-யெனவே வருவதன்றி, ஆன்பொருநை'யென வரக்காணாமை யீண்டுச் சிறிது கவனிக்கற்பாலது. ஐயங்காரவர்கள் கூறியாங்கு, இவ்வாம்பிராவதிக்குத் தெய்வப்பசுச்சம்பந்தமாக "ஆன் பொருநை" யென்றே காரணப்பெயரேற்படவும், இதனையக்காலப் புலவர் பலரும் இவ்விசேடணக் குறிப்பொழித்துப் பாண்டியனாறோ வென்றையுற வாளா "பொருநை" யென்றேகூறக் காரணமுண்டோ? ஆன்பொருநை எனவந்த மேற்குறித்த விரண்டிடங்களிலுங்கூட, "தண்ணாந்பொருநை"(4)யென்றிருக்கக் காண்கின்றாம்.
-----------
(1)புறம்-36 (2)அகம்-93 (3)புறம்-11,387 சிலம்புகாதை 29. வரி-448. காதை-27,வரி 23*,காதை-28 வரி126. (4)புறம் 36

இவை "தண்ணார்பொருநை,"..."தண்ணென் பொருநை"- "தண்ணம் பொருநை" என்பவற்றொன்றின் பாடபேதமாகலாமோ வெனுமையம் நிற்க. "ஆந்பொருநை" என்றபாடமே கொள்ளினும், அஃதாம்பிராவதி நதியாகா தென்பதெந்துணிபு. மேற்குறித்த காமதேனுக்கதை குறித்து, பதிகருவூரானிலையானதேபோல், நதியும்-ஆன் பொருந்தமாயிற்றென ஐயங்காரவர்களே விளக்கியதை மேற்காட்டியுள்ளேம். ஆகவே, ஆம்பிராவதியின் மறுபெயரான ஆன்பொருந்தமென்பது, காமதேனு காரணமான புராணப் புனைபெயரே யாகுமென்பதொருதலை. இனி முன்னூல்கூறுஞ் சேரர் பேராறோ 'ஆந்பொருநை' எனத் தந்நகரமெய்கொண்ட பெயரேயாகும். இதன் காரணமும் வெளிப்படை. செழியனை வையைத் துறைவனென்றும், சென்னியைப் பொன்னித்துறைவனென்று மழைப்பதேபோற் சேரனைப் பொருநைத்-துறைவனென்பது பண்டை வழக்காம். எனவே, பொருநை, பொறையருக்கேற்புடைப் பேராறாகும். ஆகவே, கொற்கையிற் சங்கமிக்கும் பாண்டியன் 'பொருநை'யினின்று மிம்மலை நாட்டுப் 'பொருநை'யைப் பிரித்துக்காட்ட லவசியமே யன்றோ? இச் சேரர்பொருநை, மலைநாட்டாறாகையால், மலைநாட்டில் "இடவப்பாதி"(a)ச் சாரல் மழைகொண்டு ஆநிமாதத்திற் பெருக்கெடுக்குங் காரணம்பற்றி, ஐயங்காரவர்களே காட்டியுள்ளபடி, 'ஆநி' என்னுமொரு மறு பெயருங்கொண்டுளது. (i) ஆகவே, ஆன்றசான்றோரிதனை, 'ஆநி'யாகிய 'பொருநை' என்பது குறித்து,
"ஆந்பொருநை" என்றார் போலும்.
-----------
(a)"இடவப்பாதி" என்பது மலையாள தேசத்து வழக்கு; வைகாசி மாதத்தின் பிற்பகுதி என்று பொருள்.

எனைத்தேயாயினும், 'பசு'சம்பந்தமாகப் பிற்காலத் தெழுந்த 'ஆன்பொருந்த'ப்பெயரும், தந்நகர மெய்கொண்ட "ஆந்பொருநை" என்னும் பழையநூற் பெயரும் ஒன்றெனலாமோ? சமீபத்தில், தமிழ் வளர்க்க முளைத்த சென்னைச் சர்வகலாசாலைச் சிறுகழகத்தொருவர், ஒலிநுணுக்க விலக்கணங்களோராதே, தமிழில் வீணே வழங்கும் 'ற-ர' 'ழ-ள' 'ந-ன' எனு மோரொலி யிரட்டை யெழுத்துகள், தம்போற் றமிழபிமானப் புலவரை யிடர்ப்படுத்துவதாயும், அவற்றினொவ்வொன்றே கொண்டு மற்றையதை, அடர்தளிரரிந்து செடிவளர்ப்பார்போல், காதலாற் களைந்தெறிவதே சௌகரியமும் மொற்றுமைநயமு முதவுமெனவும் கூறிய அருமை யுபதேசத்தை மேற்கொண்டுய்ய முன்வருமபிமானிகளைத் தவிரப் பிறிதெவரே, பொருளானு முருவானும் வரலாற்றானு மாறுபட்ட விவ்விருவேறுபெயர்கொண்ட நதிகளிரண்டு மென்றேயென்பார்?

--------
(i) Note. "ஆநி"-இது கேட்டைமூலம் என்னும் நட்ச்த்திரங்களுக்கும், அவை காரணமாக ஒரு மாதத்திற்கும் பெயராயிற்று. ஒவ்வொருமாதப் பௌர்ணமியோடுகூடிவருவதற்குரிய மூன்றுநட்சத்திரங்களுள் முதல்நட்சத்திரப் பெயரே அவ்வம்மாதப்பெயராகி, பன்னிரண்டுமாதங்களுக்கும் பெயரமைந்திருப்பது பிரசித்தம். ஆநித்திங்களில், பௌர்ணமித் திதியோடு சேர்ந்துவரும் நட்சத்திரம் மேற்குறித்த கேட்டை மூலம், என்பனவற்றொன்றாகும். இதனால், இவையிற்றின் பெயரான 'ஆநி' என்பது அம்மாதப் பெயராய் நிற்றலும் வெளிப்படை. இப்பெயர் "வடமொழித்தொடர்புடையதாகும்: ஆகவே" தந்நகரமேயுடையதாகும். மொழிநூனுணுக்க முறைமுழுதுணர்ந்த வீரமாமுனிவரும் தம்மகராதியில் இவ் 'ஆநி'க்கிளவிக்குத் தந்நகரமே புணர்த்தியமைத்திருப்ப தீண்டுச்சிந்திக்கத்தக்கது. இனி, இம்மாதப்பெயர், 'ஆநியமழை' (South west monsoon)யால் அம்மாதத்தில் பெருக்கெடுக்கும் நதிக்கானது, இருமடியாகுபெயர்.

இன்னுமிவ்வாம்பிராவதி, "வஞ்சிப்புற மதிலலைக்கும் பொருநை" யாகாதென்றறிவிக்குஞ் சான்றுபல பிறவுங் காண்பாம். புனல்படு துறைகளின் வளங்கமழ் கவிதருஞ் சம்பந்தர், கருவூரானிலைப் பதிகமுழுதிலுமே, இவ்வூரை நதிமேற்பதியாகச் சுட்டினாரில்லை; ஆறிலாவூரே போற் பாடியுள்ளார். காவிரியும் ஆம்பிராவதியுங் கருவூரை யொட்டாதெட்டியொடுமியல் பின்னாளதன்று, ஆளுடைப் பிள்ளையார் தந்நாள் தொட்டேயுள்ளதென்பது மிதனாற் போதரும். புறப்பாட்டில், "புறமதிலலைக்குந் தண்பொருநைப் புனற்பாயும் வஞ்சி"(1)யென இளவெயினி, குண்டுகட் பாலியாதன், எனுமிரு பெரும்புலவர் தகவுரை காண்பே மாதலால், பொருநையாறு (கருவூர்க்காம்பிராவதிபோற் சேய்மைத்தன்றி) வஞ்சியூர்தழுவியூட்டும் வேறு நதியேயாகவேண்டும். அன்றியும் ஐயங்காரவர்கள், "வராகமலையிலுற்பத்தியாகி மாமரச்சோலை வழியே செல்லுதலால்," ஆம்பிராவதிக்குச் "சூதநதி" எனு மறுபெயருண்டெனவும், இவையிரு பெயருங் காரணக்குறியெனவுங் காட்டினார்கள்.(2) இந்நதியே பொருநையாமாகில், இயற்கைநல நயந்து பன்மரச் சோலை வளமினிதுவிரிக்கு மிளங்கோவடிகளிவ் விசேடணங்குறியாமை வியப்பாமன்றோ?

புனனாட்டாம்பிராவதியாறு "வஞ்சி சூழ்பொருநை" யன்றெனக் காட்டுங் குறிப்பின்னுமொன்றுளது. 'ஆநி' 'ஆந்பொருந்தம்,' 'தண்பொருநை,' எனப் பலவாறழைக்கப் படும் "வஞ்சிப்புறமதிலலைக்கும் கல்லென் பொருநை"(3)க்கே-'வானி' எனவுமொரு பெயருண்டென, ஐயங்காரவர்களே எழுதியிருக்கின்றார்கள்.
----------
(1)புறம் 11,387. (2)பக்கம் 120,121. (3)புறம் 337

(4) இந்நதியையே, இளஞ்சேரலிரும்பொறையைப் பாடிய பெருங்குன்றூர் கிழார், " சாந்துவரு வானிநீர்" (5)- எனவும், "தெண்கடன்முன்னியவெண்டலைச்செம்புன லொய்யுநீர்" (6)- எனவும், "மாற்றருந் தெய்வத்துக் கூட்டமுன்னிய புனன்மலி பேரியாறு"(7)- எனவுஞ் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவ்விளஞ்சேர லிரும்பொறையை, மேற்குக் கடற்கரைத் தொண்டிப்பட்டினத்திலிருந்து மலைநாட்டை யாண்ட சேரனெனவும், ஆனிலைக் கருவூருடையானன்றெனவும், ஐயங்காரவர்கள் விதந்து கூறியுள்ளார்கள்(8). இவ்வாறிம் மலைநாட்டு மேற்கடற்பட்டினத்தாண்ட சேரனைப் புகழுங்கால், அவனாட்டாறாகப் புகழ்ந்து பாடும் புலவர் புனனாட்டாறைப் பாடவியலான்றோ? இவ ரிச் சேரலிரும்பொறையைப் புகழுங்கவிமூன்றினு மிவ்வாறு சுட்டியபகுதிகளை மேலேகாட்டினேம். இவைகளால், இப்புலவர் இவ்விளஞ்சேரலிரும்பொறையின் மலைநாட்டா றொன்றையே, 'பேராறு' எனவும், 'வானிநீர்' எனவும், 'வெண்டலைச் செம்புனலொய்யுநீர்' எனவும், பலபடப் புகழ்ந்தனரென்பது தெளியப்படுகின்றது. இப்பேராறு ஆம்பிராவதியல்லாத வொருமலைநாட்டாறென்பதோ குட்டுவன் சரித நூலிலு மங்கீகரிக்கப்பட்டதொன்றாம். (1) இவ்வாறு, அயிரைமலைத் தொடரினின்றெழுந்து, மேற்குமுகமாயோடி, கொடுங்கோளூர்த் துறையில் மேலைக்கடலொடு சங்கமிக்கு மிப்பேராறே 'வானி' யென்று செங்குன்றூர்கிழார்பாடியிருப்பதாலும், இப்பே ராறே இளங்கோவடிகளால் தந்தமையன் செங்குட்டுவனாறாகப் புகழப்பட்டிருப்பதாலும்,
--------------------------------------------------
(4) பக்கம் 117; (5) பதிற்று 86: (6) மேற்படி 87. (7) மேற்படி 88;
(8) பக்கம் 20; (1) பக்கம் 125

இப்பேராறாம் வானியே 'வஞ்சிசூழ்' பொருநையாக ஸ்ரீ ஐயங்காரவர்களு மொப்பக்கொள்வதாலும், இப் பொருநை 'ஆனிலை'க் கருகோடுவதும், "தெண்கடன்முன்னாது" காவிரியொடு கலக்குஞ்சிறு துணையாறாவதுமான 'ஆம்பிராவதி' நதியாகாதென்பதை யிதனினும் விசதமாக்க வல்லதொரு பிறசான்றெதுவு மினிவேண்டாப்படாதாகுமன்றோ? ஆகவே, 'வானி' எனவும், பேராறெனவுமழைக்கப்படும் பொருநைநீர் "புறமதிலலைக்கும்" வஞ்சிமூதூரும், இவ்வானியாம் பேராற்றின் மேலதாகிய திருவஞ்சைக்கனமாவதல்லால், - புனனாட்டில், ஆம்பிராவதிக்கருகே, யாறெதுமே தீண்டாத வுண்ணாட்டூராகிய "ஆனிலைக்கருவூரா" காது - என்பதையு மிஃதொன்றே ஐயமற வலியுறுத்துவதாகும்.

மேலும், ஆம்பிராவதி, காவிரியின் துணைநதியாய், புனனாட்டதாகின்றது, 'பொருநைத்துறைவரெனும்புனைவுப் பெயர்ப் பெருமிதங்கொள்ளு முடியுடைச்சேரருக்குத் தம் மலைநாட்டிற்பெரிதும், கடல்வாய்யவனர் கப்பலேறும் பெருமைத்தும், பேராறென வோரியற்பெயரே பூண்டதுமான ஆநிப்பொருநையும்- "தன்மலைப்பிறந்து தன்கடன்மண்டு மலிபுனல் நிகழ்தருந்தீநீர்" (i)நதம் (ii)பலவுமுளவாகவும், அவையிழித்து, மாற்றரசருக்குரிய காவிரியினொரு சிறுதுணையாறு பாடுவது வீறுதருமோ? "பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டுமென .............. மன்னவன் விரும்பி நூலறி புலவரைநோக்க, ஆங்கவர் ஒற்காமரபிற் பொதியிலன்றியும் விற்றலைக் கொண்ட வியன்பேரிமயத்துக் கற்கால் கொள்ளினுங் கடவுளாகும், கங்கைப் பேர்யாற்றினுங் காவிரிப்புனலினுந்தங்கிய
நீர்ப்படைத் தகவுடைத்தென்"றாரை, "பொதியிற் குன்றத்துக்கற் கால்கொண்டு முதுநீர்க்காவிரி முன்றுறைப்படுத்தல், மறத்தகை நெடுவாளெங்குடிப் பிறந்தோர்க்குச் சிறப்பொடு வரூஉஞ்செய்கையோ?
--------------------
(i) பதிற்றுப்பத்துச்செய்யுள் 48 வரி 13,14
(ii) நதம் - மேற்கோடும் ஆறு

அன்று" (iii)- என்று வெகுண்ட செங்குட்டுவன் குலச்செருக்கின் பெருமிதத்தை யடிகளினிது விளக்கியிருக்கக் கண்டுவைத்தும், தன்குடிப் பிறந்தார்க்கு மொவ்வாதெனவெறுக்குங் காவிரியின் துணைச் சிற்றாற்றின்றுறைவனென்-றழைப்ப தவன்தருக்கும் புகழும் பெருக்கும் பெற்றித்தெனல் தகவுடைத்தோ? கருவூரானிலையே வஞ்சியாகில் அடுத்ததனருகோடுங் காவிரியி லனைத்துப்பகுதியும் சேரர்க்குரியதோ? உரிய சோழரை வென்றதகவன்றி, இயலுரிமை தனக்குண்டேற் செங்குட்டுவன் மேல் அடிகள் குறித்தபடி, காவிரியை வெறுப்பதியல்பாமா? உரிமையின்றேல், காவிரிக்கு இரண்டரைமைல் தூரத்தே கடல்மலை பேராறென்னு மிவையொன்றேனுஞ் சாராப் புனனாட்டொரூரைத் தந்தலைநகராச் சேரர் கொண்டமைதலியல்போ? பேரரசரூரெல்லாம், கடன்மேலாதல், மலைமிசையாதல், அலைதவழ்விரி புனலாற்றின் வாயாதலமையக் காண்பாம். இம்முத்திற வியற்கையரணமு மிவைதருஞ் செவ்வியும் வளனும் பெறாவொரு கோநகர் காண்பதருமை.
-------------------
(iii) சிலப்புகாதை 25, வரிகள் 114-125


5-ம் பகுதி: கொங்குநாடு மலைநாடாமா


ஐயங்காரவர்களிக் கருவூரைக் கொங்குநாட்டுத் தலங்களொன்றெனக் கூறியதறிவோம்: (i) ஆயினும் கருவூரைக் கொங்குநாட்டூராகக் கொண்டதிற்கிவர்கள் கண்டபிரமாண மினைத்தெனக் காட்டிலர்கள். யாமறிந்தவரை, தேவாரப்பாசுரங்களை, பண்முறைப்பாகு பாட்டினுஞ் சிறிது பயனுறப் பண்ணநினைத்து, தலமுறையாத் தொகுத்துப்பதித் தோரதற்கென வகுத்துக்கொண்ட முன்னட்டவணையில், "கொங்குநாட்டுத்தலங்கள்" எனும் தலைப்பின் கீழ் இக்கருவூரானிலைப் பதிகத்தைப் பெய்து வைத்ததொன்றேயிக் கொள்கைக் கடித்தனமாய் நிற்பது. அட்டவணை தொகுத்த அநாமதேயியினதிகாரமொன்றே வைத்து, கருவூரைப் புனனாட்டதாக ஆன்ற புலவருமடிப் பட்ட பழவழக்குங்கொண்ட கொள்கையை மாற்றலாமோ? சேக்கிழார் பெரியபுராணத்தே ஆனிலைக் கருவூரை அநபாயசோழன் "சீர்மரபின் மாநகரமாகுந் தொன்னெடுங் கருவூரெனும்..... மூதூர்"(ii) எனவும், சோழர் "தங்கள் குல மரபின் முதற்றனிநகராங்கருவூரின்........மருங் கணைவார்.........மகிழ் திருவானிலைக் கோயில்"(iii) எனவும், விதந்து கூறியுள்ளார். இவ்வாறு பெரியபுராணம் தந்துணிபொடு முரணுவதுகண்ட ஐயங்காரவர்கள் சரித நூற்சார்புடைய விம்மேற்கோள்களைப் பொய்யென வொதுக்கவேலாமை கண்டு, இக்கருவூரிடைக்காலத்தே சோழராதிக்கத்திற்கு வந்து, சேரர் பழஞ்சார்புடைமை மறக்கப்பட்டிருக்கலாமெனவொரு அற்புதக் கற்பனை செய்தமைந்தார்கள். இக்கருவூரானிலை முன் சேரனிட மிருந்ததற்கும், பிறகு அதனைச் சோழர்வென்று தந்தலை நகராக்கிக் கொண்டதற்கும் ஐயங்காரவர்களுக்குக் கிடைத்த ஆதாரமறியேம். சங்கநூல்களோ? சாசனங்களோ? தெரிகிலேம். அரும்பழநூல் பல இடையிருட்காலத் திழந்துழலும் நம்மினு மிக்கருவூர்ச் சரித்திரவுண்மையை யிற்றைக்குச் சற்றேறக்குறைய எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்காலத்தவர் நன்கறியலா மென்பதிழுக்காதன்றோ?
------------------------------------------------
(i) பக்கம் 120, 132.
(ii) பெரியபுராணம் எரிபத்தர் செய்யுள் 2
(iii மேற்படி புகழ்ச்சோழர் செய்யுள் 11,12

அக்காலத்தெழுந்த பெரியபுராணமுடையாரிக் கருவூரைச் சோழரூரென்றதோடு மமையாமல், மேற் காட்டியபடி யிருவேறு சோழர்வரலாற்றிடங்களிலவர் மரபின் வந்தார்க்கடிப்பட்ட தொன்னெடுந் தலைநகராகுமென் றிதிற்சோழராதிக்கப் பழமையை வலியுறுத்தியு முள்ளார். முறையே, இச் சோழர் சேக்கிழாருக்குச் சில பல நூற்றாண்டுகளுக்கு முன் இக் கருவூரிலாண்டவராவர். இப்புகழ்ச் சோழருக்கே யிக்கருவூர். "தங்கள் தொன்னெடுங் குலமரபின் வந்த முதற்றனிநகரா"மேல், இதிற் சோழராதிக்கந் தொடங்கியகாலம் செங்குட்டுவன்காலத்தொடு மிக நெருங்கினதும், சம்பந்தர்காலத்திற்கு முன்னதுமாயிருத்தல் வேண்டும். இச்சோழராதிக்கப் பழமையொன்றே, சேக்கிழாரிதனைத் தன்பாட்டுடைத் தலைவருக்கவர் குலமரபின் வந்த தொன்னெடுந்தனியூர் என்றதுடனேற் புடைத்தாகும். இவ்வாறன்றி, இக்கருவூர் சேரர் பேரூராயிருந்ததனைச் சோழரிடைக்காலத்து வென்று கொண்டிருப்பரேல், அவ் வெற்றிதோன்றப் பாடுமுறைவிடுத்து, அதை மறைத்து, தொன்றுதொட்டிதனை வளவர்குல பரம்பரையில் நின்றவூரென்றவர் புகழ்குறைத் துண்மையுந் திறம்பியிடர்ப்பட்டுச் சேக்கிழா ரிழுக்கி வழுக்குவரோ? புறப்பாட்டிற் கிள்ளிவளவன், கருவூர் முற்றியிருந்தானை ஆலத்தூர்கிழார் பாடிய பாட்டறிவேம். (i)அதுகொண்டிக் கருவூரானிலையைச் சோழர்முற்றியெடுத்து வெற்றி கொண்டகதை நிறுவலாகாதாம். என்னை? முதலில் "கருவூர்" என்னும்பெய ரிவ்வாலத்துர்கிழார்பாட்டிலில்லை. தொகுத்த பிற்காலத்தவர் பெய்துவைத்த குறிப்பேயாகும். இரண்டாவது, பொருநை மிசைக்கருவூர் (வஞ்சி) இக் கருவூரானிலைதானென்பது பிறசான்றா னுறுதிபெறுமுனிதனைத்தீர்ந்த முடிபாக்கொள்ளல், ஐயமறுக்கும் விடையிறந்து வினாவிரக்கும் வெற்றுரையேயா மன்றோ?
------
(i) புறம் 36

இவ்வாறிக்கருவூரைப் புனனாட்டுச்சோழர்மூதூராக் கண்ட சேக்கிழாரே, "தொன்மலைநாட்டு" (iv) "மஞ்சணியிஞ்சிவஞ்சி" (v)ப்பழம்பதியில், "சேவீற்றிருந்தார்"(ii) திருவஞ்சைக்களமு நிலவிச்(iii) சேரர்குலக் கோவான சேரமான்பெருமாள் "வீற்றிருந்துமுறைபுரியுங் குலக்கோமூதூர் கொடுங்கோளூரே" (iv) யாமெனவும் விளக்கியுள்ளார். இத் திருவஞ்சைக்களத்தையுமதன் அலைவாய்த்-துறையானமகோதையுமே சமய குரவரிலொருவரான சுந்தரமூர்த்திகளும் பாடியிருப்பதை மேலே காட்டினேம். இவ்வூர் பழையவஞ்சியன்றாமாகில் தமிழகவரைப்பிற் சிவத்தலங்கடோறுந்தேடிச்சென்று வழிபட்டு மனங்கசிந்து பாடுவதையே மேற்கொண்டொழுகிய சுந்தரர், செங்குட்டுவன்வழிபட்ட "பிறவா யாக்கைப் பெரியோன்" கோயிலைமறந்து, சேரர்வளநாட்டிற் பிற்காலத்தூரிவ் வொன்றனையே பாடியமைவரோ? என்பதுஞ் சிறிது சிந்திக்கத் தக்கதே. சுந்தரர்பாடியவிம் மலைநாட்டுக் "கடலங்கரை மேன்மகோதை"(i)யைச் சுட்டுங்கால், சேக்கிழார் "மலைநாட்டுப்பழம்பதி"யாந் திருவஞ்சைக்களத்துறையே "கோதையரசர் மகோதையெனக் குலவு பெயருமுடைத்துலகில்" என விசதப்படுத்தியு மிருக்கிறார்.
----------------------------------------------------
(ii) சேவீற்றிருந்தார்-விருடபாரூடரான சிவபெருமான்.
(iii)நிலவி-பரவி; வழிபட்டு
(iv) பெரியபுராணம்-சேரமான்-செய்யுள் 1
(v) வெள்ளானை செய்யுள் 22
(i) சேரமான் புராணம் செய்யுள் 4- தேவாரம்-திருவஞ்சைக் களம்பதிகம்.

அன்றியும், பெரியபுராணத்தில், கருவூர்ச்சோழர் புனனாட்டுக்கும், வஞ்சிச்சேரர் வளநாட்டுக்குமிடையே பிறமன்னர் முறைசெய்யுங் கொங்குநாடொன்றுளதாகப் பன்முறை வற்புறுத்தப்பட்டுள்ளது. இவ்விடைக்கொங்கு நாடுண்மையு மதுபிறநாடாவதும் மலைநாட்டிளவரசர் பாடிய சிலப்பதிகாரத்தானுஞ் சேரர்வரலாறே கூறும் பதிற்றுப்பத்தானு மினிது விளங்கும்;(ii) இக் கொங்கரிடையிடையே சேரவீரர் சிலர்க்கிடைந்தாரை யவர்வென்று திறைகொண்டிருப்பினும், இக்கொங்கு நாடு மலைநாட்டோடொன்றித் தன்னிலையிழந்திறவாத் தனிநாடாய் என்றும் நின்றதென்பதற்கு, தமிழகமும் வடநாடுமொருங்கு வென்ற தனிவீரன் குடக்கோச் செங்குட்டுவன் கோல்வளர்ந்தநாளும், வேற்செழியன் கண்ணகிக்கு விழவெடுத்து நாடுமலிய நோயுந்துன்பமும் நீங்கிய போது, "அதுகேட்டுக் கொங்கிளங்கேசர் தங்கணாட்டகத்து நங்கைக்குவிழவொடு சாந்திசெய்ய, மழைத்தொழிலென்று மாறாதாயிற்று" என்னுமிளங்கோவடிகள் வாக்கும் (iii)- "மாகெழுகொங்கர் நாடகப்படுத்தவேல்கெழுதானை" (iv)ப்பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடியபாட்டும், -சோணாடுவிட்டு, "கொங்கு புறம்" படமலை நாட்டிற்சென்று, "குடபுலத்து"ள்ள சேரர் கருவூரெறிந்து, வெற்றிபெற்ற "கொற்றவேந்தா"ன கிள்ளிவளவனைக் கோவூர்கிழார் பாடிய புறப்பாட்டுமே(i) போதிய சான்றாமன்றோ?
-----------------------------------------------------
(ii) சிலப்பு உரைபெறு கட்டுரை வரி 6; 25-153; 30-159; 29-2 ,3; பதிற்றுப்பத்துச் செய்யுள் 22,77,88,90, (iii) சிலப்பு, உரைபெறுகட்டுரை வரி 6, (iv) பதிற்று 22,
(i) புறம் 373

இவ்வாறே சேக்கிழாரும், வஞ்சிக்குச்சென்ற சுந்தரர்வழியும், வஞ்சிவிட்டுச் சோணாட்டிற்கு வந்த சேரமான்வழியும், குறிக்குங்கால், இடையே இக்
கொங்கர் பிறநாடுண்மையை மிக விசதப்படுத்தியுள்ளார்.(ii)

இன்னும் முன்னூல்களில் யாதோராதாரமுமின்றி, இக் "கருவூர் சோணாடு பாண்டிநாடுகளினெல்லையி லமைந்த"தென்று கூறிப்போந்த ஐயங்காரவர்களே, தன்னூலிற் கீழ்க்குறிப்பாக "கருவூர்க்குக்கீழ்பால், 8-மைலில் காவிரிக் கரையிலுள்ள மதுக்கரையைச் சேர சோழ பாண்டிய நாடுகளின் எல்லையாக இக்காலத்தாருங் கூறுவர்" என வோர்பொறுப்பில்லார் பிரத்தாபவுரை குறித்தமைந்ததன்றி, தன் மதமாக நூலுடலி லிவ்வூரைச் சேரநாட்டகத்தேனு மருகேனு முளதாக யாங்கணும் கூறத் துணியாமையும் பொருளுடைத்தன்றோ? இதுவேயுமன்றி இவர்களே, சோணாட்டின் மேற்கெல்லை கருவூரென்பர், யாப்பருங்கலக் காரிகை உரைகாரர்" எனவொரு மேற்கோளுந் தந்து வைத்துள்ளார்கள். இவ்வாறிக் கருவூரானிலை, சோழர் பழவூரும் சோணாட்டு மேற்கெல்லையுமாக, அதன் மேற்கே கொங்கர் நாடுளதாக, மலையரசர் தலைநகரைத் தன்னாடு முழுதும்விட்டு, நெடும்பிற நாடகன்றுவந்து சோணாட்டேசமைத்ததலியல்பாமோ? சால்புடைத்தோ? மேலும் பாண்டியனைக் *கூடற்கோமான்-தென்னவனெனவும் **சோழனைக் கோழி-வேந்தன்-புனனாடனெனவும், புனைந்துரைப்பதேபோல், சேரனை 'வஞ்சி வேந்தன்' 'குடக்கோ'வென்றே கூறுவது வழக்காறாகும். (iii) எனவே கொங்கரன்ன குறுநில மன்னர் பலரிருப்பினும்,
-------------
(ii) சேரமான் 45,47,50,140,141,164,172 வெள்ளானை 4,14,22,27,28,32
*கூடல்-மதுரை **கோழி-உறையூர்
(iii) சிலம்பு பக்கம் 463,475,484 மணிமேகலை பக்கம் 275 வரி 55

பொதுவாக "குமரிவேங்கடங்குணகுடகடலா மண்டிணிமருங்கிற்றண்டமிழ்-வரைப்"(i)பெலாம், குடமலைநாடு, குணபுனனாடு, தென்றமிழ் நாடென மும்முடியரசர் குடைக்கீழடங்கும் இவ்வுண்மை, வேனிற் றெய்வமாகிய வசந்தனுலவியின்பஞ்செய்யும், வடவேங்கடந் தென்குமரிக்கிடையே கிடக்கும், தமிழ்நாடு முழுவதையும் வரம்பறுக்க வந்த இளங்கோவடிகள், "நெடியோன்குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பறுத்த தண்புனனாட்டு, மாட மதுரையும் பீடாருறந்தையும் கலிகெழுவஞ்சியு"(ii)மென முடிவேந்தர் மூவரூரை மட்டுஞ்சொல்லி, அதனால் தமிழக வரைப்பு முற்றுமமைத்துக்கொண்டதனாலும் விசதமாகும். இத்தகைப் பெருமை முத்தமிழ்நாட்டு முடிவேந்தருள், "குடதிசையாளுங் கொற்றங்குன்றா ஆரமார்பிற் சேரர் குலத்துதித்தோர்." (iii) புனனாட்டொரு சிற்றூர் பேணி, 'மயங்கி விடுதலறியா விருப்பினராகி வடுநீங்கு சிறப்பிற்றம்'(iv)வரைப்பெலா மறப்பரோ? இக்'குடக்கோ'ப் பெயரால், சேரன், 'மேற்றிசைக்காவல்வீற்றிருப்பவ'னென் றறிவதேபோல், பின்னுமிவனுக்குள்ள 'பொரையன்', 'மலையமான்', 'பொருப்பன்', 'வெற்பன்', 'குடகன்', (v)'குறிஞ்சிக் கோமான்' எனும் பலபிற பிரபல காரண வியற்பெயர்களானுமிவன் மேற்கடலடுத்த வளமலை நாடுடையா னென்பது, வெள்ளிடைமலையாமன்றோ? சேரர் இத்தண் கடற்படப்பை நாடெலாந் துறந்து, செம்பியன்காவிரிச் சிறுதுணையாற்றினருகு ஆனிலையூரிருந்து வந்திடுவரோ? என்பதுஞ் சிந்திக்கத்தக்கதேயாம்.
------
(i) சிலப்பதிகாரம் இறுதிக் கட்டுரை வரி 1-2
(ii) சிலப்பதிகாரம் வேனிற்காதை வரி 1-4
(iii)சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டக்கட்டுரை வரி 2-3
(iv)சிலப்பு - அரங்கேற்றுகாதை 173 வரி 175
(v) குடகு- மேற்றொடரொரு மலை.

இவை பலவானும், கருவூரானிலை புனனாட்டூரென்பதும், வஞ்சி மலைநாட்டுப் பட்டின*மென்பதும், இவையிருநாடுகளுக்கு மிடையே கொங்கர்பிறநாடு கிடக்கின்றதென்பதும்தெளிவாம். இது பற்றியன்றோ, இக்* "குடதிசையாளுஞ் சேரரே குலத்துதித்தோர்க்"குரிய வஞ்சிமூதூரில் அரசன் புரிசையமைந்த அகவூர்ப்பாக்கமாங் 'கருவூரைமுற்றியெடுத்த' சோழன் கிள்ளி வளவன் வெற்றிபாடிய கோவூர்கிழார் புறப்பாட்டிலும், இக்கருவூர் " குடபுலத்து வஞ்சிமுற்றம்" (v) என்றே சுட்டப்பட்டுளது.
--------------------------------
*பட்டினம்-கடற்கரையூர்.
(v)புறம் 373.

-------------

6-ம் பகுதி. "பூவிரியுனலொருமூன்றுடன் கூடிய கூடல்"- கருவூர்ப்புராணத் திருமுக்கூடலன்று:
முக்கடன்மணந்த குமரிக்கூடலேயாம்.


இனி, செங்குட்டுவன்சரிதநூலில், "செங்குணக் கொழுகுங்கலுழிமலிர் நிறைக்காவிரியன்றியும், பூவிரிபுன லொருமூன்றுடன் கூடிய கூடலனையை"(i) என்னும் பரணர்பாட்டைக்கொண்டு, வஞ்சியூர் மூன்றுயாறுகள் கூடுமிடத்திருக்க வேண்டுமெனவும்,- கருவூரானிலைக்கு வடகிழக்கே முக்கூடலுளதாக்கூறும் "வஞ்சுளாடவிக் குத்தரகுணக்காக வாம்பிராவதிநதி மதிபோல்-விஞ்சு மாமணிமுத் தாறுகாவேரி மேவுழி மேவு மேவுதலா லெஞ்சலிறிருமுக் கூடலென்றிசைப்ப" (ii) என்னுங் கருவூர்ப்புராணச் செய்யுளைக்காட்டிக் காவிரியுடன் தனித் தனிகலக்கும் ஆம்பிராவதி, மணிமுத்தாறு என்னு மூன்று நதிகளுக்கருகே கருவூரானிலை-யிருப்பதுகொண்டு வஞ்சி யிக்கருவூரேயாகுமெனவும் துணியப்படுகின்றது. (iii) வெளிவந்த பதிற்றுப்பத்துடையார், இப்பரணர் பாட்டின்கீழ் "மூன்றுடன்கூடிய கூடலென்றது, அக்காவிரி தானும், ஆன்பொருநையும், குடவனாறுமென இம்மூன்றும் சேரக்கூடியகூட்டம்" என்றுரை கண்டார். கருவூரானிலைக்கு வடகிழக்கே, சற்றேறக்குறைய 2 1/2 மைல் தூரத்தில், ஆம்பிராவதி காவிரியோடு கலக்கின் றது. குடவனாறோ கருவூருக்கு 12-மைலுக்குத் தென் கிழக்கே ஆம்பிராவதியிலேயே சங்கமமாகிவிடுகிறது. இவ்விடர்ப்பாடுகண்ட ஐயங்காரவர்களிவ்வுரை பரணர் பாட்டை வஞ்சிக்குப் பொருத்தமுடையதாகக் காட்டா தெனவிடுத்துப் பொருந்துமாறு தாமோர் புத்துரை கொண்டார்கள். குடவனாற்றிடத்தில் மணிமுத்தாநதியை நிறுத்திப் பழையவுரையைச் சிறிதுதிருத்தி, "ஆம்பிராவதி, மணிமுத்தாநதி, காவேரி மூன்றுங்கூடுந் திருமுக் கூடலை"(iv)யே பரணர் பாட்டுக் குறித்ததாக வைத்து, அதனால் வஞ்சி யிக்கருவூரானிலையாகுமென்றார்கள். எனில், "மணிமுத்தாநதி காவிரியோடுகலக்குமிடம் மேற்கே வெகுதூரத்துள்ளதா"க(iv) ஆம்பிராவதி யொன்றே கருவூரானிலைக்கருகே (சுமார் 2 1/2 மைல் தூரத்தில்) காவிரியுடன் கலப்பதாகும். எனவே, ஈண்டும் "முக்கூட"லென்பது கற்பனையேயாயிற்று.
------------------------------------------------------
(i) பதிற்று 50.
(ii) ஆம்பிராவதிச்சருக்கம் 45
(iii)சேரன்செங்குட்டுவன்கதை பக்கம் 117,122,129.
(iv) சேரன்-செங்குட்டுவன் பக்கம் 122, 123 அடிக்குறிப்பு

இவ்வாறு தம்முரையுமியற்கையொடு முரணுவதைக்கண்ட ஐயங்காரவர்கள், கொண்டதை விடாமல், "முற்காலத்தில் இந்நதி (மணிமுத்தாநதி) ஆன்பொருனையுடன் சேர்ந்து காவிரி யிற்சங்கமித்தது போலும்,"(iii)என்று ஏற்புழிக்கோடலோர் துணிபுதந்துரைத் தமைதிகண்டார்கள். "முற்கால" மென்பது எனைத்தளவோ? வெகுதொல்லை வேண்டாம். ஐயங்காரவர்களே கூறுகிறபடி "290-வருடங்கட்கு முன்னியற்றப்பட்ட கருவூர்ப்புராணச்" (i)செய்யு ளிம் மூன்றாறுகளுமொருங்கே கலப்பதையுள்ளவாறுகூறிற்றெனில், அப்படிக்கலந்தகாலம்சற்றேறக்குறைய 200-ஆண்டுகளுக்கு மேற்படாது. இத்துணைச்சிறுகாலத்தளவில் மணிமுத்தாறு மற்றிருநதிகளை நெடுந்தூரங்கடந்தேறிவந்து கலந்தவழியிழந்து, தன்னளவு குறுகி, முக்கூடலெட்டாது. கிட்டியாங்கொட்டி, மேற்கே முடிந்தநாள் விடிந்ததென்றோ? அவ்வாறு, இவ்வாறு, தன்னாறு மாற்றியதாகக் கொள்ளச் சரிதசாசன வியற்கைச்சான் றெதுவு முண்டோ? கிடைத்தசான்றுகொண்டு அவைகாட்டுமுடிபு துணிவதே யாராய்ச்சி முறையாகும்: அஃதன்றி, துணிந்த முடிவுக்கேற்ற சான்று தேடுவது சரிதநூன்மரபாகாது.

இனி, இப்பரணர்பாட்டி னியைபுதானென்னை? "புனலொருமூன்றுடன் கூடியகடல்" என்னுந்தொடர், கருவூர்ப்புராணத் "திருமுக்கூடலை"யே குறித்ததென்று கொள்வ தின்றியமையாததன்றே. காவிரி சோழனதாக வும், அதைச் செங்குட்டுவனுக்கு வமித்த காரணம்யாதோ? காவிரியாறு சேரனுடைமையாக் கூறும் பழநூலேனும் செய்யுளேனுமிதுகாறுங் கிடைத்திலது. எனினும், ஈண் டுப் பரணர் செங்குட்டுவன்பால் சோணாட்டுக் காவிரியை எடுத்தாளப் போதிய காரணமும் தகவுமுண்டு. செங்குட்டுவன் சோழரைவென்ற சரிதவுண்மைக்கேற்கத் தோற்ற வர்க்கேற்றதியைச் சொல்லிப்பரணர்,
--------------
(i)சேரன்-செங்குட்டுவன் பக்கம் 120 அடிக்குறிப்பு.

"வெந்திறலாராச் செருவிற்சோழர்குடிக்குரியோர் ஒன்பதின்மர் வீழ வாயிற் புறத்திறுத்த" (ii)குடக்கோச்சேரன் சேவகம் புகழ்வதானார். இஃது அக்காலப்புலவர் மரபு. இதுகொண்டே. என்றும், யாண்டும் எனைத்தேனும் சேரருக்குக் காவிரியாறுடைமையேனும், காவிரி மேனாடுநகருண்மையேனும் துணிவதிழுக்காம். தெவ்வடு வெற்றியன்றி, மற்றெவ்வகையானு முரிமையில்லாப் பிற நாட்டு நதி நகர்களைக்கொண்டு அவையுடையாரைப் போர் வென்றோரைப் புகழ்தல் பழமரபென்பது,-என்றும் சேரர் ஆண்டறியாப் புகார் குறித்து "இருபெரு வேந்தரையுமுடனிலைவென்ற.........அருந்திற லொள்ளிசைப் பெருஞ்சேரலிரும்பொறையை, மறுவில்வாய் மொழியரிசில்கிழார்"(i)பாடிக், "காவிரிமண்டிய சேர்விரி வனப்பிற் புகாஅர்ச்செல்வ"(ii)என்றழைத்தலாலும்,- சேரபாண்டியர்களுக்கேயுரிய வஞ்சி மதுரைகளைக் குறித்து, அவ்விருமுடிவேந்தரைச் சோழன்நலங்கிள்ளி போர்வென்ற பெருமைதோன்ற அவன் தன்னரசுக்குரிமையில்லாப் "பூவாவஞ்சியுந்தருகுவனன்றோ? ........... மாடமதுரையுந்தருகுவனெல்லாம்," (iii) என்றவனைக் கோவூர்கிழார் பாடிய புறப்பாட்டானும்,- "பெருஞ்சோழனையும் வென்றுவஞ்சிமூதூர்தந்து பிறர்க்குதவிய............... மன்னுயிர்காத்த மறுவில்செங்கோ லின்னிசை முரசினிளஞ் சேரலிரும்பொறை"யைப் பெருங்குன்றூர் கிழார், (iv)"செழும்பல விருந்த கொழும்பஃறண்பணைக் காவிரிப் படப்பை நன்னா டன்ன, வளங்கெழு குடைச்சூ லடங்கிய
------------------------------------------------------
(ii) பதிற்றுப்பத்து 5-ஆம் பத்துப்பதிகம்.
(i) பதிற்றுப்பத்து 8-ஆம்பதிகம்.
(ii) பதிற்று 73.
(iii)புறம் 32.
(iv) பதிற்றுப்பத்து 9-ஆம்பதிகம்.

---------------------

கொள்கை, யாறிய கற்பிற் றேறிய நல்லிசை வண்டார் கூந்த லொண்டொடி கணவ"(v)னென்று புனைந்து பாடிய வருமைப்பாட்டானும்,- இன்னமிவையன்ன பிற பல ஆன்ற சான்றானுமினிது விளங்கும். இன்னும் பதிற்றுப்பத்தில் சோழரைப் போர்வென்ற சேரர்மாட்டே யிவ்வாறு காவிரி புனைந்துரைக்கப்படுவதும், அவ்வெற்றியில்லார்க்கிப் பெற்றி சொல்லாமையும், உற்றுநோக்கிலிப் பழவழக்கு மிகவுறுதி பெறுவதாகும். இதனால், மேற்குறித்த பரணர் பாடலுக்கு மிம்மரபுதோன்றப் பொருள்கோடலே ஏற்புடைத்தாம்.

"காவிரியன்றியும் பூவிர் புனலொரு மூன்றுடன் கூடிய கூடலனையை," என்பது மூலம். இது சேரன் செங்குட்டுவன் மேலது. செங்குட்டுவனோ சோழர் ஒன்பதின்மரைப்புறங் கண்டவன் என்று பதிற்றுப்பத்தின் பரணர் ஐந்தாம் பத்துப்பதிகத்தாலறிவாம். இவ்வென்றி தோன்றச் செய்யுளிற் காவிரியை அவனுக்குவமித்த பரணர், அதுவேயுமன்றித் தம் பாட்டுடைத்தலைவன் பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின் முரரை முழுமுத றுமியப்பண்ணிய" (i)வெற்றியையும் நினைந்து, அதுபுனைந்துரைக்கக்கருதிச் சோழர்மேல் வெற்றி தோன்றக் "காவிரி" என்றெடுத்த புலவர், "அன்றியும்........புனலொரு மூன்றுடன் கூடிய கூடலனையை," என்று முடித்தார்போலும். குடகடல் முன் னரே தன்னதாக, முறையே சோழபாண்டியருக்குரிய குணதென்கடல்களையும் தன் வெற்றியாலுற்றதாக்கிக் கொண்ட செங்குட்டுவன் திறம் பாடும் புலவர், தெற்கே அம்முக்கூடல் கலக்கும்பெற்றியையும், ஆங்கம் முந்நீர்க்
கூட்டத்தால் வலிமிகுந்தலைக்குங் குமரிப்பௌவத்தினேற்றத்தையுஞ் சுட்டிப் "புனலொரு மூன்றுடன்கூடிய கூட்ட மனையை" என்று கூட்டி முடித்தார் என்பது மிகப்
பொருத்தமன்றோ.
------------
(v)பதிற்றுப்பத்து 90, பழையன்=பாண்டியன்
(i)5-ஆம் பத்துப் பதிகம்.

இவ்வழக்கு நோக்கியே, - பதிற்றுப் பத்துரைகாரரும், 3-ஆம்பத்துப்பதிகத்தின்கீழ், "இருகடனீரும் ஒருபக லாடி" என்றதற்கு, "இருகடலும் என்றது தன்னதாய மேல்கடலும், பிறநாட்டதாய்ப் பின்பு தான் பொருதுகொண்டு தன்னாடாக்கிய (சோழ) நாட்டிற் கீழ் கடலும் என்றவாறு," -என்றெழுதியுள்ளார். இதுவே போல், 51-ஆம் செய்யுளில் சேரலாதனைப்பாடும் நச்செள்ளையாரும், "பெருந்தெய்வத்து வளைஞராலும் பனிப்பௌவத்துக், குணகுட கடலோடாயிடைமணந்த" என்று முக்கடலுங் காட்டிக் கூறிவைத்தார். இதைவிடுத்துக் காவிரியுடன் வெவ்வேறிடத்துக் கலக்குந் தனிப்பெருமையேலாச் சிறு நதி யிரண்டின்கூட்டத்தைக் குறிப்பதாகக்கொண்டு இயல்பொடுமுரணிக் கவிச்சுவையுங் குறைப்பதல்லால் பெறுநயம் பிறிதொன்றுண்டோ?

இனி, இக்கவியின் 'முக்கூடல்' காவிரிமேலதாய "திருமுக்கூடலை"யே குறிக்குமெனக்கொள்ளினும், அஃதொன்று பற்றி வஞ்சி, யதனருகுளதாகக் கருதற்கவசியமுண்டோ? மேற்கண்டாங்குக் காவிரிப்பூம் பட்டினத்தையும், மதுரையையும் சேரர் வீரம்பாடுவார் உபசாரம் ஒன்றேபற்றி யவர்மேல்வைத்துப்பாடுவது மரபாமாகில், தன்னாடுபுகாமலும், நகரணுகாமலுமோடுஞ் சோணாட்டாறுகளைச் சோழரொன்பதின்மரை வென்ற வீரரேறாகிய செங்குட்டுவனுக் குவமிப்பதிழுக்காமோ? இழுக்காதேல், இப்பரணர் பாட்டுவமையொன்று கொண்டு, சேரர்தலைநக ரந்நதிகளுக்கணித்தெனச் சாதித்த லெப்படிக்கூடும்? வஞ்சியொடு கடல்சேர்த்துப்பரணரும் இளங்கோவும் விதந்துபாடாமையால் வஞ்சியுண்ணாட்டதென்று வாதிக்கும் செங்குட்டுவன் சரிதநூலார் இம்மூன்றாறுகளினணித்து வஞ்சியெனவிதந்தோது மேற் கோளொன்றுமின்றி யிவ்வுவமைகொண்டு தம் முடிபு நாட்டுவது சிறிது வியப்பைத் தருவதன்றோ? இவர் தம் முடிபுக்கு வேறு தக்கமேற்கோளுஞ் சான்றுகளுமுளவிடத் திவ்வுவமையை ஒருபுடைத்துணையாகக் காட்டியதன்றி யிதனைப் பிரமாணமாகக்கொள்ளவில்லையெனலாமெனின், தம் புத்தகத்தில், கொடுங்கோளூர் வஞ்சியென்பார் கூற்றைப் பலவாறு மறுப்பதல்லால், தாம் கருவூரானிலையே வஞ்சியென்று கொண்ட முடிபுக்கு ஏகதேசப் பெயரொற்றுமை களைத்த தவிர வேறுயாதொரு நேர்சான்றும் காட்டினதாயுமில்லை.
-------


7-ஆம் பகுதி. வஞ்சிமூதூர்பட்டினமா? உண்ணாட்டூரா?


இனி, "வஞ்சிமாநகரம் கடற்கரைக் கண்ணதாயின் சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய முன்னூல்கள் அதன் கடல்வளச் சிறப்பால் வருணித்துக் கூறாமற் போகுமா? ஒருகாலுமில்லை. அங்ஙனம் கடற்கரைச் சம்பந்தம் வஞ்சிக்குக் கொஞ்சமும் காணப்படாமையே, அஃதுண்ணாட்டு நகரமென்பதை விசதமாக்கவல்லது," எனவும் விதந்தோதிக்குட்டுவன் சரிதநூலார் தந்துணிபு வலியுறுத்து கின்றார்கள். முதலில் ஒரு நூலிலொன்று சொல்லப் படாமைகொண்டு அதனையில்லையெனத் துணியத் தருக்க மிடந்தராது. இரண்டாவ திப்பழநூல்கள் முறையே கண்ணகி, மணிமேகலை யிவர்களின் வரலாறு கூறவந்தனவன்றி, வஞ்சி வருணனை கருதியவுமன்றாம். எனவே இவைகளிற் பாட்டுடைத் தலைவரின் சரிதநிகழ்ச்சி கூறிச் செல்லுமிடத் தவர் வரலாற்றுமுறைக் கேற்புடைய வருணனைகளைப் பெய்தமைப்பதன்றி, எல்லாவிடங்களிலு மெல்லாவற்றையு முலப்புற வருணிப்பதழகுமில்லை, அவசியமுமாகாதன்றோ!? மூன்றாவது, சிலப்பதிகாரத்திற்போல், மணிமேகலை நூலிற் காவிரிப்பட்டினத்தையும், கொற்கையையுமே கடல்வளச்சிறப்பால் வருணித்துக் கூறப்பட்டதாயில்லை. (i) இதனாலிவையிரண்டு முண்ணாட்டூரென்பார்களோ? சிலப்பதிகாரத்தில் விசதமாகக் கொற்கைக்குக் கடனலங்கூறப்படவுமில்லை. அதுகொண்டிப் பழம்பதி பட்டினமன்றாமா?

இனிக்கடைசியாகத் தொன்னூல்களிற் சிறிதாழத் துருவுவார்க்குக் 'கடற்கரைச் சம்பந்தம் வஞ்சிக்குக் கொஞ்சங்காண'வேபடுகின்றது.

சிறுபாணாற்றுப்படையில், சோழபாண்டியரின் உண்ணாட்டூர்களான உறையூர், மதுரைகளைச் "செம்பியனோடாப் பூட்கை யுறந்தையும்" எனவும், "செழியன் தமிழ் நிலைபெற்ற தாங்கருமரபின், மகிழ்நனை மறுகின் மதுரையும்" எனவும், பாடிய நல்லூர்நத்தத்தனார், -கொற்கை, வஞ்சி நகரங்களைக் குறிக்குங்கால், அவை கடற்கரைக் கழிமுகத்தூர்க(ii)ளெனச்சுட்டுபு, "உமட்டியரீ(iii)ன்ற கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலியாடுந் தத்துநீர் வரைப்பிற் கொற்கை" என்றும், அஃதேபோல் மலைநாட்டிற்குட கடலடைகரைவயல் வளநயந்து,

"கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க்
கழுநீர் மேய்ந்த கயவா யெருமை,
------------
(i) மணிமேகலை புகார்பற்றியது 9-53,11-65,25-16 78 to 135.
கொற்கை பற்றியது 13-84. பட்டினம்=கடற்கரையூர்(Seaport)
(ii) கழிமுகம்=நதி கடலொடு கலக்குமிடம் (Ports at the river mouths)

பைங்கறி நிவந்த பலவி னீழன் மஞ்சண் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர, விளையா விளங்கணாற மெல்குபு பெயரா, குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளுங் குடபுலங் காவலர் மருமா னொன்னார் வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த எழுவுறழ் திணிதோ ளியற்றேர்க் குட்டுவன் வருபுனல் வாயில் வஞ்சியும்,"(iv) என்றும் விதந்து கூறியுள்ளார். இஃதேபோல் நாடகக் காப்பியத்துள் இளங்கோவடிகளும் மூவேந்தர் மூதூர் களையுந் தொகுத்துரைப்பார், 'மாடமதுரையும் பீடாருறந்தையும், கலிகெழு வஞ்சியு மொலிபுனற் புகாரு"(i)மென்று அவற்றினியல்பும் வளனுஞ் சுருங்கச்சொல்லி விளங்க வைத்தார். ஈண்டு உண்ணாட்டூர்களாகிய 'மதுரை','உறையூர்'களை யொருங்குவைத்து, அவற்றை 'மாடமலி, 'மதுரை'யெனவும், 'பீடுபெறுமுறந்தை'யெனவு மொருபுடையொப்ப வருணித்ததுமன்றி, அவற்றினின்றும் புகாரையும் வஞ்சியையும் பிரித்து, அவை தமக்கு முறையே யுடனொத்த அடைவேறு புணர்த்திய குறிப்பின் செவ்வி மறக்கற்பாற்றோ? காவிரிப்பட்டினக் கடல்வளம் விரித்தோர், வஞ்சித்துறை நலம் வஞ்சிப் பானேன்? என்பார், அடிகள். 'நாடகக்காப்பியத்தின் போக்கு மதனோக்கும், அவர் கதை நடத்துமுறையுஞ் சிறிது கவனிப்பாராக. கண்ணகி பிறந்தவள் பெண்ணல
--------------------
(iii)உமட்டியர் = உப்பமைப்போர் பெண்டிர் (Women-folk of the professional salt manufacturers)
(iv) சிறுபாண்வரி 41-50, தடித்சன மேலக்கடற்கரை வளனும், அக்கரைப் பேராற்றின் கழிமுகத் துறையாம் வஞ்சிநலமும் மனையிலக்கா விளக்கி நிற்பன.

முதிர்ந்து, மணவினை முடித்தவண் மனையற நடத்திய கோவலன் பெருங்குடிக் கோநகர்வளனெலா மிவர்தம் வரலாறு பலபட விரித்துழி விரிவதியல்பாம். மற்றிவர் சேரர் பேரூர்ச்சென்றும் புகுந்திலர். வஞ்சியி லிவர் சரிதநிகழ்ச்சி யொன்றுமே கிடையாதன்றோ? மேலும், அடிகள் தம்மூர் தாம் வியக்கும் விருப்பினராகாரென்பது, புகார் மதுரை நகர நலங்களை வஞ்சியினின்றும் பலபடவிரித் திவர்பெட் புறப் பேணிப் பாடிய திறத்தானுமினிது விளங்கும். இவ்வாறு வஞ்சிவளம் விரியாத சிலப்பதிகாரத்திலுமிதன் கடற்கரையணிமை 'யெஞ்சிய சொல்லி னெய்தக்கூறப் பட்டுள்ளதற் கையமில்லை.

பத்தினிக் கடவுட்படிவமெழுதவோ ரிமையக்கால் கொளவமையா தெழுந்து வஞ்சிசூடி வடபுல மேகுஞ் செங்குட்டுவன் வழிச்செலவை அடிகள்

    ......................"வஞ்சி நீங்கித்
    தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும்
    வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத,
    மலைமுதுகு நெளிய, நிலைநா டதர்பட,
    உலக மன்னவன் ஒருங்குடன் சென்றாங்
    காலும் புரவி யணித்தேர்த் தானையொடு
    நீல கிரியி னெடும்புறத் திறுத்தாங்கு"

என்றெழில்பட வருணித்துள்ளார். எனவே, தூசிப்படை (van-guard) குடமலை மிதிக்கவும், பின்னணி கடற்கரை நடக்கவும், இடை நெடுநிலமெலாம் படைசெறிந்தொழுக நீண்டு வஞ்சிநின்றெழுந்த வானவன் தானைப்பெருக்கம் இமயம்நோக்கி வடக்கே சென்று, நீடிய நீலகிரியடிவாரத்தே பாடியமைத்து முதலிற்றங்கியதென்பது தெளிவாகின்றது. இதனால் மேலைகடலிற்சங்கமிக்கும் பேராற்றி னலி முகப்பெருந்துறையே வஞ்சி மூதூராக வேண்டுமென்பது மலையிலக்காமன்றோ?
--------------
(i) சிலப்புகாதை வரி 3, 4, சிலப்புகாதை 28 வரி 79-85,

வஞ்சிநகர், நீலகிரிக்குத் தென் மேற்கே, கடற்கரைப் பேரூராயிருந்தாலன்றி, அதிலிருந்து வடக்கே புறப்படுஞ்சேனை, கடல்தொட்டு, இடை நாடதர் படநடந்து,மலைமுதுகு நெளிய ஏறிக்கடப்ப தெங் ஙனமாகும்? அன்றியும் ஆனிலைக்கருவூர் கடந்து வழி நடந்து வடக்கேகுஞ்சேனை நீலகிரியருகே தங்கக்காரணமு மில்லையன்றோ? ஐயங்காரவர்கள், அடிகளினிவ் வருமை யுரையைத் தம்புத்தகத்தின் கீழ்க்குறிப்பொன்றி லெடுத்துக்காட்டி, "இது,காவிரியருகாங் கருவூரானிலையிலிருந்து வடக்கே சென்ற செங்குட்டுவன் வடயாத்திரையிலுடன் சென்ற அவன் சேனையின் பரப்பு மிகுதியை வருணித்தபடியேயன்றிப் பிறிதன்று, வஞ்சி கடற்கரைக் கண்ணதாயின், தானைகளின் பெருக்கைக் கூறவந்த அவ்விடத்தே, அவை கடற்கரை விளிம்புவரை சென்றனவென்று அடிகள் கூறுவதில் பெருமையும், வியப்புமில்லையென்க",என்றிதனைத் தந்துணிபுக்கியைவதாகப் பொருத்திக் காட்ட முயன்றுள்ளார்கள். பிற்காலப்புலவர்போல, அடிகள் அபூத கற்பனாலங்காரப் பிரியரன்றென்பதும், சங்கக் காப்பியமைந்துனுஞ் சிறந்த சிலப்பதிகாரம் இயற்கை நவிற்சி நலமே நயக் குமியற் புலவர் பெருநூலென்பதும், சங்க நூலறிவார் சங்கையற்றறிவாரன்றோ? அடிகள் தானைப் பெருக்கைத் தானப்பெருக்கத்தளவாற் பெருக்கித்தருக்கு மிடைக்காலப் புராணப் புலமையறியாததோடு, இயற்கையோடு முரணு மியல்பு மறியார்: மறந்துந் திறம்பா வுண்மையுரைச் செவ்வியுடையார்,இமயமலை நோக்கிச் செல்லுஞ் செங்குட்டுவன் சேனை, வடக்கே செல்லவேண்டும். கருவூரானிலை மேற்குமலைத்தொடருக்கும் கீழ்கடலுக்குமிடை நிலப்பரப்பினடுவணொரூராய்க், காவிரிக்கருகே நிற்கும் இக்கருவூரினின்றுவடக்கேபுறப்பட்டதானையின் நிலைத் தார் (தூசிப்படை) வடக்கும், பின்னணி தெற்குமாகக் கையிரண்டே (i) கிழமேலாகச் செல்லுவதியல்பாம்
------------------
சேரன் செங்குட்டுவன்,

அப்போழ்து, அச்சேனையின் தலைகடையணிகள் மலைகடலணுகா. இவ்வாறு, கருவூரானிலைக் கடைவாயிலே கூழைப்படைக்கும் (rear guards). பிற வடதிசையே தூசிப் படைக்குமிடமாகவும், அடிகள் கூறியபடி தண்டத் தலைவராதல் தலைத்தார்ச் சேனையாதல் புணரியின் விளிம்புசூழ்போதலேனும், மலைமுதுகு நெளியச் செல்வதேனு மெப்படியமையும்? அடிகள் பக்கப்படைகளை (Wings)யேகுறித்துப் படையின்புடையகலத்தை விரித்து அது மலை கடலளவாய் படர்ந்துநின்றதெனச் சேனைப் பெருக்கை விளக்கினரென்னில், ஈண்டுக் குறித்த கடலெது? மலையெதுவாகும்? கருவூருக்கு மேல்புறமே மலையாகலாற் கீழ்கடலையே குறித்ததெனல் வேண்டும். சோணாட்டின் மேற்கெல்லையான கருவூரினின்றும் வடக்கெழுந்த சேனை, இவ்வாறு புறச்சோழர்புனனாட்டின் கிழக்கெல்லைக் கடல்சாரக் காரணமுண்டோ இனி? இது இயல்புரையாகாமல், படைப்பரப்பைக் காட்டவந்த கவிக்கற்பனையேயாகில், சேரனது குடகடலை மேற்கெல்லையாக்காமல், அணுகிய மலைத் தொடரோடமைந்ததென்னாம்? மானத பூசையிற் கொழியலரிசியேனோ? இம்முறையில், குணகுட கடலாவெல்லைகட்டிச் சேனைப் பெருக்கைக் காட்டி லிதனினுங் கலிப்பெருமை யினிதாகுமன்றோ? இனி, ஈண்டடிகள் மேலைக்கடலுக்கும் மேற்கு மலைத் தொடருக்குமிடையே படை நின்றதனையே குறிப்பதாகக் கொண்டாலோவெனில், கருவூரானிலையருகாமை வெளிப்படையாகும். இன்னும் வடவரை நோக்கிச் செல்வார், கருவூரிலிருந்து வடக்கே போவதன்றி, நேர்மேற்கா வழிக்கொள்வானேன்?
----------------------------------------------------------------------
(i)கையிரண்டு-பக்கப்படை (Wings) 131-ஆம்பக்கம் கீழ்க்குறிப்பு

வஞ்சிநீங்கி வழிக்கொண்ட சேனை இளைப்பாற முதலில் நின்றவிடமாக அடிகள் கூறும் நீலகிரி, இக்கருவூருக்கு நேர்மேற்காகும். கருவூரிலிருந்து வட திசையேகுஞ் செங்குட்டுவன், மயங்கி, வழியிழந்து, மேற்கேகி, நீலகிரியடிவாரத்தேவந்து தங்கினனாக வேண்டும். அல்லாக்கால் அடிகளினிவ்வருமையடிகள் பொருளிழந்த புரையுரையேயாகவேண்டும். இவ்வாறு அரசனும், தண்டத் தலைவரும், சேனையும் மயங்கி வழியிழந்து தயங்கினதாகக்கொண்டு, முறையிறந்திடர்ப்பட்டேனும் குட கடல் வஞ்சியை யிடம்பெயர்ந்தெடுத் தகநகராக்கு மாற்றலை வியத்தலினும், உண்மைக்கும் புலவர் பிறர் கொள்கைக்கு முரணாத அடிகள் வாக்கின் செம் பொருளேகொண்டு அதுசுட்டும் நேர்வழியும் அவ்வழி காட்டுமூரும் கடைப்பிடிப்பதழகாமன்றோ?

ஈண்டடிகள் கூறியாங்கே, பெரியபுராணத்திலும், ஆரூரிற் சுந்தரராம், "தன் னேரில்லா வன்றொடர்தமையுங் காண்பே னெனவிரும்பி, நன்னீர்நாட்டுச்செலநயந்த சேரர்கோமானார், நன்னாட்கொண்டு, பெரும்பயணமெழுக வென்று நலஞ்சாற்ற," அம்'மலைநாட்டுள்ளார், அயில் வேற்குல மறவர், அடைய (1) வஞ்சியநகர்வாயணைந்து கடற்றரங்கமடுத்து' நின்று, 'மேன்மேல் விரவிப்பரந்'திடை நிலமதிரச் சென்று, 'நெடுஞ்சேனை, நேமி (குடமலை) நாட்டெல்லை கடந்து,' "மறவர்பயில் கொங்கநாடு கடந்து பொன்னிநீர் (சோழ) நாட்டிடைப்போவார்" என்று,- சேக்கிழாரு மிவ்வழியை யிம்முறையே கூறியுள்ளதுஞ் சிறிது சிந்திக்கத் தக்கதாம். இதனால் மலைநாட்டுத் தலை நகராம் வஞ்சிநின்றெழுந்துவழிக்கொண்டோர். இவ்வாறு கடல்விட்டு, இடைநிலங் கடந்து, மலையேறிச்சென்று,
----------------------------------------------------------
(1)அடைய=திரண்டு

குடமலைத் தொடரின் குணபுரத்தடிவாரத்திறங்கிய பின்னரே சமநிலப்பரப்பினொரு நெடுவழி கூடுவது முறையென்பது தெளிவாகின்றது. இன்னுமிவ்வாறே, சேரர் பேரூரிலிருந்து வடதிசையேகும் பெரும்பாதை, முன்னாளில் அடிகள் கூறியபடியே, வஞ்சிநின்று முதலிற் செங் குணக்காகச் சென்று, அந்நாட்டுக் கீழெல்லை மலைகடந்த பிறகு வடக்கே திரும்பி நீலகிரியோரமாகப்போயிற்றென்பது,- கிட்கிந்தைவிட்டுச் சீதையைத்தேடித் தெற்கே சென்ற வானரவொற்றர் வழிகூறு மிராமாயணக் குறிப்பாலும் வலியுறுகின்றதாகும். இவை பலவானு மேற் குறித்த சிலப்பதிகார வரிகளால் அடிகள், வஞ்சி மேலைக் கடலோரம் பேராற்றின்மேலூராமென்பதை விசதப் படுத்திய செவ்வி தெளிவாகின்றது.

இதுமட்டேயோ? வஞ்சி கடலடுத்த வூரென்பதற்குத் தொன்னூற் குறிப்புகள் இன்னுமுள. வடவாரியரை யடக்கிக் கண்ணகிக்குப் படிமக் கல்லுங்கொண்டு, செங்குட்டுவன் திரும்பித் தன்னூர் புகுந்தபின், வேள்விச்சாந்தியின் விழாக்கொளவேவி, "அருளான் ஒருநாள் ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கி" அவ்வரசரைப் பிறமன்னர் தங்குவதற்கென்றே ஊர்ப்புறத் தமைக்கப்பெற்ற மாளிகையிலிருக்கச் செய்து அவரையுபசரிக்கத் தன் படைத் தலைவனான வில்லவன் கோதையையும்,-தான் மகிழு மவ்வேள்விப் பெருவிழாக் காலத்திற் றன்கருணைக்குறியாகத் தன்னூர்ச் சிறை திறந்து குறையாளரை விடுத்துத் தனக்குரிய குடிகளின் கடமை (அரசிறை)களை நீக்கு(வஜாசெய்யு)மாறு அமைச்சன் அழும்பில் வேளொடு கணக்கரையும்,-ஏவினானென்று கூறுமிடத்திலும் அடிகள் தருங்குறிப்புகள்மறக்கற் பாலனவல்ல. அவைவருமாறு:-

    "வேள்விச் சாந்தியின் விழாக்கொள வேவி
    யாரிய வரசரை யருஞ்சிறை நீக்கிப்
    பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத்
    தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில்
    வேளா விக்கோ மாளிகை காட்டி,
    ... ... ... ...
    ... ... ... அம்
    மன்னவர்க் கேற்பன செய்க நீ',யென
    வில்லவன் கோதையை விருப்புட னேவிச்
    'சிறையோர் கோட்டஞ் சீமின் யாங்கணுங்
    கறைகெழு நல்லூர்க் கறைவீடு செய்ம்'மென
    வழும்பில் வேளோ டாயக் கணக்கரை
    முழங்குநீர் வேலி மூதூ ரேவினன்
    ... ... ... ...
    வடதிசை வணக்கிய மன்னவ ரேறென." (i)

    ஈண்டு, நகர்ப்புறத்துப் பிறமன்னர் தங்கவமைந்த மாளி
    கையைத்- "தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில்
    வேளாவிக்கோமாளிகை;" யென்றதை,

    "இன்னிசைப் புணரி யிரங்கும் பௌவத்து
    நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க்
    கமழுந் தாழை கானலம் பெருந்துறைத்
    தண்கடற் படப்பை நன்னாட்டுப் பொருந" (ii)

என்னும் காக்கைபாடினியார் நச்செள்ளையார் வாக்கொடு மொத்து நோக்க, வஞ்சி கடற்கரையூர் என்பதினிது விளங்குவதாகும். வஞ்சிமூதூர், அகநகரும் புறத்துறைப் பட்டினமுமாகப் பிரிந்து நின்றதை முன்னமே குறித்துளேம். இவ்வேளாவிக் கோமாளிகை வஞ்சிமூதூர்ப் புறத்தமைந்ததெனவே, இதனைப் பட்டினப்பாக்கத்திற் கடற்கறையோர மமைந்துளதாக் கொள்வதியல்பாகும். சேரநாட்டு மேலைக்கடற் கரையோ, பிறநிலம்போலன்றி, இன்றுவரை தெங்கொடு
-------------
(i) சிலப்பு 28 வரிகள் 194 to 198, 234 வரி வரை,
(ii) பதிற்றுப்பத்து செய்யுள் 55.

பலவும் தீங்கனிபலவும் தங்கிய வயலும் நின்றுசெழிக்கும் படப்பை......(ii) வளநிலமாவதறிவோம். ஆகவே வஞ் சிப்புறத்துறையில் ' ஆழ்ந்தகடனீறே வேலியாக்கொண்டு, வளமலிசோலை நடுவேநிற்கும் வேளாவிக்கோ மாளிகை' என் றடிகள் குறித்ததன்றி, இவ்விடத்து ஐயங்காரவர்கள் சொல்லுமாறு, (a) 'தாழ்நீரை'ப், பொய்கை என்று வலிந்து பொருள் கொண் டெப்படியுமிவ்வூர்க்கடற்கரைச் சம்பந்தத்தை மறைப்போ மென்று முயலுதல் ஈண்டு எவ்வளவு பொருந்துமென்று நடுவுநிலை வாதிகளே தீர்மானிப்பார்களாக. அன்றியும் மாந்தரால் இயற்றப்பெறாப் பெரு நீர்நிலையே பொய்கையெனப்படும். கடலணுகாவுண்ணாட்டுக் கருவூரானிலையே வஞ்சியாமாகில், கடலை மறைக்க ஐயங்காரவர்கள் கொண்ட வேளாவிக்கோமாளிகை சூழ்ந்துநின்ற பொய்கைதான் யாண்டுளது? இனி யிவ்விடர் கடக்க, இடைக்காலத் திப்பொய்கையு மழிந்து நிலமாயிற்றென லின்றியமையாததாகும். ஆனால் சரித பரம்பரையிலிவ்*வாறு கருவூரருகே பெருநீர்நிலையொன்று நின்று மறைந்ததான கதையுமே காணேம். இதுவுமன்றி, அடிகள் யாண்டும் தந்நூலில் ஏரி அல்லது ஆறு கூறுமிடத்ததனை யாழ்ந்த நீரென்றழைக்கக் காணாமையோடு, கடல் குறிக்குந்தோறும், ஆழ்ந்த நீரெனும் பொருள் தருமடையே பெய்தமைக்கும் வழக்குடையராகவும் தெரிகின்றது. இதனை மூவேறிடங்களில் அடிகள் கடல் கூறும் வாக்கின் போக்காலுதகரிப்பேம்.
---------------------------
(iii)படப்பை=கொழுவிய தோட்டக்கால்நிலம்.
(iii)படப்பை= கொழுவிய தோட்டக்கால்நிலம்
(a) பக்கம் 81.........119, சிலம்பு கால்கோட்காதை 26; வரி 168-169

    (i) "சந்தின் குப்பையுந் தாழ்நீர் முத்துந்
    தென்ன ரிட்ட திறையொடு கொணர்ந்து"

    (ii)"வெண்டிரை பொருத வேலைவா லுகத்துக்
    குண்டுநீ ரடைகரைக் க்குவையிரும் புன்னை
    வலம்புரி யின்ற நலம்புரி முத்தம்"

    (iii)"பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத்
    தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில்
    வேளா விக்கோ மாளிகை... .... .... ... "

இவை தாம்மில், முதலிரண்டு காதைகளிலும் முறையே 'தாழ்நீர்', குண்டுநீர்' என்பவை கடலையே விசேடித்திருக்க,-- இந்நடுகற்காதையில் மட்டும் 'தாழ்நீர்வேலி' என்பது கடல்குறியாதெனல் உரைமரபாமா?

இஃதெவ்வாறாயினும், இவ்விடத்திற் சிறிதுகீழே, 'கறைகெழு நல்லூர்க்கறைவீடு(b) செய்ம்மென, அழும் பில்வேளோ டாயக் கணக்கரை முழங்குநீர் வேலி மூதூரேவி' எனக் குறித்த மூதூர் யாதாம்? அரசன் அத்தாணி மண்டபத்தே கொலுவிருப்பான் தன் குடிகளின் வரிச் சுமையை நீக்குமின் என்று தன்னமைச்சனையுங் கணக் கரையும் பணித்து அது முடிப்பானவரை யங்கிருந்து ஊருக்குள்ளனுப்பினானாதலான், அவ்வூர் வஞ்சி மூதூரேயாகல் வேண்டுமென்பதொருதலையான்றோ? ஈண்டு, இம்மூதூர், முழங்குநீர்வேலியுடைத்தென வடிகள் கூறவுமிதனையுண்ணாட்டூரெனக் கொண்டுமமையாதே, சிலப்பதிகாரத்திலிவ்வூரின் கடற்கரைச் சம்பந்தமே கூறப்படவில்லை'யெனவுந் துணிந்து கூறவருவார்கள் மனவலி சிறிதன்றாகும். இஃதுணர்ந்து வைத்தும், செங்குட்டுவன் சரித நூலார். இம்'முழங்குநீர்வேலிமூதூர்' என்பதற்கு, 'நீர் வளமிக்க நகரங்களில்' என்றமட்டே பொருள் கூறிச் செல்வார். அடிகள் ஈண்டுக்'கடல் குறியாது நீர்வளமொன்றே கருதினராயின்,
---------------------------------------------------------------
நீர்படைக்கதை 27வரி 242-245.
நடுநற்காதை 28 வரி 196-198.

அக்குறிப்பைச் செவ்வையாய்ப் புலப் படுத்தமறந்ததுமன்றி, அதற்குமாறாக, 'முழங்குநீர்வேலி' என்று பயனில் பலசொற் பெய்துவைப்பானேன்? ஆம்பிராவதி நதியையுமணுகா துநிற்குங் கருவூரானிலை, முழங்கு நீர்வேலி மூதூராமோ? ஆகாதென்றறிந்து, இவ்வாறு நீர்வளமிக்க வூர்ப்பொதுவாகப் பொருள்காணல் ஈண்டு அடிகள் வாக்கின்போக்கோடமைவதாமா? அரசன் குடிகளின் வரிகளை நீக்கப்பணித்தகாலை, நீர்வளமிக்க நகரங்களை மட்டுஞ்சுட்டிப் பிறவூர்களை மறப்பதேனோ? இதற்காகவே, குட்டுவன் சரிதநூலார் 'நீர்வளமிக்க நக ரங்களிலும் மற்றையூர்களிலும்', என்று கூட்டியுரைத்து வைத்தார்போலும். ஊரூராக வமைச்சனையுங் கணக்கரையு மேவினதாக்கொள்ளப் பாட்டிடந்தரவில்லையே? வடயாத்திரைக்குப் பறைசாற்றுவித்தது வஞ்சிமட்டிலாமாகில், வரிவஜாவுத்தரவை யூரூராச் சென்று சொல்ல அமைச்சனை யனுப்புவ தின்றியமையாததெப்படியோ? "கறைகெழு நல்லூர்க் கறைவிடுசெய்ம்மென...... முழங்கு நீர்வேலி மூதூரேவி" என்பதே மூலம். இதற்குச் சுங்க முதலிய வரி மிகுந்தவூரில், வரி நீக்கப் பணித்த தன்னாணையை மேற்கொண்டு, அதை நிறைவேற்றுமாறு அவசி யமான கணக்கெடுத்தும், கீழ்த்தொழிலாளரை வேண்டி யாங்கனுப்பியும் வேண்டுமேற்பாடு செய்யுமாறு அரசன் தன்னமைச்சனையு மாயக்கணக்கரையுந் தன் கொலுமண்டபமிருந்து மூதூருக்குள்ளேவினான், என்றமட்டே நேர் பொருளாகுமன்றோ? அன்றியுமடிகள், தந்நூலில், மணி மேகலையிற் போலவே புகார், மதுரை, வஞ்சியெனு முடி வேந்தர் மூவர் பேரூர்களையே மூதூரென்றழைப்பதன்றி, ஒருநாட்டில் வரிவஜாப்பண்ண நினைக்கும் பட்டிமுதற் பட்டினமீறாப் பலதரவூர்களையும் பொதுப்பட மூதூரென்றழைக்கும் வழக்கறியேம்.

ஒர் ஊரின் நீர்வளத்தை மட்டுங் குறிக்குங்கால், "முழுங்க்குநீர்வேலி மூதூர்" என்று சிலப்பதிகாரத்தேனு மடிப்பட்ட பழநூல்களி லேனும் வேறு பிரயோகமுண்டோ? 'முழங்குநீர்' என்னு மடை கடலையே குறிப்பது வெள்ளிடைமலையன்றோ? தங் கொள்கைக்கு முரணுமிடத்தேல்லாம் வலிந்து புத்துரை கொள்ள முயல்வது பிடிவாதிகளின் வழக்கமெனினும், ஆன்ற தமிழ்ப்புலமை வாய்ந்த ஐயங்காரவர்களிவ்வாறு கூறலாமா?

இவ்வஞ்சி கடற்கரையிற் பொருநைக் கழிமுகத் தூரென்பதைப் பிறிதோரிடத்தில் அடிகளிதனினுந் தெளிவாக விளக்கியுள்ளார். வடதிசைச் சென்று, "தண்டமிழிகழ்ந்தவாரிய வரச ரமர்க்களத் தழிய" வென்று, பத்தினிப் படிமத் திய்கிமயக் கற்கொண்டு, கங்கையில் நீர்ப் படைசெய்து, வெற்றி முரசுடன் மீளத்தன் வஞ்சி நகருக் குவந்த செங்குட்டுவன் நல்வரவையும், அப்போதவன் கோநகர்க்குடிகள் பலரு மவனை வாழ்த்தியெதிர்கொண்ட சிறப்பையும், பின்வருமாறு வருணிக்கின்றார்.

    "குடதிசை யாளுங் கொற்ற வேந்தன்.
    வடதிசைத் தும்பை வாகையொடு முடித்துத்
    தென்றிசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு
    நிதிதுஞ்சு வியனகர் நீடுநிலை நிவந்து
    ............................................................................
    பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்த,
    ...........................................................................
    தண்ணம் பொருதை யாடுந ரிட்ட.
    வண்ணமுஞ் சுண்ணமு மலரும் பரந்து
    விண்ணுறை விற்போல் விளங்கிய பெருந்துறை
    -----------
    குருகலர் தாழைக் கோட்டுமிசை யிருந்து,
    வில்லவன் வந்தான் வியன்பே ரிமயத்துப்*
    பல்லா னிரையொடு படர்குவிர் நீர்எனக்
    காவல னானிரை நீர்த்துறை படீஇக்
    கோவல ரூதுங் குழலின் பாணியும்,-
    வெண்டிரை பொருத வேலைவா லுகத்துக்
    குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை(யில்),
    வலம்புரி யீன்ற நலம்புரி முத்தம்
    கழங்காடு மகளி ரோதை யாயத்து
    வழங்குதொடி முன்கை மலர வேந்தி
    'வானவன் வந்தான்-வளரிளமுலை
    தோணல முணீஇய தும்பை போந்தையொடு
    வஞ்சி பாடுது மடவீர் யாம்'எனு
    மஞ்சொற் கிளவிய ரந்தீம் பாணியும்-
    ஓர்த்துட னிருந்த கோப்பெருந் தேவி
    வால்வளை செறிய,வலம்புரி வலனெழ,
    மாலை வெண் குடைக்கீழ் வாகை செவ்வியன்
    வேக யானையின் மீமிசைப் பொலிந்து
    குஞ்சர வொழுகையிற் கோநக ரெதிர்கொள
    வஞ்சியுட் புகுந்தனன் செங்குட் டுவனென

ஈண்டுத் *தடித்த வெழுத்துவரிகளைச் சிறி தாழச்சிந்திப்பார் வஞ்சி, பட்டினமென்பதற்குப் பிறசான்றெதுவுந் தோடார். கோநகரானிரையைப் பொருநைநீர்த் துறைப்படுத்தி நிற்குங்கோவலர், தங் காவலன் வரவுகேட்டு
மகிழ்வார், அவன் வடநாட்டு விஜயத்திற் கவர்ந்துடன் கொடுவரும் பசுத்திரள் தங்கள் செல்வத்தைப்பெருக்குமெனத் தருக்கி மிகக்களித்துப், பொருநையாற்றின்
**கழிமுகத்தே கடற்கரைத் தாழைக்கோட்டு மிசையேறியிருந்தூதுங் குழசையுங் நடுவூர்க் கொடிமதிலலைக்கும் ஆற்று மணலை
---------------
* சிலம்புகாதை 27, வரி 197,198,199,200,213,231, 232, 233, 237, to 255.
** கழிமுகம்= ஆறு கடலொடு கலக்குமிடம்,

வெறுத் தலைவாய்க்கரைக் கடல்மணலிற், புன்னையடி நிழலில் அக்கடல்கொழித்த முத்தே கழங்காக வைத்து விளையாடும் பெண்டிர்கூட்டத்தே வானவன் வருஞ்செய்தி கேட்டோர் அவனை வாழ்த்திப்பாடுமிசையும் ஓர்த்துடனிருந்த கோப்பெருந்தேவி வால்வளைசெறிய, வலம்புரிச் சங்கார்ப்ப யானைமிசைப் பொலிந்து, செங்குட்டுவன் வஞ்சியுட்புகுந்தனன்; என்பதே மேற்குறித்த சிலப்பதிகாரச் சீரிய அடிகளின் நேரிய பொருளாகும்.

இதில், கோநகர்க்கோவலர் தாழைக்கோட்டு மிசையிருந்தூ தினரெனவும், வேலைவாலுகத்துக் குண்டுநீரடை கரைக்குவையிரும் புன்னையடியில் வலம்புரியீன்ற நலம்புரி முத்தைக்கழங்காடு மகளிரெனவும், அடிகள் நெய்தற்கருப் பொருள்கள் சுட்டி, அதனாற் கடற்கரையணிமை விளங்க வைத்ததுவுமன்றி,- நீராடுவோரிடு சுண்ணமு மலரும் பரந்து விளங்கிய பொருநைநதி சங்கமிக்கும் பெருந்துறை யென்றும், "*வேலை வாலுக**த்துக் குண்டுநீரடைகரைக் குவையிரும்புன்னை(யடியிற்) கழங்காடு மகளிரோதையா யத்தந்தீம்பாணி" அந்தப் புறத்திருந்த கோப்பெருந் தேவியைக் களிமகிழ்வூட்டியதென்று கூறி, அதனாலிவ்வாறு செங்குட்டுவனை வரவேற்ற வஞ்சி- இப்பொருநை யாற்றின் கழிமுகத்தே, "கடலங்கரைமேற்" கோநகரே யாமென்பதையு மையமற விசதப்படுத்தி யிருக்கின்றனர். பின் நடுகற்காதையி லிவ்வூரைத் 'தாழ்நீர்வேலி' 'மூதூ'ரெனச் சுட்டுவதேபோ லீண்டுமிதைக் $"குண்டுநீரடைகரை" என்றிதன் கடற் சம்பந்தத்தை விதந்து கூறியுள்ளார். இனி யெடுத்த கொள்கைக்கேற்றபடி பழைய பாட்டுக்களுக்குப் பொருள்காணவல்லார் சிலரிவ் வரிகளுக்கு, இவ்வாறு செம்பாகமாகப் பொருள்கொள்ளாது
--------------------------------------------------------
* வேலை=கடல், ** வாலுகம்=வெண்மணல்.
$ குண்டுநீர்=ஆழமான நீர் அதாவது கடலம்.

கடற்கரை மணலிற் புன்னைமரத்தடியில் வலம்புரியீன்ற முத்தை, உண்ணாட்டூரான கருவூரானிலைமகளிர் கொண்டு கழங்காடுவார், செங்குட்டுவனை வாழ்த்தியேத்தினர் என்று கூறக்கூடும்: அது பொருளன்மைதெளிதலெளிது. எதிரேற்றுப்பாடும் வஞ்சிமார் வஞ்சியூருடையார் என்பதும், அவர் பாடியதும், பாடுமுன் கழங்காடியதுமவ்வூர்ப் பாக்கத்தென்பது மிவ்வரிகளில் மறுக்கொணா வெளிப்படை. திருவானிலை யருகாம்பிராவதியே பொருநையாமாகில், அவ்வூர் மடவார் அவ்வாற்றிற் பிறக்கு மணிமுத்தைக் கழங்காடினரெனப் பாடாமல், கடன்மணலிற் பிறந்த முத்தெனக் கூறக் காரணம் வேண்டும். சேரருக்குத் தங்கோநகரணுகா முத்துப் பிறக்குங் கடலுரிமை யீண்டுவிதந்திப் பெண்டிர் வாயிலாக் கூறிவைக்க அடிகள் கண்ட சிறப்புடைமையாதோ? அன்றியும், முத்தீனுஞ்சங்கு, புன்னைமரத்தடிதேடி ஈனுவதற்கவசியமு மதிற் பெருஞ்சிறப்புமென்னோ? இதுவமன்றி, இக்கவியில், பெண்டிர் தத்தமனைகளிற் றனியே கழங்காடி நின்றார்.- செங்குட்டுவனைப் பாடினதாகக் காணவுமில்லை. கழங் காடுமகளிரோதையாயத்துப்பாடும் பாணியென்றதனால் அவர் பலரும் காவலன் நல்வரவு கேட்டுப் பாடுமுன் அவர் கூடி விளையாடி நின்றதோரிடமுண்மை குறிக்கப் படுகின்றது. அவ்வாறம்மகளிராயத்தார் குழுமி விளையாடிய விடத்தை யீண்டடிகள் வருணித்தாரென்பதல்லால், கெடவரலில்* மடவரலார்+ கழங்காகக்கொண்டு விளையாடிய முத்தை, அது பிறந்தவிடத்தழகை விரிப்பதனால் வருணித்தாரென்ப தடிகளின் செவ்விய கவிப்போக்குக் கெட்டுணையும் பொருந்தாவொன்றாம்.
---------------------------------------------------
*கெடவரல்= பெண்டிர்விளையாட்டு. மடவரலார்= பெண்கள்

மேலும், முத்துப் பிறக்குமிடம் பலவற்றுட்கடலொன்றேயாகவும், புனனாட்டுக் காவிரிப்படப்பைக் கருவூர் மகளிர் விளையாட்டைப் புகழவருவார், திடீரென முன்பின் யாதொரு சம்பந்தமின்றி வறிதேகிடந்த கடலை வலியவிழுத்து வருணிப்பாரோ? ஆகவே, கோதையை++ வரவேற்ற மாதரார், கோநகர்ப்புறத்தே, பெருங்கடலடைகரை யொருங்கிருந்தாடிய பெற்றியே யிவ்வடிகள் சுட்டியதாக வேண்டுமென்பது தெளியக்கிடப்பதன்றோ? தெளியவே, அக்கோநகர்ப் பெண்டிர் கூடிவிளையாடுதற்கான வெண்மணலடை கரைத்துறையே வஞ்சி முன்றுறைப் பட்டினமென்பதும் வெள்ளிடைமலையேயன்றோ? ஈண்டிவ் வஞ்சிப்பட்டினம் பொருநைக் கழிமுகப்பெருந்துறையென் றடிக ளினிது விளக்கியதால், சேரர்கோநகர்ப் "புறமதில்லைக்குமாந் பொருநை" யீண்டடிகள் சுட்டிய அலிமுகப் பேராறேயன்றிக் கடல்தொடாக்காவிரிச் சிறுதுணையாம் பிராவதியாகாதென்பது மலையிலக்காம். இவ்வாறு, கடற்கரை வஞ்சி காவிரியருகானிலை யாகாதென விளக்குமிவ்வடிகள் வாக்கொன்றே, பேராறுநிலமிழியுமிடத்தே நிற்கும் லைதழுவாமலை மடிமேற்றிருக்கரூரே வஞ்சியென்னும் ஸ்ரீ கனகசபைப் பிள்ளையவர்கள் கருத்தையு மறுத்து நிற்கும்.
---------------------------------------------------------
++கோதை= சேரன்; ஈண்டுச் செங்குட்டுவன்.

இன்னும், சேரர் சிறப்பே கூறும் பதிற்றுப்பத்தில் நெடுமலைநாட்டின் குடகடனலமும், அக்கடலின் அடைகரைப்படப்பைச் செழுநிலச்செவ்வியும், அந்நிலத்தில் வஞ்சிப்பட்டின வளமும், விரிக்கும் பாக்களும் பலவாம். அவையிற்றிற் சிலவற்றைமட்டு மீண்டுக் காட்டுவாம்:-

    (i) இணர்ததை ஞாழற்கரைகெழு பெருந்துறை
    மணிக்கலத் தன்னமாயிதழ்நெய்தற்
    பாசடைப் பனிக்கழிதுழைஇப் புன்னை
    வாலிணர்ப் படுசினைக் குருகிறை கொள்ளு
    மல்குறு கான லோங்குமண லடைகரை
    தாழடும்பு மலைந்த புணரவனை ஞால
    விலங்குநீர் முத்தமொடு வார்துகி ரெடுக்குந்
    தண்கடற் படப்பை மென்பா லனவும், "

    (ii) "உறுகா லெடுத்த வோங்குவரற் புணரி
    நுண்மண லடைகரை யுடைதருந்
    தண்கடற் படப்பை நாடுகிழ வோயே."

    (iii) "கடலொலி கொண்டு செழுநகர் நடுவ"

    (iv) "கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும்
    வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு
    விழவறு பறியா முழவிமிழ்மூதூர்"

    (v) "துளங்குநீர் வியலகங் கலங்கக் கால்பொர
    விளங்கிரும் புணரி யுருமெனமுழங்குங்
    கடல்சேர் கானற் குடபுல முன்னிக்
    கூவற் றுழந்த தடந்தா ணாரை
    குவியிணர்ஞாழன் மாச்சினைச் சேக்கும்
    வண்டிறை கொண்ட தண்கடற் பரப்பி
    னடும்பம லடைகரையலவ னாடிய
    வடுவடு நுண்ணயி ரூதை யுஞற்றுந்
    தூவிரும் போந்தைப் பொழிலணிப் பொலிதந்து"

    (vi) "இன்னிசைப் புணரி யிரங்கும் பௌவத்து
    நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க்
    கமழுந் தாழைக் கானலம் பெருந்துறைத்
    தண் கடற் படப்பை நன்னாட்டுப் பொருந."
    --------------------------------------------------------
    (i) பதிற்றுப்பத்து செய்யுள் 30 வரிகள் 1-8
    (ii) பதிற்றுப்பத்து செய்யுள் 38 வரிகள் 40-42
    (iii)பதிற்றுப்பத்து செய்யுள் 21 வரி 12
    (iv) பதிற்றுப்பத்து செய்யுள் 15 வரி 16-18
    (v) பதிற்றுப்பத்து செய்யுள் 51 வரிகள் 1-9
    (vi) பதிற்றுப்பத்து செய்யுள் 55 வரிகள் 3-6

ஈண்டிறுதியிற்காட்டிய நச்செள்ளையார் அடிகளையும், பின் வருமடிகளின் சிலப்பதிகாரவடிகளையு மொத்து நோக்க:-

    "கடல்சேர் கானற் குடபுலத்தே" வஞ்சியாம்
    "முழங்குநீர் வேலி மூதூரில்," 'இரங்கும்
    பௌவத்து நன்கல வெறுக்கைதுஞ்சு', மழகின்
    செவ்வியினிது விளங்கும்.

    "குடதிசை யாளுங்கொற்றவேந்தன்
    நிதிதுஞ்சுவியனகர்",

    "அளந்துகடை யறியா வருங்கலஞ் சுமந்து
    வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றத்து",

என்பன விவ்வஞ்சிப்பட்டின வளங்குறிக்கு மிளங்கோவடிகள் வாக்காம்.

இனி, வஞ்சிமாநகரம் கடற்கரைக்கண்ணதாயின்... "மணிமேகலை முதலிய முன்னூல்கள், உடனொத்த புகார் கொற்கை முதலிய பட்டினங்களைப்போலவே வஞ்சியையுமதன் கடல் வளச்சிறப்பால் வருணித்துக் கூறாமற் போகுமா? ஒருகாலுமில்லை" என்ற செங்குட்டுவனூலுடையாருக்கு, வஞ்சிவருணனையடங்கிய மணிமேகலை 28வது காதை வரிகளைச் சிறிது நினைவுறுத்த விடையேற்பாம். உண்ணாட்டூராய 'மதுரை, நலங்கூறு மூர்காண்காதை போலல்லாது நெய்தனலம்பேணி அந்நிலக்கருப் பொருள் பலவுஞ்சுட்டிக் காவிரிப்பூம்பட்டின வளம்பல விரித்த நாடகக்காப்பியத்தின் இந்திரவிழவூரெடுத்த காதைவரிகளையும், வஞ்சிவளங்கூறுஞ் சாத்தனார் நூவிற் கச்சிமாநகர் புக்ககாதை வரிகளையு முடனொத்து நோக்குவார்க்கு- வஞ்சியும் புகாரேபோற் பட்டினமாம் என்பது வெள்ளிடைமலையேயாம்.
----------------
சிலப்பு காதை 27 வரி 197-200; காட்சிக்காதை வரி 33-34
சேரன்-செங்குட்டுவன் பக்கம் 126

மணிமேகலைநூலை வெளிப்படுத்தியுபகரித்த மகாமகோபாத்தியாயரவர்கள், இப்புத்தகமுதற்பதிப்பில் 272-ஆம்பக்கத்தில் இக்காதையின் 29-ம் பக்கத்தில் முதல் 68 வரையுள்ள வரிகளுக்கும், சிலப்பதிகார இந்திர விழவூர்க்காதை 7-முதல் 58-வரையுள்ள வரிகளுக்குமுள்ள ஒற்றுமை நலத்தை விதந்தெடுத்துச் சீர்தூக்கிப் பாராட்டியு முள்ளார்கள்.

    * "பன்மீன் விலைஞர் வெள்ளுப்புப் பகருநர்
    கண்ணொடை யாட்டியர் காழியர் கூவியர்
    பைந்நிண விலைஞர் பாசவர் வாசவர்
    செம்புசெய் குநருங் கஞ்ச காரரும்
    பைம்பொன் செயஞ்ஞரும் பொன்செய் கொல்லரும்
    மாங்கொ றச்சரும்
    தோலின் றுன்னருந் துன்ன வினைஞரும்
    பால்வே றாக வெண்வகைப் பட்ட
    கூலங் குவைஇய கூல மறுகும்
    இலங்கு மணிவினைஞர் இரீஇய மறுகும்
    விலங்கரம் பொரூஉம் வெள்வளை போழ்நர்."

    **"மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர்
    காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர்
    பாசவர் வாசவர் பன்னிண விலைஞர்
    கஞ்ச காரருஞ் செம்புசெய் குநரும்
    பொன்செய் கொல்லரு நன்கலந் தருநரும்
    மரங்கொ றச்சரும்
    துன்ன காரருந் தோலின் றுன்னரும்
    -----------
    மணிமேகலை காதை 28 வரிகள் 29-68, சிலப்பு காதை வரி 7-58
    *மணிமேகலை வஞ்சிவருணனை 28- கச்சிமாநகர்புக்ககாதை
    **சிலப்பதிகாரம் புகார்வருணனை இந்திரவிழவூரெடுத்தகாதை

    பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
    கூலங் குவித்த கூல வீதியும்
    திருமணி குயிற்றுநர் சிறந்தகொள்கையோடு
    அணிவளை போழுந ரகன்பெரு வீதியும்."

நெய்தற்கருப்பொருள் சு ட் டி ய நாற்கவிராஜநம்பி அகப்பொருள் விளக்கம்24ஆம் செய்யுளையும்,தொல்காப்பியம்பொருளதிகாரம், அகத்திணையியல்,18ஆம் சூத்திரத்தின்கீழ் நச்சினார்க்கினியார் குறிப்பும் ஒப்புநோக்கின், மேற்கண்ட வஞ்சி வருணனை அவ்வூரைப் பட்டினமாக்கி நிற்ப தினிது விளங்கும்.

அலை தாலாட்ட மலைமடிவளரும் வானவர் நாட்டில், கடலுங்கானமும் பலபய முதவ" (i) மலையவுங் கடலவும் பண்ணியம்(ii) மலிந்தவை வஞ்சியினிறைந்த வளஞ் சொலும் புலவர் - மணிபல்லவத்திருந்து விசும்பாறாக வந் திறங்கிய மணிமேகலை," ......வானவன் வஞ்சியின் ...... பன்மீன்விலைஞர், வெள்ளுப்புப் பகருநர், ...... விலங்கரம் பொரூஉம் வெள்வளைபோழ்நரோ டிலங்குமணிவினைஞரிரீ இயமறுகும். 'புதுக்கோள்யானையும், பொற்றார் புரவியும் கதிக்குறவடிப்போர் கவின்பெறுவீதியும், சேணோங்கருவி தாழ்ந்த செய்குன்றமும், வேணவாமிகுக்கும் விரைமரக்காவும், விண்ணவர் தங்கள் விசும்பிடமறந்து நண்ணுதற் கொத்த நன்னீரிடங்களும்......கண்டு மகிழ்வுற்ற" தாகக் கூறியுள்ளார். இவ்வருணனை வஞ்சி கடற்கரையூ ரென்பதைத் தெளிவாக்கவில்லையெனில்,இவ்வரிகள் பயனில் கூற்றாக வேண்டும். சிலப்பதிகாரத்தில், மதுரை வளம் விரித்துள பகுதியிலிவ்வாறு எனைத்தும் கூறப்படாததோடு, பட்டினமாய பூம்புகார்ப்பகுதியிலிஃதேபோற் கருப்பொருணலமெடுத்தாளப்பட்டுமுளதென்று மேலே கூறினாம்.
-----------------
(i)பதிற்றுப்பத்து செய்யுள் 22 வரி 6,59,15
(i)பண்ணியம்= பலபண்டம்

அடிகளோ மற்றிருமுடிவேந்தர் மூதூர்களைப் போல வஞ்சியூர்நலம் வருணித்திலர்: வருணிக்கக் காரணமுமில்லை யென்பது மேலே காட்டியுள்ளேம். ஆகவே அடிகள் கூறிய புகார்ச்சிறப்பும், சாத்தனார் வஞ்சிவருணனையுமே ஒத்துநோக்கக் கிடைப்பனவாயிற்று. இவை யிரண்டிடத்தும், இருநகரும் பட்டினங்களேயென்ப திவ் விருபெரும் புலவரானுந் தெளிவாக்கப்பட்டுளது. இவை தம்மிலொன்று பட்டினமன்றேல், மற்றதுமுண்ணாட்டூரே யாகல் வேண்டும். புதுக்கோள்யானை கதிக்குறவடித்தல்(1) இன்றுவரை மலையாள நாட்டில் நடைபெறுந் தொழிலாமன்றோ? உமணரமைக்கும் கடலுப்பும், ஆண்டறுக்குஞ் சங்குவளையும், "இலங்குநீர் முத்தமொடுவார்துகிர்(ii) எடுக்குந்தண்கடற்படப்பை மென்பாலனவும்"(iii)புதிது புதிதாப் பிடித்து நடைபயிற்று மானைநிரைகளும், வேழத்துவெண்கோடு கொண்டு, பிழிநொடை கொடுக்கும்"(iv) பெற்றியும், "குன்றுதலை மணந்ததண் கடற்படப்பை" வளங்குறிப்பதல்லாற் பிறிதுண்டோ?
---------------
(i)நடைபயிற்றல்
(ii)பவளம்
(iii)பதிற்று, செய்யுள் 80
(iv)பதிற்று, செய்யுள் 80 வரி 11-12.

"வேணவாமிகுக்கும் விரைமரக்காவும், விண்ணவர் தங்கள் விசும்பிடமறந்து நண்ணுதற்கொத்த நன்னீரிடங்களும்," தென்னாட்டில் "தெங்கொடு பலவுந் தங்கிய படப்பை மாறாவிளையுட் பேராறூட்டுங்" குடகடலடை கரையையே சுட்டுமன்றோ? இன்னும் ஐயங்காரவர்களே வஞ்சிச்சேரனாகத் தஞ் சரித நூலிற் குறித்திருக்கும் செங்குட்டுவன் றந்தை நெடுஞ்சேரலாதனை

    "கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும்
    வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு
    விழவறு பறியா முழவிமிழ் மூதூர்க்
    கொடிநிழற் பட்ட பொன்னுடை நியமத்துச்
    சீர்பெறு கலிமகி ழியம்பு முரசின்
    வயவர் வேந்தே.........." v,

என்று குமட்டூர்க்கண்ணனார் பாடியுள்ளார். ஈண்டவன் மூதூர் வஞ்சிக்கடையான முதன் மூன்றுவரிகளும் மலை, கடல், மலைநாட்டாறுகள் தரும் வளம் பலவு மவ்வூரகத்தே நிறைவதாக் குறித்திருப்பது மிக்கருத்துக் கொண்ட பொருத்தமான வுண்மைநவிற்சி யன்றோ?அன்றியும்,பதிற்றுப் பத்துரைகாரர் "அறாஅ விளையுள், அறாஅ யாணர்"vi என்றவடியின்கீழ், "அறாஅயாணரென்பதற்கு, இடையறாத கடல் வருவாய் முதலிய செல்வங்கள்" என்றெழுதி யிருப்பதும் கவனிக்கத்தக்கதாம். இன்னு மிவைவிரிப்பிற் பெருகுமென்றஞ்சி நிறுத்துவாம். இவை பலவும் சிந்திப்பார் யாரே - "கடற்கரைச் சம்பந்தம் வஞ்சிக்குக் கொஞ்சமும் காணப்படாமையே, அஃதுண்ணாட்டு நகராமென்பதை விசதமாக்கவல்லது," என்னும் ஐயங்காரவர்கள் கட்டுரையை ஆமோதிப்பார்?
---------------------
v.பதிற்றுப்பத்து செய்யுள் 15, வரிகள் 16-21,
vi.பதிற்றுப்பத்து செய்யுள் 60, வரி-8,
------------------


*8-ஆம்பகுதி சோரைப்புகழும் பழங்கவிகளில்
மலைநாட்டாறுமலைகள் பாடப் பெற்றுளவா?


இன்னுமிவர்கள், தம்நூலின் 129-ஆம்பக்கத்தில் வஞ்சி "திருவஞ்சைக்களமாயின், அம்மலை நாட்டு நதியொன்றையும் பரணர் செங்குட்டுவனுக்குவமிக்காமல், மேற்காட்டிய (காவிரி-காஞ்சி) ஆறுகளையே கூறிச்செல்வதற்குத் தக்ககாரணம் வேண்டுமன்றோ?- என்றெழுப்பிய வினாவையுஞ் சிறிது விசாரிப்பாம். சேரர்பெருந்தகைக்குப் பரண ருவமித்திருப்பதாக இவர்கள் கண்ட புன நாட்டாறிரண்டு:- காவிரிக்கூடலும், காஞ்சி நதியுமே. "முக்கூடலனையை" என்பதையு மதன்குறிப்பையு மேலே விவரித்துள்ளேம். ஆங்குக்காட்டியபடி முக்கூடலென்பது-காவிரியாம் பிராவதிக் கூட்டமாகாதென்பதும், காவிரியைச் சொன்னது அஃதுடைய சோழரைச் செங்குட்டுவன் வென்ற பெருமைதோன்றப்பாடும் பண்டைமுறையென்பது மறிந்தோம். இனிக் "காஞ்சியம்பெருந்துறை மணலினும் பலவே" என்னுமடிகொண்டு, அது கருவூர்ப்பிர தேசத்துள்ள நொய்யல் அல்லது காஞ்சிமாநதியைக் குறித்த தாகக்கொள்வது துணிந்த முடிபென்றும் தோற்றவில்லை. கருவூரே வஞ்சியெனவும் செங்குட்டுவனுக்கு மேல்கடல் தொட்டுக் கருவூர்வரை கிடந்த நிலமே நாடாயிற்றெனவுங் கட்டுரைத்த ஐயங்காரவர்களும், காவிரி சங்கமிக்குங் கீழ் கடலும், காவிரியும் வளவருக்கேயுரிய வென்பார்கள். "சோணாட்டின் மேற்கெல்லை கருவூர்" என்னும் யாப்பருங்கலக்காரிகை உரைகாரர் மேற்கோளுங்காட்டி, அதன் வாயிலாக அக்கருவூருக்கு மேற்குச் சேர நாடேயெனத் தங்கோணாட்டினார்கள். எனவே, கீழ்கடல் சேரன் கடலாகாதென்பதும், குடகடலொன்றே யவனுக்குரிய தென்பது மொருதலை. மேலும் நொய்யலாறு ஆம்பிராவதிபோல் காவிரியிற்கலக்குமொரு துணைச் சிற்றாறாவதன்றிக், கடலிற் சங்கமிக்குந் தனியாறன்றென்றும்,- "இந்நதி (நொய்யல்) ஈரோடு கருவூர்தாலுகாக்கள் கூடுமிடத்து நெய்க்குப்பத்தருகில் காவிரியுடன் சங்கமமாகிறது" என்றும் தம் புத்தகத்தில்வரைந்து முள்ளார்கள். ஈண்டுக்காஞ்சிசுட்டும் பரணர் அடிகளைக் கவனிப்பாம்.
----------------------------------------------------
செங்குட்டுவன் பக்கம் 13.

"நின்மலைப் பிறந்து நின்கடன் மண்டு
மலிபுன னிகழ்தருந் தீநீர் விழவிற்
.................................
தீம்புன லாய மாடுங்
காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே;

இவ்வடிகளாற் பரணர்பாடிய காஞ்சி, சேரன் மலையிலெழுந்து சேரன் கடலிற்சங்கமிக்கு மொருநதம் ii என்பது தெளிவாகின்றது. ஐயங்காரவர்களின் காஞ்சியென்ற நொய்யலாறோ கிழக்கோடும் நதியாதலான் மேலைக்கட
லெட்டியும் பாராதே? உபசாரார்த்தமாகச் சோழனை வென்ற செங்குட்டுவற்குக் கீழக்கடலுமுரித்தெனக் கொள்ளினுங்கூட, நொய்யலாறக்கடலையுமணுகாதே, கருவூருக்கு நெடுந்தூரம் மேற்கேயே காவிரியிற் கலந்து தன்னிலை யிழப்பதாகும். ஆகவே பரணர் அதை "நின் (செங்குட்டுவனின்) மலைப்பிறந்து, நின்கடன் மண்டு மலிபுனற் காஞ்சி"- என்பரோ? இதனாற் பரணர் பாட்டுடைக் காஞ்சி, மலை நாட்டாறேயாக வேண்டுமென்பது விசத மன்றோ?

இதுவேயுமன்றிச் சேரவீரர் சிலர்க் கவர்வென்றி தோன்றத் தோற்றமாற்றலர் நதிமலைகளைச் சிற்சில விடங்களிலுவமித்திருப்பதல்லாற், பெரும்பாலும் பதிற்றுப்
பத்து, சிலப்பதிகார முதலிய முன்னூல்களிலெல்லாம், சேரருக்குரிய கடலையும், மலையையும், மலை நாட்டாறுகளையுமே பலபடவிசேடணமாக்கிப் பழம்புலவர் பாடியுள்ளார்.
-----------
துணைச்சிற்றாறு=small tributary செங்குட்டுவன் பக்கம்-122.
(i) பதிற்றுப்பத்து செய்யுள் 48, வரி 13-18 (ii) நதம்=மேற்குமுகமாய் ஓடுமாறு.

பதிற்றுப்பத்தில், சேரரை யவர்புணரிபுணர்த்திப் புகழ்ந்துள பாக்களை மேலே காட்டினேம். அவர் மலை நாட்டாறுகளில், காஞ்சிபற்றி பரணர் பாட்டையும் பார்த்தாம். இனி, மேற்குமலைத் தொடரினின்றிழிந்து, மலைநாடு சுரக்கவூட்டி வஞ்சியிற் சங்கமிக்கும் பேராறு பற்றிய சில வரும்பழந் தொடர்களை மட்டுங்காட்டி மேற்செல்வேம். இப்பேராறு, "மேற்குமலைத் தொடரினடிவாரத்துள்ள திருக்கருவூரருகே" மலைவிட்டு நிலந்தொட்டு, மேற்கோடி, கடல்சேருமலை நாட்டு நதமென்பதை ஐயங்காரவர்கள் தன் சரித நூலில் ஒப்புக்கொண்டுள்ளார்களாதலான்,(i) இவ்வாறு கூறும்பாக்களிலேனும் மலைநாட்டாறுவமை யுண்மை குட்டுவன்சரித நூலாரும் மறுக்கற்பாற்றன் றாவதொன்றாம்.
-------------------------------------------------------
i) 127-ம் பக்கம். பதிற்று பாட்டு 28, வரிகள் 5-15; Do, பாட்டு 43, வரிகள் 12-16.
Do, பாட்டு 88, வரிகள் 24-25.

    1. "இனையினிது தந்து விளைவு முட்டுறாவது
    புலம்பாவுறையுணி தொழிலாற்றலின்
    விடுநிலக் கரம்பை விடரளை நிரையக்
    கோடை நீடக் குன்றம் புல்லென
    வருவி யற்ற பெருவறற் காலையு
    நிவந்துகரை யிழிதரு நனந்தலைப் பேரியாற்றுச்
    சீருடை வியன்புலம்வாய் பரந்துமிகீஇய
    ருவலை குடீயுருத்து வருமலிர் நிறைச்
    செந்நீர்ப் பூக லல்லது
    வெம்மை யரிதுநின் னகண்றலை நாடே,"

    2. "இரும்பணை திரங்கப் பெரும் பெயயொளிப்பக்
    குன்றுவறங் கூரச் சுடர்சினந் திகழ
    வருவி யற்ற பெருவறற் காலையு
    மருஞ்செலற் பேராற் றிருங்கரை யுடைத்துக்
    கடியேர் பூட்டுநர் கடுக்கை மலைய,"

    3. "மாற்றருந் தெய்வத்துக் கூட்ட முன்னிய
    புனன்மலி பேரி யாறிழி தந்தாங்கு
    வுருநர் வரையாச் செழும்பஃ றாரங்
    கொளக்கெளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப.....

    4. "விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன்
    நெடியோன் மார்பி லாரம் போன்ற
    பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை
    விடுமண லெக்கரி யைந்தொருங் கிருப்ப,"

இனி, சேரருக்கேவுரிய, 'அயிரை', 'நேரி,' 'கொல்லி,' முதலிய பலமலைகளையும் "வானி" "அயிரை" யாறுகளையு மவருக்குவமித்துள்ள பாகக்ளும் பலவாம்.(i) இம்மலை நாட்டு அயிரையாறும் மலையும் சேரருக்கு வமிக்கப்பட்டிருத்தல் கண்ட ஐயங்காரவர்கள் வழக்கம் போற்றம் புத்தகம் 139 ஆம் பக்கத்தடிக்குறிப்பொன்றில் இவை சோணாட்டுள்ளன போற்கூறி, மலைநாட்டா றுவமிக்கப்படவில்லை யென்னுந் தங்கூற்று நெகிழாது காக்கு முயற்சியின் பயனைச் சிறிதாதராய்வாம்.

குழித்தலையருகேவுள்ள இரத்தினகிரியைப யப்பக்கத்தவர் சிலர் தற்காலத்து ஐயர்மலை யென்றழைப்பதான நூலாதார மொன்றுமில்லாதவொரு நவீனப் பிரஸ்தாப மொன்றேகொண் டிதுவேசங்க நூல்களிற் கூறப்படும் சோரின் அயிரைமலையென்று சாதிக்கத் துணிகின்றார்கள்.
----------------------------------------------------
(i)பதிற்றுச்செய்யுள், அயிரைமலை 21-30,70-79 நெரி 40,67 கொல்லி 73,80,81 அயிரையாறு 29,88,90 சிலம்பு காதை 28 வரி 145 வாணியாறு பதிற்று செய்யுள் *86

அதுவேபோல், தந்துணிபை யிடர்ப்படுத்தாவாறு, மலை நாட்டாறெனப் பழ நூல்கள் விதந்துகூறுமயிரையாற்றையும் காவிரியுடன் சங்கமிக்கும் ஐயாறாகத் துணிகின்றார்கள். இதற்காதாரமாவதெல்லாம் "அயிரையாறு....... காவிரியுடன் மேலணையிற் சங்கமிக்கும் ஐயாறு என்ற நதியாகக் கருதப்படுகிறது"-என்னுமொரு அடியற்ற அநுமானமொன்றொழியப் பிறிதொன்றுங் கூறிற்றிலர். யாரால், எதுபற்றி, என்றுதொட்டு, இவ்வாறு கருதப்படுகிறது? என்ற இடர்ப்படுத்தும் வினாக்களை யறவே புறக் கணித்தொதுக்கி மகிழ்வார்கள். கரூர், பேராறு என்னு மிருமுழுப்பெயறொற்றுமை கொண்டு, வஞ்சி மேற்கு மலைத்தொடரடிவாரத்தூரென்ற ஸ்ரீகனகசபைப் பிள்ளையவர்களை, ஓசையொற்றுமையொன்றேகொண்டு வாத முறை பிறழ்ந்தவராகப் பரிகசிக்கும் ஐயங்காரவர்கள், தங்கொள்கைக் கேற்றபடி பெயரொற்றுமையுமில்லா விடங்களிலும் ஐயர்மலை யென்றழைக்கப்படும் இரத்தினகிரியை அயிரைமலையெனவும், ஐயாறு என்பதே அயிரையா றெனவும் பேசுமியல்பும் துணிவும் வியப்பதன்றி மறுத்தல்வேண்டா? ஐயங்காரவர்களும் மலைநாட்டு நதமெனப்பேசும் பேராறு, "அயிரைமலை யைத் தலையாக்கொண்டு ஒழுகப்பட்ட யாறென்று"(i) பதிற்றுப்பத்தின் பண்டையுரைகாரர் வற்புறுத்தியுள்ளதைக் குட்டுவன் சரிதநூலார் பண்டிதராகலின் மறந்தனரென்று நினைக்கவுந் துணியேம்; மறைத்ததாக் கூறுங்குறையையும் வெறுப்பேம். ஒருகால் இத்தொல்லா சிரியரையும் தம்கொள்கையோடு முரணிய அடியார்க்கு நல்லாரை யொதுக்கியதுபோற் சரிதமுறையறியாதா ரென்றுகண்டு அவர் கருத்தைக் கொண்டிலர்போலும். துணிந்த மேற்கோள் பிறிதுகாணும்வரை, எம்மனோர்க்கு இப்பழையவுரையாசிரியர் கூற்று போற்றற்பாற்றாம்.
---------------------------------------------------
(i)பதிற்றுப்பத்து:செய்யுள் 88-உரை

அயிரைமலை யிவ்வாறு பேராறுற்பத்தியாகு மலையாயின் அது மலைநாட்டு மலையேயாமன்றி, குழித்தலைக்கருகாங் குன்றமாகாதன்றோ? தொல்லை நல்லாசிரியரெல்லாரும் சேரருக்குவமைகூற எடுத்தாளுமாறு களனைத்தும் சோழன் காவிரியின் துணைச்சிற்றாறுகளாகவேகாட்டும் ஐயங்காரவர்கள் திறமிகப் பெரிதேயாம். இவர்கள் தம் நூலிலெடுத்துக் காட்டிய மேற்கோள்களொன்றேனும் மலையிற் பிறந்து கடலிற் சங்கமிக்குந் தனிப் பேராறொன்றையுங் குறித்ததாயில்லை. பழம்புலவர் சேரருக்குப் பாடிய பொருனை, அயிரை, காஞ்சியென்றனைத்துங் காவிரியிற் கலப்பதாகவே காட்டியுள்ளார்கள். சேரர் பெருநாட்டில் மேலேகாட்டியபடி செங்குட்டுவன் மிகவெறுக்குங் காவிரியிற் கலவாமல், கடலிற்புகும் யாறொன்றுமே யில்லைத்தானோ? அன்றேல் அக்காலப் புலவரனைவரும், சேரரவமதிக்குங் காவிரிச் சிறுதுணையாறுகளை யவருக்குவமிப்பதே யம்மலையரசர் பெருமைக்கேற்புடையதும் அவரை மகிழ்விப்பதுமென்று கண்டுவைத்த மாறாக் கொள்கைதானோ?

மேலும் குட்டுவருக்குப் புனனாட்டோர் பகுதி நாடாகவும், அந்நாட்டுக் கருவூரே தலைமை நகராகவும் விளங்கியதாகக் கூறும் ஐயங்காரவர்தளே, தம் நூல் 2-ம் அதிகாரத்தில், "மாந்தையென்பது நார்முடிச்சேரலுக்கும், தொண்டி இரும்பொறை மரபினர்க்கும் இராஜதானிகளாக இருந்தன" வென்றும், "இவ்விரண்டு தலைநகரங்களும் கடற்கரையிலமைந்தவை"யென்றுங் கூறியுள்ளார்கள். * எனவே கருவூர்ச்சேரருக்குப் புனனாட்டுக் காவிரித் துணையாறுகளையே பாடுவதொருவாறமைவதாக் கொள்ளினுங்கூட,
-----------------------------------------
*பக்கம் 20

இத்தொண்டி மாந்தையூர்களிலாண்ட சேரருக்குரிய பாக்களிலேனும் அவர் நாட்டாறுகளையும் மலைகளையுமே சிறப்பித்துக்கூற எதிர்பார்ப்பது முறையாகுமன்றோ? ஐயங்காரவர்களும், அரசரை அவரவர் "தேசத்திலும் நகரத்திலுமோடும் நதிகளோடும் உவமித்து"ச் சிறப்பித்தல் "முற்காலவழக்கு" என்றெழுதியுள்ளார்கள். (I) இம்முறைவைத்துநோக்க, அயிரையாறு, அயிரை நேரிமலைகள், வஞ்சிமூதூர் இவைகளனைத்தும் இத் தொண்டிமாந்தைப்பட்டினச் சேரரையே பாடிய கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் பாக்களில்(ii) சிறப்பிக்கப் பட்டிருக்கக் காண்கின்றோம். இஃதொன்றே இவை, "தண்கடற்படப்பை நாடுகிழவோ"ரான சேரர் மலை நாட்டேயுள்ளவையென்பதை விசதமாக்க வல்லதன்றோ? இவ்வாறன்றி, இவை மேற்குமலைத் தொடருக்குக் கிழக்கே புனனாட்டுளவாயின், இந்நாட்டுக்குரியரல்லாத கடற்கரைத்துறைமுகச்சேரரை இவை கொண்டு பாடுவதும், வேறிவர் சொந்த மலைநாட்டாறு மலை யொன்றையு முவமியாமையும் விளங்காப் புதிர்களாமன்றோ! கருவூர்ச்சேரர், தொண்டிச்சேரர் எனச் "சேரநாட்டில் வேறுவேறு தலைநகரங்களில்" இருகுல மன்னர் ஒரு காலத்தே மலைநாட்டைப் பங்கிட்டு "ஆட்சிபுரிந்த"து போலக்குறிப்பிடும் ஐயங்காரவர்கள் கூற்றை யாராயு மிடமிஃதன்றென விடுப்பேம். அஃதெவ்வாறாயினு மிதுவரை கூறியவாற்றால், சேரருக்குரிய மலை நாட்டாறுகள் நதிகள் நகரங்களையே பெரும்பாலும் பழம்புலவர் அவருக்கு வமித்துள்ளார்களென்பதும், உவமியாததாகக் கொண்டு அதனாலவர் மலைநாட்டுரிமை மறுத்துப் புனனாட்டோர் பகுதியுடையராகவும் அவர் தலைநகராம் வஞ்சி மலைநாட்டு வஞ்சைக்களமாகாமற் புனனாட்டுக் கருவூரானிலையேயாகவுங் கருதுவதாராய்ச்சி முறைக்கு மாறுபட்டதென்பதும், தெளிவாகின்றன.
---------------
(i) பக்கம் 122; (ii) பதிற்றுப்பத்து 7-ம் பத்து 8-ம்பத்து 9-ம் பத்துப்பாட்டுக்கள்
------------


9-ம் பகுதி "ஒருநூற்றுநாற்பது யோசனை விரிந்த"தெது?


இனி, செங்குட்டுவன் "மலைவளங்காண்டல்வேண்டி, பேரியாற்றங்கரை சென்றானென்று சிலப்பதிகாரம் குறிப்பது" காட்டி "மேற்குமலைத் தொடரினடிவாரத்துப் பேரியாற்றங்கரையிலுள்ள திருக்கரூரே வஞ்சியாதல் வேண்டும்" என்ற ஸ்ரீ கனகசபைப் பிள்ளையவர்கள் கொள்கையை ஐயங்காரவர்கள் மறுப்பது மிகப்பொருத்தமும், யாவருக்கு முடன்பாடுமாம். பிள்ளையவர்கள் கருதியபடி மலைச்சாரற்றிருக்கரூரே வஞ்சியாமாயின், மலைச்சோலை விளையாட்டு விரும்பிய செங்குட்டுவன் வஞ்சி நீங்கி வழி நடந்து வந்து மலை கண்டு பேராற்றங்கரையிற் றங்கினனென்று இளங்கோவடிகள் கூறுவரோ?

    "மஞ்சுசூழ் சோலைமலை காண்குவமெனப்
    ..... ....... .....
    வஞ்சிமுற்ற நீங்கிச் செல்வோன்
    ...... ....... ......
    விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன்
    ....... ........ ........
    ஒரு நூற்றுநாற்பதி யோசனை விரிந்த
    பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று
    கோங்கம் வேங்கை தூங்கிணர்க் கொன்றை
    நாகந் திலக நறுங்கா ழார
    முதிர்பூம் பரப்பி னொழுகு புனலொழித்து
    மதுகர ஞிமிறொடு வண்டினம் பாட
    நெடியோன் மாரபி லாரம் போன்று,
    பெருமலை விலங்கிய பேரியாற் றங்கரை
    யிடுமண லெக்கரி யைத்தொருங் கிருப்ப" (i)

என்பது மூலம், இதனாற் கிடைப்பன, வஞ்சி, மலையரு கில்லா வூரென்பதும், மலைவளமலர்ப்பொழில்விளையாட்டு விரும்பிய செங்குட்டுவன் அதுதேடி மலைவாரப் பேராற்றங்கரை வந்துற்றனனென்பதுமே. இதுவே உண்மைக்கும், பேராற்றின் கழிமுக வஞ்சியமைப்புக்கும், மலை நிலக்கிடப்புக்கும்(Topography) பொருத்தமுடையதாகும். "இதனால்" ஐயங்காரவர்கள், "வஞ்சியென்பது ஆம்பிராவதி யல்லது ஆன்பொருநைப்பக்கத்ததும் மலைவளமில்லாதது மான கருவூரேயாதல் திண்ண" மென்றெவ்வாறு பெற்றனர்களோ வறியேம். கருவூரானிலை மலைவளமில்லாதது: செங்குட்டுவன் வஞ்சியு மலைச்சாரலில்லாத தாயினும், அடிகள் குறித்தபடியே பேராறு மலையினின்று விலங்குமிடத்திற்கு மிகத்தூரமில்லாத கடற்படு மலிமுகத்தூரேயா மென்பர் அடியார்க்கு நல்லார். கரு வூரானிலையோ, அவ்விடத்திற்கு வெகுதூரத்திற் புனனாட்டிலிருப்பதாகும். இம்முரண்பாடுகண்ட செங்குட்டுவன் சரிதநூலார், சிறிதுந் தளர்கிலர்; கருவூருக்கும் பேரியாற்றங் கரைக்கும் பெருந்தூரமுண்டென்பதை இளங்கோவடிகள் குறிப்பிப்ப" தாகக் கூறியமைவார். முதலில் இக்குறிப்பினுமதனாற் கருவூரானிலை வஞ்சியெனப் பெறுமாறில்லை.
-----------
(i)சிலம்பு-காட்சிக்காதை 25, அடிகள் 7-9-11, 15 முதல் 23

மலைவாரத்தில்லாத வஞ்சிப்பட்டினம், பேராற்றி னுற்பத்திமலைக்குச் சேய்மைத்தாகலாம். இனி இச்சேய்மைக்குறிப்புத்தானென்னே? மேற்காட்டிய சிலப்பதிகாரக் காட்சிக்காதையடிகளிள், "ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று" என்னுந்தொடர்கொண்டு, 'இந்திரனுக்கேயத் தொடர் விசேடிக்கப்பட்டதாயினும், அத்தொகையினளவு தூரத்தை அடிகள் சேரன் பிரயாணத் துக் குவமித்திருப்பது, அவன் சென்றுவந்த பேரியாற்றங்கரை வஞ்சிமாநகர்க்குச் சமீபித்ததன்று என்பதை வெளியாக்குமென்பதில் ஐயமில்லை" என்று தெளிந்து, இத்தொடர் "இந்திரனது யானைப்பரப்பின் தூரத்தைக் குறிப்பதென்பதினும், செங்குட்டுவனது பிரயாணதூரத்தைக் குறிப்பதென்பதே பொருத்தமாகும்" என்று தீர்மானிக் கின்றார்கள். "இந்திரனுக்கே யத்தொடர் விசேடிக்கப்பட்ட"தென்று இவர்களே கண்டபிறகு, இதினின் றெவ் விதவிவகாரமு மெழாதெனக் காணாமை யேனோ? இது நிற்க, இந்திரனுக்கித்தொடர் விசேடணமாகாதென்பதே யெங்கருத்து. மேற்காட்டிய அடிகளை யுற்றுநோக்கின், 'ஒரு நூற்றுநாற்பது யோசனைவிரிந்த' என்னுந் தொடர், "பேரியாறு விலங்கிய பெருமலை"த் தொடகையேனும், பேரியாற்றினொழுக்கையேனுமே விசேடிப்ப தென்றெளிதிற்றோன்றும். "பெயர்வோன்போன்று, ஆரம் போன்று, ஒருநூற்று நாற்பதியோசனைவிரிந்த-பெருமலை விலங்கிய பேரியாறு" என்றேனும், பெயர்வோன்போன்று ஆரம்போன்று, பெருமலைவிலங்கிய ஒரு நூற்றுநாற்பதி யோசனை விரிந்தபேரியாறு" என்றேனுங்கூட்டி முடிக்கப் பொருள் சிறப்பதோடு, "கோங்கம் வேங்கை தூங்கிணர்க்கொன்றை" யாதி இடைநிற்குந் தொடர்களின் முடிபுக்குமேற்ப முடியும். எவ்வாறாயினும், செங்குட்டுவன் பிரயாண தூரத்தைக் குறிப்பதாகாது.

செங்குட்டுவனுக்கித்தொடரை விசேடணமாக்குவதானாலுங்கூட, "பரந்தொருங்கீண்டி(யஅவன்) பைந்தொடியாய"த்தின் பரப்பே குறிப்பதல்லால், அவ்வாயமுமவனுஞ் சென்ற பிரயாண மொத்த தூரத்தைக் குறிப்பதாகக் கொள்வ தெப்படிக்கூடும்? இத்தொடரின் தொகையளவு மொத்தப் பிரயாண தூரத்தையே குறிக்குமெனக்கொள்ளின், போன வழியளவொன்றை மட்டுமோ, அன்றிப் போய்மீண்ட வழியினிரட்டிப்புத் தூரத்தளவையோ குறிப்பதாகும்? இத்தொடர் செங்குட்டுவன்மேலதாங்கால், அவனுடன் சென்ற ஆயத்தின்பெருக்குநின்ற பரப்பைச் சிறப்பித்த புனைந்துரையெனலாமல்லால்,தொகை திட்டமான ஒரு பிரயாண தூர அளவையே குறிப்பதென லெனைத்தானும் பொருத்தமின்றாம். விளையாட்டு விரும்பிச் சென்ற சேரன் தானையொடு பெயர்ந்ததாகக் கவி கூறிற்றில்லை: பைந்தொடியாயமொடு சென்றதாகவே கூறக் காண்கின்றோம். இளங்கோவடிகளிவ் வாயப்பரப்பிற் கித்தனைய பூத கற்பனை செல்லுமியல்புடையவருமில்லை. இதை நினைத்துப்போலும் ஐயங்காரவர்கள், "இளங்கோவடிகள் தம் தமையனது வடயாத்திரையை வருணிக்குமிடத்து"(i) இத்தொடர் கூறினதாக அமைத்துக் கொண்டுள்ளார்கள்.வடயாத்திரையிற் செங்குட்டுவன் பெருந்தானையொடு பெயர்ந்தானாகவே, தானைப்பெருக்கைத் தானப்பெருக்காற் புனைந்துரைத்ததாக வேனுங்கொள்ளக் கருதினர்கள்போலும். எனில் இத்தொடர் வட யாத்திரைக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத காட்சிக் காதையிற் பெண்டிரொடு பொழில் விளையாட்டு வேட்டுச்சென்ற சேரன்போய்ப் பேராற்றங்கரையிற் றங்கியதைக் குறிக்குமிடத்துள்ளதேயாம்,
------------------------------------------------------
ஆயம் = பெண்டிர் கூட்டம்.; (i) பக்கம் 128.

இன்னுமிவர்கள் தங்கருத்துப்படி இத்தொடரிலுள்ள தொகை சேரன் பிரயாண தூரத்தையே குறிப்பதாக்கொள்வதற்குப் பின்னுமோரிடை யூறுண்மையுங் காண்கின்றார்கள். கருவூரானிலைக்கும் மலைவாரப் பேராற்றங்கரைக்கும் 'உத்தேசம் 300- மைலாக"க்கண்டுவைத்தும், கிடைத்த வொருவரியை யுபயோகியாமல் விட மனந்தாழாது, அடிகளின் "ஒரு நூற்றுநாற்பதி யோசனை"க்கும், இம்முன்னூறு மைற்றூரத்திற்கு மொற்றுமை சிருட்டிக்கப் பகீரத முயற்சி மேற்கொள்வாரானார்கள். சான்று சுட்டியவழி யுண்மை காணாது, கொண்டதோர் கொள்கைக்குச் சான்று தேடுந் தாளாண்மை யிடரே வளர்ப்பதன்றோ? யோசனையளவு முன்யோசியா-வாறிடர்ப்படுத்தக் கண்டுவைத்துஞ் சிறிது மனஞ்சலியாமல், "இளங்கோவடிகள் காலத்து ஒருயோசனையளவு 2 1/2-மைலுக்குட்பட்டதாகவிருந்தது போலும்"(i) என்றோர் சமயோசிதவூகனமொன்று கொண்டமைதி கண்டவர்களின் தளராமனவலி யெம்மால் வியக்குந்தரமன்று. முதலில், கருவூரானிலையே வஞ்சியெனச் சாதிப்பதற்குச் சிலப்பதிகார வரியை யுபயோகிக்க முயன்றார்கள். பிறகு இத்தொடரிடர் தரக்கண்டு, இத்தொடரளவு கருவூருக்குப் பொருந்துமாறு, கருவூர்த் தூரத்தைவைத்து, யோசனையளவறுத்து, இதற்குரை காண முன்வந்தார்கள். இவ்வனுமான யோசனையளவுக் காதாரம் இவர்கள் சாதிக்க முயலுங் கொள்கை படுமிடரன்றிப் பிறிதுகாணேம். புதிதொரு துணிபு நாட்டப் பலபுதுத் துணிபுகாட்டுங் கற்பிதத்திறனு மதனாலாயவிடர்ப் பாடும் பிறிதெவரையுஞ் சலிப்பிக்குமென்பதிலையமில்லை. ஐயங்காரவர்களோ, இவையனைத்துங் கண்டுவைத்தும்,
------------------------------------------------------
(i)பக்கம் 129; ஊகனம்= அனுமித்தல்

கருவூரையடுத்து ஆம்பிராவதியுங் காவிரியுங்கலக்கும் கூடலையும், நொய்யல் அல்லது காஞ்சிமா நதியையும் பரணர் செங்குட்டுவனுக்குவமையாகக் கூறியிருத்தலும், ஆந்பொருநைக் கரையில் வஞ்சியுள்ளதாகச் சொல்லப்படுதலும், கருவூருக்கும் பேரியாற்றுக்கும் பெருந்தூர முண்டென்பதை யிளங்கோவடிகள் குறிப்பிப்பதும், சேரரது பழைய தலைநகரம் அந்நதிகள் பாயுமிடங்களுக்குப் பக்கத்தது என்பதற்குத் தக்க சான்றாதல் காணலாம்" என்று தெளிகின்றார்கள்.(ii) "முக்கூடல்" "காஞ்சி" "ஆந்பொருநை" இவைகளைப் பற்றியுமிவை கருவூரானிலை வஞ்சியென்று நாட்டற்பாலனவன்றென்பதும் மேலே காட்டியுள்ளேம். "கருவூர்க்கும்" பேரியாற்றங் கரைக்கும் பெருந்தூரமுண்டென்பதை இளங்கோவடிகள் சிறப்பிப்பதாக"ச்சொன்னதை யாராய்ந்தளந்து, அதுவும் இவர்கள் புதுக்கொள்கைக் குதவாமை ஈண்டுக்
கண்டோம்.

மேலும், திருவானிலையே வஞ்சிநகரும், அக்கருவூர்ப் பிரதேசமு மதன் மேற்கும் சேரர் தேசமுமேயாமாகில்,- "மஞ்சுசூழ்சோலைமலை காண்குவமென வஞ்சிமுற்றநீங்கி"ச் செல்லுஞ் செங்குட்டுவன், பெண்ணை, பாலாறு, காவிரி (ஐயங்காரவர்கள் கொள்கைப்படி யவனுக்கேயுரிய) ஆம் பிராவதி, மணிமுத்தாறு, குடவனாறு, நொய்யலாறு முதலிய பல அற்புதநதிகளுற்பத்தியாவதும், வளனுங் கவினும் வளர்ந்து திகழ்வதுமான மேற்குமலைத் தொடரின் கிழக்கடிவார நெடும்பரப்பின் சாரலனைத்தையு மகற்றி, மலையேறி, மேற்கிறங்கிப் பேரியாற்றங்கரைவந்து தங்கக் காரணந்தா னென்னையோ? விளையாட்டு விரும்பியுடன் போந்த பைந்தொடியாயத்தார் சமநிலப் பரப்பினிடைந்த மாமரச்சோலையிடையே யொழுகு மாம்பிராவதியினழகு நிழலுமரும் பழமுங்கண்டு மகிழாரென நினைத்தோ, அவரைப் பெருமலைத் தொடரேறிக்கடந்து மலைநாட்டிறங்கிக் கோங்கும் வேங்கையுஞ் செறிந்தபேராற்றின் மணற்கரையி லிறங்கச்செய்தது?
-----------------------------------------------------
(ii) பக்கம் 129

ஆற்றல்போலறிவுடைய தமிழ்க்கோமான், இவ்வாறு, தன்னூர்விட்டு, வெறும் விளையாட்டொன்றிற்காக 300 மைல்தூரம் பெண்டிரொடு வழிநடந்து, மலைகடந்து, களைத்துமீளக் கருதுவதியல்பா? -அன்றி, பேராற்றின் கழிமுகத்தூருடையான், மலை வளம் வேட்டபோது, நெடுந்தூரம் செல்லவேண்டாத அவ்வாற்றினுற்பத்தி மலைச்சாரலுக்குச் சென்று களித்து மீண்டனன் எனக்கொள்வது முறையா?- என்று சிந்திப் பார்க்கு வஞ்சி கருவூரானிலையாகாதென்பது தெற்றென விளங்கும்.
---------------


10 ம்பகுதி - "ஆடகமாடம்-அரசவனமா" ?


இனி, "ஆடகமாடத் தறிதுயிலமர்ந்தோன், சேடங்கொண்டு சிலர்நின்றேத்த"(i)- என்னுங் கால்கோட்காதை வரிகளையும், அவற்றிற்கு அரும்பதவுரையில் "ஆடகமாடம் திருவனந்தபுரம்"(ii) என்றுள்ள குறிப்பையுங்காட்டி, அக்கோயில் வஞ்சியாகிய கருவூருக்குப் பக்கத்திருந்ததாகுமேயல்லாது 300-மைலுக்கப்பாலுள்ள திருவநந்தபுரமாகாதென்பது திண்ணம்";
-----------------------
(i)சிலப்புகாதை 26,62,63.
(ii)சிலப்பு அரும்பதவுரை பக்கம் 68

ஆதலால், கருவூர்க்குக் கிழக்கே அரசவனம் என்னும் பிரதேசத்தில் திருமால் ஆலயமொன்றுண்டு என்று கருவூர்ப் புராணங் கூறுகின்ற "அரங்கநாதப் பெருமாள் சந்நிதியே பழைய ஆடகமாடமாகக் கொள்ளுதல் பொருந்துமெனலாம்"(i)- என்று கூறித் தங்கொள்கைக் கிதுவுமொரு பற்றுக்கோடாகக் கொள்கின்றார்கள். இதில்எத்தனை தருக்கப்பேய்த்தேர்களமைந்து கிடக்கின்றனவென்று நிதானிப்பார்களில்லை. முதலில், கருவூரானிலைதான் வஞ்சியென்பது இனி அவர்கள் தக்க சான்றுகொண்டு நிறுவக்கிடக்கு மொரு புதுக்கொள்கையென்பதை மறந்து, அதுயாவரும் துணிந்த சித்தாந்தம் போலக்கொண்டமைந்தார்கள். அதன்மேல், தன் புதுக்கொள்கை யென்பதற் காதரவாகக்கொண்ட இச் சிலப்பதிகாரக்குறிப்புத் தனக்குதவாமை கண்டு, ஆடகமாட மொருநாள் வழிப்பயணத்திற்குட்பட்டதாக வேண்டுமாகையாலும், கருவூரானிலையருகோர் பெருமாள் கோவிலிருப்பதாலும் இக்கருவூரே சிலப்பதிகாரத்திற் கண்ட வஞ்சியாகவேண்டுமென்று துணிவாரானார்கள். செங்குட்டுவன் வடக்கே புறப்படுவதற்கு ஒரேநாளைக்கு முன்புதான் பயணம் பிரத்தாபிக்கப்பட்டதென்ற ஆதாரம் யாண்டுக் கண்டார்களோ? இவன் மலைக்குறவரிடம் கண்ணகி விண்ணாடுசென்ற விபரங்கேட்டதும், வஞ்சிக்குத் திரும்புமுன்னரே வடதிசைக்குப் படிமக்கல் கொணர்வான் புறப்படுமுறுதி செய்துவிட்டதாகவன்றோ சிலப்பதிகாரக் காட்சிக்காதை கூறுகின்றது: அத் தகவலெட்டி யனந்தபுரக்கோவி லர்ச்சகர் தம்மரசருக்கு விஜயங்கூறிப்பிரசாதங் கொணர்ந்திருக்கலாகாதா? பதிற்றுப்பத்தினும் புகழும் மலைநாட்டநந்தபுரமே(ii) யாடகமாட மாகாமல், ஆனிலைக்கருகோர் சிறுகோயிலே யாமாறென்னோ? பெருமாளுக்குக் கோயில் கருவூரானிலைக்கருகுமட்டுந்தானுளதோ?
-------------------------------------------------------
(i) பக்கங்கள் 122,123
(ii) பதிற்றுப் பத்து செய்யுள்-31

அரும்பதவுரைகாரரே ஆடகமாடத்தை மலை நாட்டூராய இரவிபுரமென்பாரு முளரென்று காட்டிய குறிப்பையிவர்கள் கவனியாததேனோ? கடற்கரை வஞ்சிக்கருகே அரவணைகிடந்தானுக்குக் கோவிலே கிடையா தென்பது இவர்களாற் சித்தாந்தஞ் செய்யப்படவில்லை; ஆராயப்பட்டதாயுமில்லை. இதனாற் கருவூராநிலையே வஞ்சியென்றாய வகை இனியிவர்கள் காட்ட வெதிர்பார்த்து அதுவரை பொறுமைகொள்வோம்.
---------------------------


11-ம் பகுதி. சேரர்நாடு மலைநாடே


இறுதியாக,"கொடுங்கோளூர் என்றபெயரேபழைய நூல்களுக்குச் சிறிதுந் தெரியாததொன்றாகும். இதனை யாடுத்துள்ள திருவஞ்சைக் களத்துக்கும் வஞ்சிக்கும் எவ்விதப் பொருத்தமும் இல்லாமையால் சரித்திரவறிஞர் அவ்விரண்டனையும் பொருத்தியெழுதுவனவெல்லாம் முன்னைவழக்கோடு முரணுவதேயென்க"(1)என்று கட்டுரைத்தார்கள். வஞ்சிக்கும் வஞ்சைக்களத்திற்கும் எவ்விதப் பொருத்தமுமில்லாமைக்கிவர்கள் கண்ட"முன்னையவழக்கு"த்தான் யாதோ? கூறினார்களில்லை, கூறுங்காலதனை யாராய்வாம். இவைதமக்குள்ள பொருத்தத்தைப் பற்றிக் கீழே விசாரிப்பேம்.ஈண்டு பழைய நூல்களில் கொடுங்கோளூர் என்ற பெயர் காணாமையா லவர்கள் கொள்ளூமனுமானப்பலனைமட்டு மாராய்வோம். அத்தினபுரம், மிதிலை, பாடலிபுரமிவற்றின் பிற்காலப் பெயர்கள் வியாசர் வான்மீகரிதிகாச முதலிய பழைய நூல்களிற் காணப்படுகின்றனவா?
----------------------------------------------------------------
(1)பக்கம் 133

கொடுங்கோளூரைச் சொல்லும் பெரிய புராணத்திலு மிவ்வூர்க் கிக்காலத்துவழங்கப் பெறுங் 'கொடுங்கலூர்' என்ற பெயரேனும், ஆங்கிலப் பயிற்சியுடையார் பரவச்செய்யும் 'கிராங்கனூர்' (Cranganore) என்ற பெயரேனும் கூறப்பட்டுள்ளதா? ஒரு நூலுக்குப்பின் னெழும்பெயரை யந்நூலாசிரியர் முன்னுணர்ந்து கூறுந்தீர்க்கதரிசனம் பெறாமைகொண்டு, அவ்வூர் அந்நூற்காலத்தில்லையென வாதிப்பது தருக்க முறையாமா? கொடுங்கோளூர் என்ற பெயர் எக்காலத்தெப்பபடி யெழுந்ததென்ற வாராய்ச்சி ஈண்டு நிகழாது; நிகழ்வதின்றி-யமையாததுமன்றாம். ஆனால் சேக்கிழார், அடியார்க்கு நல்லார் முதலிய தொல்லாசிரிய ரிவ்வூரே சங்க காலத்து வஞ்சியூர் என்று விதந்து கூறினதே போதிய சான்றும் "முன்னைய வழக்கு" மாமன்றோ? ஐயங்காரவர்கள் கூடத் தந்நூலில், "இக்கருவூரின்தானத்தில் மலைநாட்டுக் கொடுங்கோளூர் சேரராசதானியாகப் பின்னூல்களில் கூறப்படுதல் காணலாம்"(i) என்றிதற்காதாரமுண்மையை அங்கீகரிக்கிறார்கள். ஆனாலிது தன்னபிமானக் கொள்கையோடு முரணுவதுகண்டு, "சங்ககாலத்துக்குப் பின்னர்ச் சோழராற்றற் கஞ்சிய சேரர், வஞ்சியைவிட்டு நீங்கித் தங்கட்குரிய மலைநாட்டிற் கடற்கரையிலுள்ள கொடுங்கோளூரைத் தலைமை நகரமாக் கொள்ளலாயினர்"(ii) என்று கூறித் தாங்கண்ட நல்லாசிரியர் மேற் கோள்களினின்றுந்தப்ப வழிதேடுகின்றார்கள்
-------------------------------------------------------
(i) பக்கம் 132; (ii) பக்கம் 131

. இது சரிதநூற்றுணை பெற்றுளதே லிவர்கள் யோசனை பலிப்ப தொருவேளை சாத்தியமாகும். சோழராதிக்கம் பெருகிய தெல்லாம் கி.பி.9 அல்லது 10-ம் நூற்றாண்டிற்குப் பின்னரே யென்ப திதுவரை சரிதநூல்கண்ட துணிபு. ஆனால் சேரவீரர் சிலர் இடையிடையே சோழர் முதலியகீணாட்டு மன்னர் மேற்பெற்ற வெற்றிப்பெற்றியல்லால், சாசுவதமாகக் கொங்கு நாட்டிற்குக் கிழக்கே யாதொரு பாகத்தையுமவர்களாண்டதாக யாதொரு நூலிலும் சாசனங்களிலுங் கூறக்காணோம். கருவூரானிலைச் சாசனங்களெல்லாம் சோழரே தந்துளவாகவும், சேரராதிக்கக் குறிப்பொன்று மவை கூறிலவாகவும் ஐயங்காரவர்களே எழுதியிருப்பதை(i) மேலேகாட்டியுள்ளேம், இனிச் சோழர், சேரரைத் தந்நாடும் நகரமும் விட்டோடச்செய்து, அவர் பழவிறன் மூதூருங்கொண்ட மறக்கொணாப் பெரு வெற்றியை நூல் யாவும், சாசனங்களும் சரிதவுபகரணமனைத்தும் மறந்த நிந்தைக்கு, அதை இவர்கள் மீளக்கண்டுலகுக்குதவிய விந்தையன்றி வேறுவமையுண்டோ? "சோழராதிக்கம் பெருகியபோது கருவூர் சோணாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான செய்தி சாசனங்களாலும் நூல்களாலுந் தெரிகின்றது" என்றும் "10-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கருவூர் சோணாட்டைச் சார்ந்ததென்பர் சாசனப்பரிசோதகர்" (ii) என்றும் எழுதிய குட்டுவன் சரிதநூலார், இக்கருவூரானிலை என்றைக்காவது சேரரூராயிருந்ததற்கு யாதோராதாரமுங் கூறாதகன்றது, அவர்கட் கிது சான்றுவேண்டாச் சரிதவுண்மையாகத் தோற்றிய துணிபே போலும், இவர்களத்துணை நுணுகிய சரிதமதியில்லார்க்கிதனைச் சிறிது விளக்கியிருப்பின் மிகவுமுபகாரமாகியிருக்கும். "இவ்வூர்த் திருவானிலை கோயிலைப்பற்றிய தேவாரப்பதிகங்களிலேனும் வஞ்சியின் பழஞ்செய்தி சிறிதுங் குறிக்கப்பட்டிருக்கவில்லை"(iii) யென்றிவர்களே பரிதபிப்பதை மேலுங்காட்டியுள்ளேம் சோழருக்கிக் கருவூரானிலை சொந்தமென்ற வரையே பழநூலாதரவு கிடைக்கின்ற தென்ப திவர்கட்கும் எமக்கு முடன்பாடாம்:
--------------------------------------------------------
(i) பக்கம் 124,181 ; (ii) பக்கம் 131 ; (iii) பக்கம் 130,131

ஆனால் முன்னொரு காலத்திலிவ்வூர் சேரருக்குரியதா யிருந்திருக்க வேண்டுமென்றிவர்களனுமிக்கு மிடத்தேதான் வேறுபடுவாம். கிடைத்த பழநூன் மேற்கோள்களெல்லா மோரூரை யொருகுலத் தரசருக்குரியதாக்கவும், அதற்குமாறான பழங்கொள்கை யாண்டுமிலதாகவுங்காணுமிடத்தே, அவ்வூர் அவ்வரசருக்கிடையிட்டுக் கிடைத்ததான மேற்கோள் கண்டாலன்றியாவருக் கஃதாதி தொட்டிருந்ததெனக் கொள்ளுவதே சரித நூலாராயுமுறை. ஆனிலைக்கருவூருக்குச் சோழர் சம்பந்தம் சாசனக்காரர்கண்ட 10-ம் நூற்றாண்டிற்கும் வெகுகாலத்திற்கு முன்னதென்பதை மேலே பெரிய புராணப்பாக்களாற் றெளிவாக்கியிருக்கின்றேம்'*. சாசனங்களும், நூல்களும் ஆனிலைக்கருவூரைச் சோழராதிக்கம் பெருகிய போதவர் முக்கிய நகரங்களுளொன்றாகக் கூறுவதற்கும், அதற்குமுன் அவ்வூரை யத்துணை பாராட்டாமைக்கும் தக்ககாரணமுண்டு. சோழரைப்பாடும் புலவர் சோணாட்டூரெதுவுங் கொண்டு பாடுவாரென்று நினைப்பதுமுறையாகாது. சோழரைப்புகழ்ந்த புலவராற் பாடப்பெறாமைகொண் டோரூர் சோணாட்டதன்றென மறுப்பதும் மரபன்றாகும். பாடுவார் பாடுமரசர் பீடுபெறு மூதூர்களைமட்டுஞ் சுட்டிப்பாடுதலே பெருவழக்காம். சோழருக்காதியிற் புகாருமுறந்தையுமே தலைநகரங்களா யிருந்தபோ தவைகளே பாடப்பெற்றுள. பிற்காலத்தேயவர் தமக்கமைத்துக்கொண்ட இராசதானிகளாகிய காஞ்சி, கருவூர்களை யக்காலநூல்கள் பாராட்டுகின்றன.
----------------------------------------------------
* இப்புத்தகம் பக்கம் 18,19 பார்க்க.

புகார் தலை நகராயிருந்தபோதெழுந்த சங்க நூல்களிற் கருவூரானிலை பாடப் பெறாமை யென்ன விந்தை? பாடப்பெற்றிருப்பினன்றோ வியப்பைத்தரும். பழைய நூல்களெல்லாம், பாண்டியருக்கு மதுரை கொற்கைகளையும், சோழருக் குறந்தை புகார்களையும்,சேரருக்கு வஞ்சி தொண்டி மாந்தைகளையுமே சுட்டிப்பாராட்டுகின்றன. இதனாலிம் மூவேந்தர்நாடுகளிலு மிவைதவிர்த் தூர்களேயில்லையெனச் சாதிக்கத் துணிவாருண்டோ? புலவர்பாடுங்கால், பாட்டுடைத் தலைவர்பரம் பரைமூதூராதல், அன்னவர் ஒன்னலர்வாய்க்கவர்ந்த வெற்றிப்பெற்றிய நல்லூராதல்பற்றிப் பாடுவதே அடிப் பட்டதொல்லைமுறை. இக் கருவூரானிலை, "வடதிசை யெல்லையிமயமாகத் தென்னங் குமரியொடாயிடையரசர் சொல்படநாட்டைத் தொல்கவினழித்த, போரடுதானைப் பொலந்தார்க்குட்டுவ"(i)ர்க்குரிய தலைநகராயிருந்து, அவரைப் போர்வென்ற சோழராற் கோட்பட்டபிறகே யவர்க்குரியதா யிருப்பின், இப்பெரு வெற்றி பாராட்டிப் பாடுவதைவிட்டு மேற்காட்டியுள்ளபடி அச்சோழ குல பரம்பரையில் என்றும்நின்ற வூராகவே சேக்கிழார்பாடிச் சரித வுண்மையுஞ் சோழர் வன்மையு மொருங்கழிக்க வொருட்படாரன்றோ?

இவை பலவும் புறக்கணித்த குட்டுவன் சரிதநூலார், அரசராவார் தத்தம் நாட்டகத்தே தலைநகரமைப்பதல்லால், மலையரசர் புனல்நாட்டிற்றலை நகரமைத்து வாழ்வதெனல் நம்பிக்கையைச் சிறிது தம்பிக்கச் செய்யு மென்றுணர்ந்து, "இக்கருவூரைச் சூழ்ந்த வெங்காலநாடு....... ... சோழராதிக்கத்துக்கு முன்பு .............கொங்குதேச ராசாக்களாட்சிக் குட்பட்டிருந்ததென்றும், அவர்க்கு முற்பட்ட சங்ககாலத்தே ........ சேரரது சிறந்த தேசமாகி, வஞ்சியெனப்பட்ட இக் கருவூரைத் தலைமை நகரமாக்கிக் கொண்டு விளங்கியதென்று மறியத்தக்கன,"(ii)என்றோர் சமாதான மமைத்துவைத்தார்.
---------------------------------------------------
(i)பதிற்றுப்-செய்யுள் 42.; (ii)பக்கம் 132.

இதில், "வஞ்சியெனப்பட்ட இக்கருவூரைத் தலைமை நகரமாக்கி" என்றிவர்களொரு தலையாத் துணிந்துகொண்ட குறிப்பே, இவ்வாறு பலவிடத்தும் பாந்திப்பாந்தி இன்னபல அடிப் படையற்றிடர்ப் பட்டலமருவதாம் புதுத்துணி புகளையிவர்கள் வாரி விரைத்திருப்பதை நன்கு விளக்குகின்றது. கருவூரே வஞ்சியென்ற காட்டருங்கொள்கையை நிரூபிக்க நேர்சான்றின்மையால், அங்கு மிங்கு மதற்கு மேற்கோள் தேடிக் கண்டதாக்காட்டும் நிகழாச்சரித நிகழ்ச்சிகளால் நிரூபிக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட தங்கொள்கையைச் சித்தாந்த முடிபாக்கொள்வார்கள். கருவூரை வஞ்சியெனக் கொள்வதற்கு, அதைச் சூழ்ந்தநாடு சேரர் நாடாகக் காட்டவேண்டிய தவசியமென்று நினைத்தார்கள். நினைக்கவே, கருவூரே வஞ்சியென நிரூபிக்குங் கருவியாக, அதைச்சூழ்ந்த வெங்கால நாட்டைச் சேரருக்குரியதாக் காட்டவந்தார்கள்: வந்தவர்கள், இது சேரநாடென்பதற்கு நிராக்ஷேப மேற்கோளின்மை கண்டு, அதனிடைக் கருவூரே வஞ்சியென்று காட்டினால் வஞ்சி வேந்தருக் கந்நாடுமுரித்தாகுமென்ற நியாயந் தோற்றியதையாண்டிறுகப்பற்றி, நாட்டாராய்ச்சிக்குத் தக்க துணையாக்கி, அதனிடைப் புகுத்துவைத்தாரகள். ஈண்டுக் கருவூரை வஞ்சியெனவைப்பதால், கருவூர்ப் பிர தேசம் சேரநாடாயிற்றா? அன்றி யந்நாட்டைச் சேரர் நாடாக வைத்துக்கொண்டதாற் கருவூர் வஞ்சியாயிற்றா? இவை யிரண்டுமேனும், அன்றே லிரண்டிலொன்றேனும், தக்க பிற சான்று கொண்டுறுதியடைய வேண்டும். உறுதிபெற்றவொன்றாற் பிறிதொன்றைப் பேணல் கூடும். அல்லாமல், இவை தம்மிலொன்றை யொன்றாற் சாதிக்க முயல்வதானால் பரஸ்பரமெலிவித் திரண்டுநலிவதன்றி வலியுறும்வகை வேறுண்டோ? இவ்வாறு, நின்றொன்றும் நிரூபியாமல், சௌகரியப்படி ஒன்றைவிட்டொன்றிற் கழன்று சுழன்று வட்டத்தில் வாதிப்பதாற் கிட்டுவது வாதநட்டமேயாம். இதனை மேனாட்டுத் தருக்க நூலோர் திட்டமில்லா வட்டவாதிப்பென்றன்றோ வெறுப்பர்.

இனி, இக்கருவூர்ப் பிரதேசம் சங்ககாலத்தே சேர நாடாயிருந்ததற்காவது, இடைக்காலத்தே கொங்கரரசாட்சிக் குட்பட்டிருந்ததற்காவது இவர்கள் கண்ட மேற்கோளொன்றையும் விளக்கிக் கூறினார்களில்லை. இக் கருவூர்ப் பிரதேசம் சிலகாலம் கொங்கரரசாட்சிக்குட்பட்டிருந்ததாகக் கொண்டதற்காதரவாக, தந்நூலினடிக் குறிபொன்றில், 'கருவூர், கொங்கு நாட்டுத்தலங்களுள் ஒன்றாகக் கூறப்படுதல்காண்க(1) என்று பொதுப்படக் கூறிவைத்தார்கள். யாரால்? எப்பழநூலில்? யாண்டுக் கூறப்பட்டது? என விரித்திலர்கள். நேற்று வெளிவந்த தேவாரத் தலமுறைப் பதிப்பில், தல அட்டவணை தொகுத்த பொறுப்பில்லாரொருவர். அவ்வட்டணையில், கொங்குநாட்டூர்களென்ற தலைப்பின்கீழ்த் தவறி இக்கரு வூரானிலையைப் பெய்துவைத்த பேராதாரமொன்றன்றிப் பிறிதுகாணாக் குட்டுவன் சரித நூலாரிதை மேற் கோளாகவிதந்து கூறத் துணியாமற்போலும், இவ்வாறு பெயர் ஊர் ஒன்றுமின்றியொரு மேற்கோணிலையாக் காட்டித் தங்கோணிறுவ முயல்கின்றார்கள். மறுபடியும், "சங்க நாளிலே கொங்குதேசம் குடகு நாடாயிருந்தமை, குடகக்கொங்கரு(1) மென்னும் அடிகள் வாக்கா லறியலாம்" (2) என்கின்றார்கள். குடகன் என்பது சேரன் மறுபெயராகவே. "குடகக்கொங்கர்' அக் காலச் சேரருக்குட்பட்ட கொங்கு நாட்டுக் குறுநில மன்னர் பலராகலாம்.
------------
(1) பக்கம் 132; (1) சிலம்பு 30-159 : (2) பக்கம் 132 note

கொங்கு வேறு, குடகு வேறாதலால், இளங்கோவடிகள் தம் தமையன்செய்த பத்தினிக் கடவுளாராதனைக்குக் குடகரும், கொங்கரும், மாளுவ வேந்தரும் வந்தனரெனக் குறித்துமிருக்கலாம். உரைபெறு கட்டுரையில், குடகடையில்லாமலே 'கொங்கிளங்கோச'(iii)ரெனவே கூறப்படுதலும் கவனிக்கற்பாற்று. இது கொண்டு கொங்கு தேசம் சங்க நாளிற் குடகு நாடாயிருந்ததெனத் துணியக்கூடாமை வெளிப்படை. வஞ்சிச் சேரனான குட்டுவன் பிறநாடாரான கொங்கரைச் செல் கெழு போர் வென்றதாகக் கூறும் பாலைக்கௌதமனார் பாட்டும், செங்குட்டுவன் "கொங்கர்செங்களம்வேட்ட" தாய்க்கூறும் அடிகள் வாக்கும் நன்கு விளக்குகின்றன. (iv) எனைத்தாயினும், இதனாற் கருவூர்ப் பிரதேசம் கொங்கு நாடாதல் பெறப்படாமையொருதலை. இதையும், கருவூர்ப்பிரதேசம் கொங்கு நாடாகாமல் புனல் நாடாதலையும், நாம் மேல் ஓரிடத்து விசதப்படுத்தி யிருப்பதைக்கொண்டு தெளிக.

ஈண்டு, இக்கொங்கு நாட்டிற்கு மேற்குள்ள மலைநாட்டரசர், இக் கருவூரைச் சூழ்ந்த வெங்காலநாட்டை நாடாகவும், அதனகத்துக் கருவூரானிலையைத் தமக்குரிய தலை
நகராகவுங் கொண்டிருந்தனரா வென்பதைச் சிறிது விசாரிப்பாம்.

மேலே நாம் பலமுறை வற்புறுத்தியபடி இடையிடையே, சிலசேரர்மேற் சோழர் வெற்றி கொண்டிருப்பதுபோல், சோழர் சிலரைச் சேர வீரரும் போர் வென்றதான செய்தி கிடைப்பதல்லால், புனல்நாட்டெந்தப் பகுதியை யுந்தமதாக்கிச் சேரராண்டிருப்பதாக யாண்டுங் கண்டிலேம்.
----------
(iii) சிலப்பு முதலிலுரைபெறு கட்டுரை.
(iv) பதிற்றுப்-செய்யுள் 22, சிலப்பு-வாழ்த்துக்காதை

இதற்கு நூலாதாரங்காணாத குட்டுவன் சரிதநூலாகும். "கருவூர்ப்பசுபதீஸ்வரர் கோயிலிலுள்ள சாஸனங்களால், இக்கருவூரைச் சூழ்ந்த வெங்கால நாட்டிற்கு 'கேரளாந்தகவளநாடு' என்றும், 'சோழகேரளமண்டல'மென்றும் பெயர்கள் வழங்கி வந்தனவென்பது வெளியாகின்ற"(ii)தென்று காட்டி, இப்பெயர்களால், சோழராதிக்கத்திற்குமுன்பு, கருவூர்ப் பிரதேசம் சேரருக்குச் சிறந்த பூமியாகக் கருதப்பட்டிருந் தமை பெறப்படும்"(i) என்பார்கள். இச்சாஸனப் பெயர்களின் வரலாறொன்றும் அச்சாஸனங்களில் விளக்கப் பட்டதாயில்லை. 10-ம் நூற்றாண்டிற்குப் பிறகு, தமிழரசர் ஆரியவாதிக்கத்திலீடுபட்டுத் தம்வயமிழந்து, தமிழ் மண மறந்து, யாண்டுந்தமிழ்ப் பெயரறவே களைந்து களித்த காலத் தெழுந்த விச்சாஸனங்களில் யாதொரு தொடர்பும் வரலாறுங்குறியாதெழுதப் பட்டுள பெயர் களைக்கொண்டு சங்ககாலச் சரித நிகழ்ச்சிகளை யூகித்தறிய வொண்ணாதென்பது யாவருமறிவதொன்றாம். இனி, 'கேரளாந்தகவளநாடு' எனும் பெயராற் பெறக்கூடியது தானென்னை? கேரளனாகிய சேரனுக்கு அந்தகனாய சோழனது வள நாடென்பதே இப்பெயருக்குச் செம்பாகமான பொருள். இச்சாஸனப் பெயர்கொண்ட சோழன் தன் காலச்சேரனை வென்ற வீரந்தோன்ற இப்பெயர் பூண்டிருக்கலாமென்பதும், அவ்வளவன் புனல்நாட்டின் ஒரு பகுதியாய இக்கருவூர்ப்பிரதேசத்தை அவன் வள நாடெனக்குறிக்கப்பட்ட தென்பதுமே இதனாற்கிடைப்பதாகும். இதுவேபோல், சோழ கேரள மண்டலமென்னு மிம்மணிப்பிரவாளப் பெயர், அக்காலச் சோழன் சேரனொருவனை வென்ற புகழ்பேண நினைந்தோ, அல்லா தொரு வேளை யவ்விரு குலத்துரிமையுந் தனக்கெய்தியதாக் கொண்ட தொரு பெருமை கருதிப்புனைந்தோ,
-------------------------------------------------------
(i)பக்கம் 132.

இவ்வாறிச் சாஸனத் தெழுது வித்திருக்கலாமென்று நினைக்கவிடந் தருகின்றதன்றி, இதனாற் சங்க காலச் சேரருக்கிப் பிரதேசம் சொந்தமாயிற்றெனக் கொள்ளுமுறை புலப்படவில்லை, இவை தமக்கு எப்பொருள் கொள்ளினும், இப்பெயர்க்கிது காரணமெனச் சாஸனக்குறிப்பில்லாதவரை, எல்லாம் சமயோசிதவனு மான மாவதல்லால் இதுவேயிதன் பொருளாமென வரையறுத்துத் துணிவதற் கிடனுமில்லை: இதினின்று பெறுவதாஞ்சரிதமோ மலடிபிள்ளை.

இக்கருவூர் சோணாட்டின் மேற்கெல்லையென் றையங்காரவர்கள் மேற்கோளுடன் கூறியிருப்பதையும், அதன் மேற்கே கொங்குநாடுண்மையையும், அக்கொங்குநாடு செங்குட்டுவனாட்சிக்குட் படாப்பிற நாடாயிருந்தமையை யும் மேலே விரித்துக்காட்டினேம். இக்கொங்கு நாட்டிற்கும் மேற்கே, மேற்குமலைத்தொடருக்கும் மேலக்கடலுக்குமியையே நின்ற மலைநாடே சேரருக்குரிய நாடென்பதை, சேரரைப்பற்றிய "ஆராய்ச்சிக்குச் சிறந்த சாதனமாவ"தாக ஐயங்காரவர்களாற் பாராட்டப்படும் (i) "சிலப்பதிகாரம் மணிமேகலை பதிற்றுப்பத்து" முதலிய பழைய நூல்களே விசதப்படுத்துகின்றன. இத்தொன் நூல்களில் யாண்டும் காவிரி நாட்டெப்பகுதியுஞ் சேரராட்சிக்குட் பட்டதாகக் கூறப்படாததும், ஈண்டுச் சிந்திக்கத் தக்கது. சேரர்புகழே கூறும் பதிற்றுப்பத்திற் பலவிடத்தும், சேரருக்கு மலைநாட்டை யவர்க்குரிய மனைவியாக வுருவகப் படுத்திச் சிறப்பித்துப் பாடப்பட்டிருப்பதுமன்றி, வேறு நாடு கூறப்பட்டதாயுமில்லை. (ii) இதுவுமன்றி, புனல்நாடு போற்றும் புலவரொருவர், இளஞ்சேர லிரும்பொறையைப் பாடிய பாட்டொன்றில்,
------------------------
(i) பக்கம் 4; (ii) பதிற்றுப்-செய்யுள் 90

தான் காதலிக்கும் "காவிரிப்படப்பை நன்னாடன்ன, வளங்கெழுகுடைச் சூலடங்கியகொள்கை, யாறியகற்பிற்றேறிய நல்லிசை, வண்டார் கூந்தலொண்டொடி கணவ," என்று அச்சேரன் மலை நாட்டைப் புகழ்ந்து கூறியுமுள்ளார்.(ii) காவிரி நாடு சேரருக்குரிய நாடாமாகி லதையே பாடாமலதை யொத்த நாட்டிற்குரிய தலைவனே! என்று புகழ்ந்திருக்கக் காரணமுண்டோ? 'குடக்கோ' வென்றும், 'குடவர் கோமான்' என்றும், "சேரன் - பொறையன் - மலையன்" (iii)'வெற்பன், பறம்பன்' என்றுமே, பழைய நூல்களிலிச் சேரர் பலவிடத்து மழைக்கப்படுகின்றனரன்றிப் புனல் நாடுடையராகப் பேசப்படவேயில்லை. பதிற்றுப் பத்திற் பலபாக்களில், சேரர் மலையுங்கடலுந்தருந் திருவுடையரென்று விதந்தோதப் படுகின்றனர். இந்நூலில் மேலக் கடலுக்கும், மலைத்தொடருக்கு மிடைக்கிடக்கும் வளமலை நாட்டையும், அதன் தண் கடற்படப்பை நிலத்தையுமே யிவர்க்குரியவாச்சுட்டியவும். பிறிதெந்த நாட்டிற்கும் பொருந்தாதனவுமான பல செய்யுட் பகுதிகளை முன்னே காட்டியுமிருகின்றேம். பதிற்றுப்பத்துப்பாக்களிலும் சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திலும், சேரரைமலை நாட்டரசராகவும். "குட திசையாளுங் கொற்றங்குன்றா ஆரமார்பிற் சேரர்குலத்தவ"ராகவுமே (i) பேசக்காண்பதன்றி, யாண்டும்காவிரியூட்டு நாட்டவராகக் குறிக்கக்காணோம். இதற்குமாறாக, தனக்குரிய மலைநாடொழிய, குமரிமுத லிமயம்வரை வேற்றசர் நாடுகளே யிருந்தனவென்பதும், வெற்றிவெறியாற்றிக்கு விசயஞ்செய்து புகழுற்ற செங்குட்டுவன் அப் பிறநாட்டரசர் மேற்படையெடுத்துப் பொருது வென்றதும், அவனைப் பாடிய பரணர் சாத்தனாராகிய விருபெருஞ் சங்கப்புலவர் வாக்குகளால் வெளிப்படுகின்றன.
----------
(iii)மணிமேகலை காதை. 28. வரி 103. சிலப்புகாதை 16.
(i)சிலப்பு வஞ்சிக்காண்டம் கட்டுரைவரி 2,3.

    (1) வடதிசை யெல்லை யிமய மாகத்
    தென்னங் குமரியொ டாயிடை யரசர்
    முரசுடைப் பெருஞ்சமந் ததைய வார்ப்பெழச்
    சொல்பல நாட்டைத் தொல்கவி னழித்த
    போராடு தானைப் பொலந்தர்க் குட்டுவ (ii)

    (2) செங்குட் டுவனெனுஞ் செங்கோல் வேந்தன்
    பூத்த வஞ்சி பூவா வஞ்சியிற்
    போர்த்தொழிற் றானை குஞ்சியிற் புனைய
    நிலநா டெல்லை தன்மலை நாடென்ன
    ... ... ... ...
    தேரு மாவுஞ் செறிகழன் மறவரும்
    ... ... ... கடைஇக்
    ... ... ... ...
    பலவேந்த
    ரனைவரை வென்றவரம் பொன்முடிமிசை
    ... ... ... ...
    செம்பொன் வாகையுஞ் சேர்த்திய சேரம்(iii)

ஐயங்காரவர்கள் தந்துணிபுக்கியையச் "சேரதேசமென்பது- கருவூர்ப்பிரதேசமுட்பட, கோயம்புத்தூர், சேலம், நீலகிரி ஜில்லாக்களும், மைசூர்நாட்டின் தென் பகுதியும், மேற்குத்தொடர்ச்சிமலை நெடுகவுள்ள கடற்கரைப் பக்கங்களுமாம்,"-(iv) என்றெழுதியிருக்கின்றார் கள் இத்தனை விரிந்த நிலப்பரப்பை, பலமுறை பிறமன்னரைவென்ற செங்குட்டுவன் தானவரிடமிருந்துவென்று கொண்ட பெருநாடாகக்கூடப்பேசுகின்றார்களில்லை.
----------------------------------------------------
(ii)பதிற்றுப்-43; (iii)மணிமேகலை-26-77-90; (iv)பக்கம் 114.

இது முழுமையுமே அடிப்பட்ட சங்ககாலச் சேரநாட்டளவாகக் கூறுகின்றார்கள். இது முழுதும் செங்குட்டுவன் சொந்த நாடாமாகில், தனிமலைநா டிதிலெரு சிறுபகுதியேயாக வேண்டும்: பெரும் பகுதி காவிரி நாடாகவே, இவன் வெற்றி புகழும் சாத்தனார் "நிலநாடெல்லை தன்மலை நாடாக" வென்று பாடுவாரா? இத்தொடரா லிவனுக்குரிய நாடு மலைநாடேயென்பதும், அஃதொழித்துப் பிறிதிடமெல்லாம் இவன் வெற்றிப்புகழ் மண்டிக் கிடந்த பிற அரசர் நாடாமென்பதும், தெளிவாமன்றோ? இவ்வுண்மை மறக்க மாட்டாத குட்டுவன் சரித நூலுடையார்களும், தங்கள் நூலில், "சேரர் வஞ்சியைவிட்டு நீங்கி, தங்கட்குரிய மலைநாட்டிற் கடற்கரையிலுள்ள கொடுங் கோளூரைத் தலைமை நகரமாக்கொள்ளலாயினர்(i) என்பார்கள். இதனால், மலைநாடே யிவர்க்குரிய தென்ப தொருதலை. அஃதிவர்களுக்கு முடன்பாடெனத் தெரிகின்றோம். இஃதொழியப் பிறதேச மில**ர்க்குச் சொந்தமென்பது நிரூபிக்கப்படுவரை: கருவூர்ப் பிரதேசத்தைச் சேர நாடாகக் கொள்வதாவது. அதன கத்தானிலையை வஞ்சியெனக் கொள்வதாவது பொருத்தமாகாது. இவை பலவற்றாலும், இக்கருவூர்ப்பிரதேசம் சேரநாடெனக் கிடையாமை மட்டுமில்லை அது புனல் நாடாவதும் பெற்றாம். இதுவுமன்றிப் பழைய வஞ்சி, மலைநாட்டுப் பேராறாம் பொருநைக்கழிமுகத்தூர் என்பது மேலே குறித்த பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், மணிமேகலை மேற்கோள்களானு மினிது விளங்குகின்றது.
-------------------------------------------------
(i)பக்கம் 132

இதுவேபோல், தந்தமையன் செங்குட்டுவன் அரசிருந்த மூதூர் வஞ்சியின கவூர்ப்பாக்கமாம் 'கருவூர்' மேலமலைத் தோடரின் மேற்கே மலைநாட்டூராவதன்றி, சோணாட்டோர் பகுதியா மிவ்வெங்கால நாட்டுக்'கருவூரானிலை'யன்று என்பதை இளங்கோவடிகளே தம்மரிய நூலிலைய மறக்காட்டியு முள்ளார். செழித்த காவிரி நாட்டுப் பார்ப்பான் பராசரனென்போன் சேரர்கொடைத்திறங்கேட்டு, செங்குட்டுவனைக் காணவிரும்பி, இடையூறுங் காடுநாடுங் கடந்துவந்து, நீண்டமேற்கு மலைத் தொடருந்தன் பிறக்கொழிய மேற்கே நடந்து மேற்சென்று, வஞ்சியெய்திச் செங்குட்டுவன்பாற் பரிசுபெற்று மீண்டதை அடிகள் பின்வருமாறு கூறுகிறார்.

    பூம்புனற்பழனப்புகார் நகர்வேந்தன்
    தாங்காவிளையுணன்னாடதனுள்
    வலவைப்பார்ப்பான் பராசுரனென்போன்
    குலவுவேற்சேரன் கொடைத்திறங்கேட்டு
    ... .... ... ... .. ..

    காடுநாடு மூரும்போகி,
    நீடுநிலை மலயம் பிப்படச் சென்றாங்கு,
    ... ... ... ... ... ...
    பார்ப்பன வாகைசூடியேற்புற
    நன்கலங் கொண்டுதன் பதிப்பெயர்வோன் (i)

    இதில், "நீடுநிலைமலயம்பிற்படச் சென்று" என்னுந் தொடர், 'சோணாட்டுப் பார்ப்பான் மேற்க்குமலைத் தொடர் கடந்து, மேற்கே வந்து, மலைநாட்டுக் கருவூராம்வஞ்சி முற்றங்கண்டான்; என்பதைத் தெளிவாக்கவில்லையா?
    -------------------------------------------------------
    (1) சிலப்புக்காதை- 23, வரி-59,73.

ஆனிலைக் கருவூரே வஞ்சியும், அதைச்சூழ்ந்த புனல்நாடே செங்குட்டுவனிருந்த நாடுமாயின், அவ்வள நாட்டுப் பராசரன், அந்நாட்டவ்வூர் அகலவிட்டு மேற்கே நின்ற நெடுமலைத் தொடரும் பிற்படச் சென்று காணுமாறெங்ஙன்? ஈண்டு அடிகள் குறித்தபடியே, வஞ்சி மேற்கே மலைநாட்டிலுள்ள தென்பதை - சேரர்கருவூரெதிந்த கிள்ளிவளவனைப் பாடிய கோவூர்கிழாரும்,

    வஞ்சிமுற்றம் வயக்களனாக
    ... ... ... ... ..
    கொண் டவனைபெரும், குடபுலத்ததரி" ii

என வலியுறுத்தியுமுள்ளார். இவ்வளவன் வென்றெடுத்த சேரரது பேரூராம் 'வஞ்சிமுற்றம்' நடுநாட்டுக் கருவூரானிலையே யாமாகில், அதனையெறிந்த (iii) புகழ்பாடும் புலவர், 'குடபலத்ததரி' - என்று குறிக்கக் காரணமுண்டோ?

இவ்வாறு சேரர் குடபுலத்தரசு வீற்றிருப்பவரேயன்றி, கிழக்கே காவிரிபாயும்வெங்கால நாட்டின்றங்காதவ ரென்பதை, "குடதிசையாளுங் கொற்றவேந்தர்" (iv) என்னும் அடிகள் வாக்கும் விசதப்படுத்துகின்றது.
---------------------------------------------
(ii) புறம்- 873; (iii) எறிதல்- ஒர் ஊரை முற்றி எடுத்பீல் - (Taking a fort by storm)
(iv) சிலப்புகாதை - 27, வரி - 197.
--------------


12-ம் பகுதி, வஞ்சி மகோதை வஞ்சைக்களமே.


"மேலும் கருவூர் என்ற பெயர் கொடுங்கோளூர் அல்லது திருவஞ்சைக் களத்துக்கு உள்ளதாகப் பிரமாணமொன்றுங் காணப்படாமையறிக" (i) என்று கட்டுகின்றார்கள். இல்லாமையாற்பெறுவதென்னை? இதனாலிக்கடற் கரையூர் பழைய வஞ்சியாகா தென்பது எப்படிக் கிடைக்கின்றது? 'கருவூர்' என்னும் பெயரே, இவர்கள் தம் புத்தக முதலதிகார முன்னுரையில், "சேரவசர் பெருமைகள்" பற்றிய தமதாராய்ச்சிக்குச் சிறந்த சாதனங்களாகக் கொண்டுள "சிலப்பதிகாரம், மணிமேகலை, பதிற்றுப் பத்து" ஆகிய மூன்று நூல்களுமறியாத தாகின்றது. திருவானிலையில் வஞ்சி பற்றிய குறிப்பொன்றுமில்லை யென்றிவர்களே கூறியுமிருக்கின்றார்கள். கருவூரானிலைக்கு வஞ்சியென்ற பெயரே தற்காலம் வழங்கவில்லையன்றோ? பல பிற சான்றுகளா லிம்மகோதை வஞ்சைக்களமே வஞ் சியிட மென்பது பெறுவேமேல், கருவூர் என்னும் பெயர் வழங்காமை கொண்டிதனை மறுக்கலாமோ? கருவூரானிலைக்கு வஞ்சிப்பெயர் வழங்காதிருக்கவும், வஞ்சிய நகரின் பிறபெயராய 'கருவூர்' என்பதும் ஆனிலைக் கருவூரும் ஓரோசை பெற்றிருப்பது கொண்டதை வஞ்சியென வாதிக்க முன்வந்தவர்கள், வஞ்சைக் களத்தை "வஞ்சியோடும் சம்பந்தமுடையதாகக் கருதற்குச் சிறிது மாதாரமின்கை காண்க" (ii) என்றறை கூவலென்னோ? திரு வஞ்சைக் களத்தின் அலைவாய்த்து றையான மகோதையே கொடுங்கோளுரென்பதை யிவர்கள் அங்கீகரிக் கின்றார்கள். (iii) ஆனால் மகோதையோடு வஞ்சித் துறை முகத்தையும், திருவஞ்சைகளத்தோடு வஞ்சிமுற்றத்தையு மொன்றாக்கிப்பாடிய சேக்கிழார் குறிப்பை வெறுக்கின்றார்கள்.
---------------
(i) பக்கம் 126; (ii)பக்கம் 126; (iii)பக்கம் 125.

"கடலங்கரை மேல் மகோதையணியார் பொழில் அஞ்சைக்களத்தப்பனே" என்ற சுந்தரர் தேவாரவடிகொண்டு, இவ்வூர் அஞ்சைக்களமென்றும், வஞ்சிப்பெயருக்கிது சம்பந்தமுடையதாகாதென்றும் துணிகின்றார்கள்.எல்லையற்ற தொல்லைப் புறநானூற்றுப் பாக்களிலும் சிலப்பதிகாரத்திலும் பழைய வஞ்சியிற் சேரவரசர்குடியிருந்த பகுதியை வஞ்சிமுற்றமென்றே குறிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இந்நகரத்தைப் பொதுவாகப் பேசுமிடத்தெல்லாம் வஞ்சிமூதூரென்றும், அரணுடைய அரசரக நகரை வஞ்சிமுற்றமென்றும் விதந்துகூறிய குறிப்பு மிகப்பொருளுடைத் தாம். பேராற்றின் கழிமுகம் கடற்பரப்போடொக்க மிகத்தாழ்ந்து அலிமுகமாயதால், அதையடுத்த மேட்டு நிலத்தே யரணிட்ட அரசன் குடிப்பாக்கமேற்பட்டும், அதுவே பிந்திக் கருவூரென வழங்கப்பட்டும் வந்திருப்பதை மேலே காட்டினே மன்றோ? இப்பகுதி பழைய நூல்களில் வஞ்சிமுற்றமென்றே சுட்டப்பட்டுள்ளது. "மலைகாண்குவமென, வஞ்சிமுற்ற நீங்கிச் செல்வோன்" (i)என்ற இளங்கோவடிகள் வாக்கும், வஞ்சியிலரசனரண்மனையிருந்த கருவூர்ப்பாக்கத்தை முற்றியவளவனை "வஞ்சிமுற்றம் வயக்களனாக, அஞ்சாமறவராட்போர் பழித்துக், கொண்டனைபெரும் குடபுலத்ததரி"(ii) என்றுபாடிய கோவூர் கிழார்வாக்குமே யிதற்குச் சிறந்த சான்றாம். பட்டினப்பாக்கமும் அரசன் குடிப்பாக்கமுங் கூடியது வஞ்சிமூதூர். பிற்காலத்தே பட்டினப்பாக்கம் மகோதையென்றும், அகநகராய கருவூர்ப்பாக்கம் வஞ்சி முற்றமென்றும் அழைக்கப்பெற்றன. இவ்வஞ்சி முற்றம் நாளடைவில் வஞ்சைக்களமாயிற்று.
----------------------------------------------------
(i)சிலப்பு காட்சிக்காதை வரி 7.
(ii)புறம் 373.

துவரை, மாந்தை, தஞ்சை, முகவை, நெல்லைதுறைசை, உறந்தை, சுரந்தை என்றூர்ப் பெயர்கள் தமிழகத்தே குறுகி ஐகாரமேற்று நடைபெறுமியல் பறியாதாரில்லை. வஞ்சியு மிம்முறையில் வஞ்சையாகவே, அதற்கேற்ப வஞ்சி முற்றம் வஞ்சைக் களமானது வெகு சுலபமன்றோ? பிற்காலத்திது தலங்களுள் வைத்தெண்ணப்படுங்கால் 'திரு' அடைபெற்று, திருவஞ்சைக்களமாயிருக்க வேண்டும். இதற்குப் பிற் காலத்தார், 'திரு' என்பது பசாரவடையாகவே, அதற் கடுத்த வகரம் உடன்படு மெய்யெனக்கருதி, அடையகற்றி, அஞ்சைக்களமாக்கினர் போலும், சரகத்தைச் சாகமெனக்கொண்டு மயங்கினவர்களும் பெரும்புலவர்களே யாதலால், திருவஞ்சைக்களம் திரு அஞ்சைக்கள மானதில் வியப்புத்தானென்ன? அன்றியும்; திருவஞ் சைக்களப்பதிகத்தில், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தாம்படும் மகோதைத்தள மூர்த்தியின் பெயரே சுட்டிப்பாடியிருப்ப தல்லால், அவ்வூர்ப் பெயரைச் சுட்டவில்லை என்பதும் வெளிப்படை. யாண்டு மிவ்வூர்க்கு அஞ்சைக் களமென்னும் பெயர் எடுத்தாளப் பட்டதாயுமில்லை. இஃதெவ் வாறாயினுமாறாக, மேற் கூறிவந்த பலவற்றானும் வஞ்சி மலைநாட்டுத் தலைநகராய், ஆந்பொருநையாகிய பேராற்றின் கழிமுகத்தமைந்த பேரூர் என்பது ஒருதலையாகப் பெறப்பட்டதாகலானும், அப்பேராற்றினலை வாய்ப்பட்டினமாகிய மகோதையென்ற கொடுங்கோளுரு மதையடுத்த ஐயங்காரவர்கள் 'அஞ்சைக்கள' மென்ற "திரு வஞ்சைக் களமும்" யவனர்கல நில நிறைக்க வளமிக மலிந்த கடற்கரை வஞ்சி நின்ற விடத்தே நிற்பவாகலானும்,இவையொன்றெனலியல் பேயாகும். ஆகவே, சேரர் சங்க காலப் பேரூர் பேராற்றின் மலைவாரத்தே கடலினின்றும் சுமார் 30-மைலுக்கப்பாலுள்ள திருக்கரூரு மன்று; காவிரியாம் பிராவதிக் கூட்டத்திற்கு மேற்கே புனல் நாட்டிலுள்ள சோழர் பழவூரான திருவானிலையு மாகாது: பண்டைத் தமிழ் வாணர் பலரும் பாராட்டிய மலைநாட்டுப் பேராற்றின் கழிமுகப்பட்டினமேயாம்; என்பது விசதமாகும்.

இறுதியில், ஆபுத்திர நாட்டிலிருந்து வஞ்சிக்கு வந்த மணிமேகலை செங்குன்றில் கண்ணகி கோயிலிலிறங்கித் தரிசித்துப் பிறகு வஞ்சி யுட்புக்கனள் என்னுங் கதை காட்டி, அதனால் வஞ்சி அம்மலையிலிருந்து நெடுந்தூரமிருக்க வேண்டுமெனத்தனக்கு வேண்டியபடியனுமித்துக் கொண்டு, அதனால் கருவூரானிலையே வஞ்சியாகுமென்று வாதிக்கின்றார்கள். மேலே 'கருவூர்' 'மகோதை' என்றிரு பாக்கங்கள் சேர்ந்த பேரூரே வஞ்சி யென்றும், அதை ஐயங்காரவர்கள் எடுத்தாளும் நக்கீரர்பாட்டே வலியுறுத்து மென்றுங்கூறி, அதன் சார்பாக அவ்வகப் பாட்டின் "கருவூர் முன்றுறைமணல்" என்னுந் தொடரை விளக்குங்கா லிச் செங்குன்று சம்பந்தமாகப் பழைய நூல்களிற் காணப்படுங் குறிப்புக்களே வஞ்சி கருவூ ரானிலையாகாதெனச் சுட்டு வதைக் காட்டியுள்ளேம். சாத்தனார், மணிமேகலை மணி பல்லவத்திலிருந்து புறப்படும் போதே "வஞ்சியுட்செல்வனென்றந்தரத் தெழுந்தனள் அணியிழைதா"(i) னென விதந்து கூறுகின்றார், ஆகவே, புறப்படுங்கால் மணிமேகலைக்குக் கண்ணகி கோயிலைக் காணுங்கருத்து முன்னின்றதாயில்லை. வஞ்சிநோக்கி வழிக்கொ"ண்டணியிழையந்தர -மாறாவெழுந்தவள்," (ii) இடையே வழியில் "கொடுங்கோளூருக்கயலதாய செங்குன்றின்" (iii) மேல்நின்ற தாய்கண்ணகி தாதைகோவல னிவர்கள் "கைவினை முற்றியதெய்வப் படிமம்" (iv) அமைந்த "கோட்டம்புகுந்து வணங்கி யேத்தி," பிறகுதான் நினைத்துவந்தபடி வஞ்சிக்குப்போக விடையேற்குங்கால், ஆங்குப்பத்தினிக்கடவுள் "இளையள் வளையோளென்றுனக்கியாவரும், விளைபொருளுரையார் வேற்றுருக்கொள்கென" ப்பணித்திட, அதன்படி "மாதவன் வடிவாய்" ப் "பொற்கொடிப்பெயர்படூஉம் பொன்னகர் பொலிந்தனள்" என்பதே சாத்தனார் கூறியுள்ள வஞ்சிக்கு மணிமேகலைவந்த வரலாறாம்.
-------------------------------------------------------
(i) மணி காதை 25, வரி 238,339
(ii) மணி காதை 26, வரி 1,5,6,68,69,71-92
(iii) சிலம்பு அடியார் உரைபக்கம் 18.

"கண்ணகிவிண்ணாடு சென்றதும்," "பத்தினித்தேவிக்குக் கோயிலெடுத்துச் சிறப்பித்த" இடமுமான இச் 'செங்குன்று,' மலை காண்குவமெனச் "செங்குட்டுவன் சென்றிருந்த பேரியாற்றங் கரைக்குச் சமீபத்தது" (v) என் றையங்காரவர்களுமிம் மலைச்சம்பந்தமாக அடியார்க்குநல்லார்கருத்தை மறுக் காது தழுவுகின்றார்கள். இவ்வாறு இம்மலை சேரர் பேராற்றங் கரையருகே மேற்குமலைத்தொடரையொட்டிக் கொடுங்கோளூருக்-கயலதாகலானும், மணிபல்லவம் காவிரிக் கழிமுகத்துப் புகார்பட்டினத்திற்குத் தெற்கேயமைந்திருந்த-தாகலானும், (vi) அக்கீழ்க்கடன்மணி பல்லவத்திருந்து வஞ்சிக்குவரும் மணிமேகலை, வஞ்சிகருவூரானிலை யாமாகில் நேரே கருவூருக்குச் செல்வதல்லால், வழி பிறழ்ந்து கருவூருக்கு 300-மைலுக்கு மேற்குள்ள செங் குன்றமலை வந்திறங்கக்காரணமில்லை. மணிமேகலை மணி பல்லவத்திலிருந்து முதலில் மேற்குவந் திம்மலைகண்டு மீட்டும் கிழக்கே வஞ்சிக்குவழி கொண்டதான கதையு மில்லை. முதலிலேயே கண்ணகியைக்கண்டு, பிறகு வஞ்சிக்குப் போவதான நினைப்பவளுக்கில்லை-யென்பதும், விசும்பாறாக வஞ்சி நோக்கிச் செல்பவள் கண்ணகி கோட்டமைந்த இச்செங்குன்றமலை இடைவழிப்படலா லங்குத்தங்கி வழிபட்டுப் பின்றன் வழிப்பட்டு வஞ்சியூர் வந்து புகுந்தனள் என்பதும் மேலேகாட்டியபடி சாத்தனார் பழைய நூலாற் பெறப்படுகின்றன. இதனால் செங்குன்றமலை மணிபல்லவத்திற்கும் வஞ்சிக்குமிடையே யிருக்கவேண்டுமென்பது தெளிவாகின்றது. அச்செங்குன்ற மலைக்கு அயலதாகச் சிறிது மேற்கே நிற்கும் கொடுங்கோளூரே யிவ்வஞ்சியாமாகில், மணிமேகலைக்குச் சாத்தனார் தந்து வைத்த வழிமுறை தெளிவாவதோடு, இக்கொடுங்கோளூரே பழைய வஞ்சியென்னும் அடிப்பட்ட பழவழக்கும் வலிபெறுகின்றது. இவை பலவும், இன்னவும் பிறவும், சேரர் பேரூரான வஞ்சிமூதூர் மலைநாட்டில், மேலக் கடற்கரையில், பேராற்றின் கழிமுகத்திலமைந்த பழம்பட்டினமேயன்றிப் பிறிதுண்ணாட்டூரெதுவு-மாகாதென்பதைப் பசுமரத்தாணிபோல் வலிபெற நாட்டி நிற்கும்.
------------------------------------------------------
(iv)சிலப்பு நடுகற்காதை வரி 228, கோட்டம்=கோயில்
(v) பக்கம் 134
(vi)மணிமேகலை 6,211, 213

முற்றும்.
--------

This file was last updated on 10 feb. 2013.
Feel free to send the corrections to the .